ஒரே ஷெட்யூலில் ரஜினி காட்சிகள்: கார்த்திக் சுப்புராஜ் திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டார்ஜிலிங்கில் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் ரஜினிகாந்த் டார்ஜிலிங் சென்றார்.

இந்த நிலையில் இந்த படத்திற்காக ரஜினிகாந்த் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், இந்த 40 நாட்கள் கால்ஷீட்டுக்காக அவருக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்த 40 நாட்கள் கால்ஷீட்டையும் ஒரே ஷெட்யூலில் முடிக்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளாராம். ரஜினிக்கு தற்போது நடிப்பு மட்டுமின்றி அரசியல் பணிகளும் இருப்பதால் அவரது காட்சிகளை மொத்தமாக முடித்துவிடும்படி கேட்டுக்கொண்டதால் இந்த முடிவு என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் பேராசிரியர் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் முதல்முறையாக ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது