ஹனுமத் ஜயந்தி: கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் சிறப்பு வழிபாடு

சென்னை:
ஹனுமத் ஜயந்தியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோயில்களில் ஹனுமனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலில் ஹோமம், திருமஞ்சனம், சிறப்பு ராஜ அலங்காரம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்த விசேஷ தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வண்ணாரப்பேட்டை வடக்குப் புறவழிச்சாலையில் உள்ள பஞ்சமுக ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் லட்சுமி யாகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், மாலையில் புஷ்பாஞ்சலி, சிறப்புத் தீபாராதனையும் நடைபெற்றது.
சென்னை, நாமக்கல், ஸ்ரீரங்கம், உள்ளிட்ட பல்வேறு ஆஞ்சநேயர் கோயில்களிலும் இன்று அனுமனுக்கு வடைமாலை சாற்றுதல், வெற்றிலை மாலை சாற்றுதல், வெண்ணெய்க் காப்பு அலங்காரம் என கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அனுமனை வழிபட்டு வருகின்றனர்.