நண்பர்களே, பலவேளைகளில் நாம் நமது ஆற்றல்களுக்கும், நிறைவான பாரம்பரியத்துக்கும் அங்கீகாரம் அளிக்கத் தவறுகிறோம் என்பது மிகவும் துர்பாக்கியமான விஷயம்.
ஆனால், உலகின் பல்வேறு நாடுகள், ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளின்படி இதே விஷயத்தைக் கூறுகிறார்கள், நம்முடைய சூத்திரங்களைப் பின்பற்றி அவர்கள் சொல்லுகிறார்கள் எனும் போது நாம் அங்கீகரிக்கிறோம். பல நூற்றாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்தோம் என்பது ஒருவேளை இப்படிப்பட்ட மனோநிலைக்குக் காரணமாக இருக்கலாம்.
இதன் காரணமாக சில வேளைகளில் நம்முடைய ஆற்றல்கள் மீதுகூட நமக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது, நமது தன்னம்பிக்கையில் குறைவு தென்படுகிறது. ஆகையால், நமது நாடு பற்றிய நல்ல விஷயங்களை, நமது பாரம்பரியமான கோட்பாடுகளை, சான்றுகளை அடிப்படையாகக்கொண்ட ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றை முன்னெடுத்துப் போவதற்கு பதிலாக அவற்றைக் கைவிட்டு விடுகிறோம், கேவலமானவையாகக் கருதுகிறோம்.
இந்தியாவின் இளைய தலைமுறையினர், இப்போது இந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, உலகம் யோகக்கலையை ஏற்றுக் கொண்டிருப்பதைப் போல, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஆயுர்வேதத்தின் கோட்பாடுகளையுமேகூட உலகம் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும்.
ஆம், இதற்காக இளைய சமுதாயத்தினர் ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்; உலகம் எந்த மொழியில் சொன்னால் புரிந்து கொள்ளுமோ, அதே விஞ்ஞான மொழியில் நாம் புரிய வைக்க வேண்டும், இதை நாம் சாதித்துக் காட்ட வேண்டும்.
நண்பர்களே, கோவிட் – 19 காரணமாக நாம் பணியாற்றும் வழிமுறைகள், நமது வாழ்க்கைமுறை, நமது பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் இயல்பான வகையிலே பல ஆக்கப்பூர்வமான மாற்றங்களை நாம் கண்டு வருகிறோம். பல விஷயங்களில், நமது புரிதலையும், விழிப்புணர்வையும் இந்தச் சங்கடமான வேளையானது தட்டி எழுப்பி இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்திருப்பீர்கள்.
நம் அனைவரின் அருகிலும் காணப்படும் ஒரு தாக்கம் எனும் போது, முகக்கவசம் அணிதல், நமது முகங்களை மூடி வைத்தல் ஆகியனவற்றைச் சொல்லலாம். கொரோனா காரணமாக, மாறிவரும் சூழ்நிலையில், முகக்கவசமும் கூட, நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி விட்டது. முகக்கவசம் அணிவதாலேயே ஒருவருக்கு நோய் இருக்கிறது என்பது பொருளல்ல.
இப்போது நான் முகக்கவசம் பற்றிப் பேசும் போது, எனக்கு பழைய ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. இது உங்களுக்குமேகூட நினைவுக்கு வரலாம். ஒரு காலத்தில், நம்முடைய நாட்டிலே, யாராவது ஒருவர் பழம் வாங்குவதைப் பார்த்தோம் என்றால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அவரிடத்தில் கண்டிப்பாக ஒரு வினாவை எழுப்புவார்கள் – என்ன உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லையா என்பது தான் அது. அதாவது பழம் வாங்குதல் என்று சொன்னால், நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே உண்பார்கள் என்று கொள்ளப்படும்.
இப்படிப்பட்ட ஒரு கருத்து நிலவிய காலம் உண்டு. காலம் மாறியது, காட்சியும் மாறியது. இதைப் போலவே தான் இன்று இந்த முகக்கவசம் தொடர்பாகவும் கருத்து மாற இருக்கிறது. பாருங்களேன், முகக்கவசம் என்பது இப்போது பண்பட்ட சமூகத்தின் அடையாளமாக மாறி விடும்.
நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும், மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால், நீங்கள் கண்டிப்பாக முகக்கவசத்தை அணிய வேண்டும். என்னுடைய எளிமையான ஆலோசனை என்ன தெரியுமா? தோளில் கிடக்கும் துண்டைக் கொண்டு முகத்தை மூடுங்கள், சரியா?
பிரதமர் மோடியின் மனதின் குரல்…11ஆவது பகுதியில் இருந்து…
ஒலிபரப்பு நாள்: 26.04.2020
தமிழாக்கம் , குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்