நண்பர்களே, இயற்கை, பிறழ்வு, கலச்சாரம் என்ற இந்த மூன்று சொற்களையும் ஒருசேரப் பார்த்தால் , இவற்றின் பின்னணியில் இருக்கும் உணர்வு, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள ஒரு புதிய கதவைத் திறக்கும். மனித இயல்பு பற்றி நாம் சிந்திக்கும் போது, ‘இது என்னுடையது’, ’இதை நான் பயன்படுத்துகிறேன்’ – இந்த உணர்வு மிகவும் இயல்பானதாகக் கருதப்படுகிறது. யாருக்கும் இதிலே எந்தவிதமானதொரு ஆட்சேபமும் இருப்பதில்லை.
ஆனால் ‘எது என்னுடையது இல்லையோ’, ‘எதன் மீது எனக்கு எந்த உரிமையும் இல்லையோ’, அதை நான் மற்றவர்களிடமிருந்து பறிக்கிறேன், பறித்துப் பயன்படுத்துகிறேன் எனும் போது, இதைப் ‘பிறழ்வு’ என்று அழைக்கிறோம்.
இவை இரண்டையும் தாண்டி, இயற்கை, பிறழ்வு ஆகியவற்றிலிருந்து மேலெழும்பி, பக்குவப்பட்ட மனக்கண் கொண்டு பார்க்கும் போதும், செயல்படும் போதும், அங்கே ”கலாச்சாரம்” புலப்படும். யாராவது தங்களது உரிமைப் பொருட்களை, தங்கள் உழைப்பின் ஊதியத்தை, தங்களுக்கு அத்தியாவசியமாக இருப்பவனவற்றை – அது கூடுதலாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, அதைப் பற்றியோ, தங்களைப் பற்றியோ கவலை கொள்ளாமல், பிறரின் தேவைகருதி, தங்களுக்கு உரித்தானதைப் பிறருக்கு அளித்து அவர்களின் தேவையை நிறைவு செய்வது தான் ‘கலாச்சாரம்’. நண்பர்களே, சோதித்துப் பார்க்கும் காலம் இது, இப்போது தான் இந்த குணங்கள் உரைத்துப் பார்க்கப்படும்.
கடந்த நாட்களில் நீங்களே கவனித்திருக்கலாம், அதாவது இந்தியா தனது கலாச்சாரத்தை ஒட்டி, நமது எண்ணங்களுக்கு ஏற்ப, நமது கலாச்சாரத்தைப் பின்பற்றி சில முடிவுகளை மேற்கொண்டோம். சங்கடம் நிறைந்த இந்தக் காலகட்டத்தில், வளர்ந்த நாடுகள் உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் மருந்துகளின் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் இந்தியா உலக நாடுகளுக்கு மருந்துகளை அளிக்க மறுத்தால் யாரும் நம்மைக் குறைகூறப் போவதில்லை.
இந்தியாவுக்கு அதன் குடிமக்கள் தாம் முதன்மை என்பதை அனைத்து நாடுகளும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நண்பர்களே, இந்தியா, இயற்கை, பிறழ்வு ஆகியவற்றைத் தாண்டி தீர்மானம் மேற்கொண்டிருக்கிறது. இந்தியாவானது தனது கலாச்சாரத்துக்கு ஏற்றவகையில் முடிவெடுத்திருக்கிறது.
நாம் இந்தியாவின் தேவைகளின் பொருட்டு என்ன செய்ய வேண்டுமோ, அது தொடர்பான முயற்சிகளையும் அதிகப்படுத்தியிருப்பதோடு, உலக மனித சமுதாயத்தின் பாதுகாப்புக்கோரும் குரலுக்கு செவிசாய்த்து, அவர்களின் தேவையையும் நிறைவேற்றி வருகிறோம். உலகின் தேவையானவர்கள் அனைவருக்கும் மருந்துகளைக் கொண்டு சேர்க்கும் சவாலை நாம் மேற்கொண்டிருக்கிறோம், மனிதநேயத்துடன் இந்தப் பணியை நாம் நிறைவேற்றி வருகிறோம்.
பல நாடுகளின் தலைவர்களோடு நான் பேசும் வேளையில் அவர்கள் அனைவருமே இந்திய மக்களுக்குத் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். ‘இந்தியாவுக்கு நன்றி, இந்திய மக்களுக்கு நன்றி’ என்று அவ்ர்கள் கூறும்போது, நாட்டின் பெருமை அதிகரிக்கிறது.
இதைப் போலவே, இப்போது உலகம் முழுவதிலும் இந்தியாவின் ஆயுர்வேதம் மற்றும் யோகக்கலையின் மகத்துவம் பற்றி மிகவும் சிறப்பான வகையிலே பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். சமூக ஊடகங்களைப் பாருங்கள், அனைத்து வகையிலும் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க, எப்படியெல்லாம் இந்தியாவின் ஆயுர்வேதமும், யோகக்கலையும் அளிக்கும் ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம், நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்க அளித்திருக்கும் நெறிமுறைகளை நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்றி வருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். வெந்நீர், கஷாயம் ஆகியவற்றைக் குடித்தல், இன்னும் பிற நெறிமுறைகளைப் பின்பற்றுதல் போன்றவற்றை ஆயுஷ் அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இவற்றை நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தீர்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.
பிரதமர் மோடியின் மனதின் குரல்…11ஆவது பகுதியில் இருந்து…
ஒலிபரப்பு நாள்: 26.04.2020
தமிழாக்கம் , குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்