ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரத்துக்கு சம்மன்
தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், 2006-ம் ஆண்டு, மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, நிதி மந்திரி பதவி வகித்தார். அப்போது, ஏர்செல் நிறுவனத்தில் குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனம் 800 மில்லியன் டாலர் (அப்போதைய மதிப்பில் சுமார் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக) முதலீடு செய்வதற்கு எப்.ஐ.பி.பி. என்னும் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளித்தது. இது விதிமுறையை மீறிய ஒப்புதல் ஆகும்.
ரூ.600 கோடி வரையிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டும்தான் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்க முடியும்.அதற்கு மேல் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழுதான் ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக முதலீடு செய்வதற்கு சட்டவிரோத அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஏர்செல்-மேக்சிஸ் உள்ளிட்ட 2 ‘ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணை சூடு பிடித்தது. இதில், ப.சிதம்பரத்தின் மீது அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் சந்தேகப்பார்வை விழுந்து உள்ளது. இதையடுத்து, சிதம்பரம் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். சிதம்பரத்தை கைது செய்ய அடுத்த மாதம் 10ம் தேதி வரை தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, அமலாக்கத்துறை சம்மனை அடுத்து ப.சிதம்பரம் நேற்று, விசாரணைக்காக ஆஜர் ஆனார். பல மணி நேரம், சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். ரூ.600 கோடி மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டும்தான் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளிக்கமுடியும் என்ற நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் மட்டும் எப்படி ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக வெளிநாட்டு முதலீடு அனுமதி வழங்கப்பட்டது, என்ன சூழ்நிலையில் இந்த அனுமதி தரப்பட்டது என்றும், மேலும் பல துணைக்கேள்விகளை எழுப்பியும் அவரிடம் பதில்களைப் பெற்று அதிகாரிகள் பதிவு செய்தனர்.
இந்த சூழலில், இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.