மக்கள் நலக் கூட்டணியை தமிழக மக்கள் ஆட்சியில் அமர வைப்பார்கள்: வைகோ

 
தமிழக மக்கள் மக்கள் நலக் கூட்டணியை ஆட்சியில் அமர வைப்பார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் இன்று நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ கலந்துகொண்ட பின்
வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது :-
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத ஒரு புதிய பரிமாணம் அரங்கேறி உள்ளது. தேர்தல் தொகுதி உடன்பாடு என்று இல்லாமல் முதல் முறையாக குறைந்தபட்ச செயல் திட்டத்தை வைத்து 6 மாதங்களுக்கு முன்பே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. இணைந்து மக்கள் நல கூட்டணியை அமைத்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி அரசு அமைய வேண்டும். அது ஊழல் இல்லாத அரசாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணி உருவாகி உள்ளது.
திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் ஊழல், அராஜக கட்சிகள் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர். நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்ருக்கிறது. திமுக 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிக்கொண்டுள்ளது.
இதனால், மக்கள் நலக் கூட்டணிக்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. எந்தக் கட்சியையும் சாராத 65 சதவீத மக்கள் எங்களை ஆதரிக்கத் தயாராக உள்ளனர். ஊழல் இல்லாத, மது இல்லாத அரசு, நேர்மையான அரசு அமைய வேண்டும் என்பதற்காக மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர்.
தமிழக மக்கள் எங்களை வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். மதுரையில் இம்மாதம் 26-ம் தேதி மக்கள் நலக் கூட்டணி சார்பில் திறந்தவெளி மாநாடு நடக்கிறது. அதில், கூட்டணிக் கட்சிகளின் அகில இந்திய தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, டி.ராஜா, மாநிலத் தலைவர் ஆர்.முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில், குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து விவாதித்து, தேவையான திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி இல்லை என ஆரம்பத்திலேயே அறிவித்துவிட்டுதான் மக்கள் நலக் கூட்டணியை அமைத்துள்ளோம். இவை இல்லாத, மற்ற 2 கட்சிகளுடன் கூட்டணி குறித்துப் பேசி வருகிறோம்
தி.மு.க..–அ.தி.மு.க.வும் மதுவினால் தமிழகத்தை நாசப்படுத்தி விட்டன. மதுபான ஆலைகளின் உரிமையாளர்கள் சசிகலாவின் உறவினர்களாகவும், தி.மு.க. பிரமுகர்களாகவும் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 65 சதவீதம் நடுநிலையாளர்கள் மக்கள் நல கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .