தமிழக அரசு மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் கைது

 
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரதாப்ராஜ் ஆகிய 2 பேர் கத்திக்குத்து காயங்களுடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களை அவசர சிகிச்சை பிரிவான 201–வது வார்டில் மருத்துவர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதாக கூறி அவர்களுடன் வந்தவர்கள் 4 பேர் தகாத வார்த்தையில் கடுமையாக பேசி மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டடு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் ஏராளமான முதுநிலை மருத்துவம் படிக்கும் மருத்துவர்கள், பாதுகாப்பு கோரி மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்ததால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அனைவரும் கடுமையாக அவதிப்பட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த சென்னை அரசு மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் விமலா போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தவர்களை காவல் துறையினர் கைது செய்வார்கள் என்று உறுதி மருத்துவர் விமலா அளித்ததின் பேரில் உள்ளிருப்பு போராட்டத்தை மருத்துவர்கள் விலக்கி பணிக்கு சென்றனர்.
இதை தொடர்ந்து காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து கொலை மிரட்டல் விடுத்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சபரி, சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களான இவர்கள் 2 பேர் மீதும் அநாகரீகமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், தமிழ்நாடு மருத்துவ பாதுகாப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் சக்திவேல், பிரதீப் ஆகிய 2 பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.