மக்கள் விரோத அதிமுக., திமுக.,வை எனக்குப் பிடிக்காது: விஜயகாந்த்

பெரம்பலூர்:

அதிமுகவை போலவே திமுகவையும் எனக்கு பிடிக்காது. காரணம் இவை இரண்டும் மக்கள் விரோத கட்சிகள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுக்குழுக் கூட்டத்தில் குற்றம் சாட்டிப் பேசினார்.

தேமுதிக 11-வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. அக் கட்சித் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோருடன் மாநில பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், மற்றும் கட்சியின் 21 எம்.எல்.ஏக்கள், 52 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என சுமார் 1,550 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பற்றி முடிவு எடுக்க தலைவர் விஜயகாந்துக்கு முழு அதிகாரத்தை அளித்து இந்தப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் தீர்மானங்களை கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ. வாசித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…

நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும்:

சமீப மழைவெள்ளத்தால் வீடு, உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு வழங்கும் நிவாரண உதவி மிகக்குறைவாக இருப்பதால் பொருட் களை இழந்தவர்களுக்கு தமிழக அரசே இலவசமாக பொருட் களை வழங்கவேண்டும். பாதிக் கப்பட்ட மாவட்டங்களில் வாட் வரியை ரத்து செய்யவேண்டும்.

திருவள்ளூர் முதல் தூத்துக்குடி வரை மழைவெள்ளத்தால் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு வெள்ளநிவாரணம் ரூ.13 ஆயிரத்து 500-ஐ அதிகரித்து வழங்கவேண்டும். விவசாய பயிர்களுக்கு பொதுகாப்பீட்டு திட்டத்தை மாற்றி தனிநபர் விவசாய காப்பீட்டு திட்டத்தை கொண்டுவர வேண்டும்.

பூரண மதுவிலக்கு:

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு நன்றி:

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்த தீர்வுகாண வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அதுகுறித்த உண்மைகளை, மக்களுக்கு வெளிப்படையாக அல்லது உயர்நீதிமன்ற அனுமதிபெற்று முழுவிவரங்களை வெளியிடவேண்டும். மேலும் தமிழகத்தில் மணல், கிரானைட், தாதுமணல் போன்ற கனிமவள கொள்ளைகள் குறித்து நேர்மையாக அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்திரவிட வேண்டும்.

மக்களின் வரிப்பணத்தில் அதிகவிலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்வதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

கரும்பு கொள்முதல் ஒரு டன்னுக்கு ரூ.3,500 விலை அறிவிக்க வேண்டும். நெல் ஒரு குவிண்டாலுக்கு வழங்கும் தொகை ரூ.1470-ஐ உயர்த்தி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் லஞ்சம் ஊழல் பெருகிவிட்ட நிலையில் அ.தி.மு.க.வை சார்ந்தவர்கள் அனைவரின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் லஞ்சம், ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

செம்பரம்பாக்கம் ஏரி உரியநேரத்தில் முறையாக திறக்கப்படாததால் சென்னையில் பெரும் வெள்ளசேதம் ஏற்பட்டதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

தமிழக அரசை கலைத்துவிட்டு ஆளுனர் ஆட்சியை ஏற்படுத்திய பிறகு தமிழக சட்டமன்ற தேர்தலை எந்த வித முறைகேடுகளும் இல்லாமல் நடத்திட வேண்டும்.

தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற இப்பொதுக்குழு ஏகமனதாக உறுதி ஏற்கிறது.

2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாட்டை அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். தமிழக வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும், ஏழை, எளிய நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எத்தகைய முடிவெடுத்திட தே.மு.தி.க. நிறுவனத்தலைவரும், கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்துக்கு முழுஅதிகாரத்தை அளித்து இப்பொதுக்குழு ஒருமனதாக தீர்மானிக்கிறது.

இவை உள்ளிட்ட 23 தீர்மானங்கள் இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, ராகுகாலம் முடிந்த பின்னர் 10.30 மணிக்கு மேல் விஜயகாந்த் அரங்குக்கு வந்தார். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள், அப்துல்கலாம், சசிபெருமாள், இப்ராஹிம் ராவுத்தர் உள்ளிட்டோருக்கு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் அதிமுகவை கடுமையாக தாக்கிப் பேசினார், தொடர்ந்து திமுகவையும் தாக்கிப் பேசினார். பாஜகவை கவனமாக தவிர்த்தார்.

மழை, வெள்ளம் என்று மக்கள் தத்தளித்த இடத்தில் போய் வாக்காளப் பெருமக்களே என்கிறார் ஜெயலலிதா. விதி எண்-110 அறிவிப்பில் எத்தனையோ திட்டங்களை அறிவித்த ஜெயலலிதா, அதில் கல்விக்கு, மருத்துவத்துக்கு என்று மக்களுக்கு உபயோகமாக எதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா? சினிமாவில் டூப் போடாமல் சண்டை போட்டவன் நான். சிறையில் அடைக்கப்பட்ட எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விடுதலை செய்யாதிருந்தால் இந்த பொதுக்குழு முடிந்த கையோடு நான் ஜெயலலிதா வீட்டின் முன்பாக போய் அமர்ந்திருப்பேன். என்னை கைது செய்வார்கள், அவ்வளவுதானே? என் தொண்டர்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன். அதிமுக ஆட்சியில் காவல்துறை செயல்பாடு மிக மோசமாக உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி என்பதெல்லாம் நடக்காத காரியம். ஆட்சி மட்டுமல்ல இந்த 5 ஆண்டுகளோடு அதிமுகவும் முடிந்தது. அதிமுகவை போலவே திமுகவையும் எனக்கு பிடிக்காது. காரணம் இவை மக்கள் விரோதக் கட்சிகள். சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை இங்கே தந்திருக்கிறீர்கள். அதன்படி நல்ல முடிவை இன்னொரு பொதுக்கூட்டத்தில் அறிவிப்பேன் என்று இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.