எனதருமை நாட்டுமக்களே, இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போரிலே நாம் பங்கெடுக்கும் இந்த காலகட்டம், நமது வாழ்க்கை, நமது சமூகம், நம்மைச் சுற்றி நடைபெற்றுவரும் சம்பவங்கள் ஆகியவற்றை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் சந்தர்ப்பத்தை நமக்கு அளித்திருக்கிறது.
சமூகத்தின் பார்வையுமே கூட பரந்தவகையிலே மாற்றம் கண்டிருக்கிறது. நமது வாழ்க்கையோடு தொடர்புடைய ஒவ்வொரு மனிதனின் முக்கியத்துவத்தையும் நாம் இன்று உணர்கிறோம்.
நமது வீடுகளில் பணிபுரிபவர்கள் ஆகட்டும், நமது தேவைகளை நிறைவு செய்ய பணியாற்றும் எளிய தொழிலாளியாகட்டும், அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைகளில் பணிபுரிவோர் ஆகட்டும், இவர்கள் அனைவரின் மிகப்பெரிய பங்களிப்பை நாம் நேரடியாக அனுபவிக்க நேர்ந்திருக்கிறது.
இதைப் போலவே, அவசியமான சேவைகளைக் கொண்டு சேர்ப்பவர்கள், சந்தைகளில் பணிபுரியும் நமது தொழிலாள சகோதர சகோதரிகள், நமது அண்டைப்புறங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள் போன்றவர்கள் இல்லாது போனால் நமது அன்றாட வாழ்வு எத்தனை கடினமானதாக இருக்கும் என்பதை நாம் இன்று அனுபவித்து வருகிறோம், இல்லையா?
சமூக ஊரடங்கு இருக்கும் இந்த காலத்திலே மக்கள் தங்களுடைய இந்த நண்பர்களை நினைவுபடுத்திக் கொள்கிறார்கள், அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள், அவர்களைப் பற்றி மிகுந்த கண்ணியத்தோடு சமூக ஊடகங்களில் எழுதியும் வருகிறார்கள் என்று நாம் பார்க்கிறோம். துப்புரவுப் பணியாளர்கள் மீது நாட்டின் பல இடங்களில் மக்கள் பூச்சொரியும் படங்களை நாம் பார்க்க நேர்கிறது.
முன்பெல்லாம் அவர்களின் சேவையை பெரும்பாலும் யாரும் ஒரு பொருட்டாகவே கருதியிருக்க மாட்டார்கள். மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அல்லது வேறு சேவைகளில் ஈடுபடுபவர்கள், காவல்துறை நண்பர்கள் போன்றோரைப் பற்றிய பொதுமக்களின் கண்ணோட்டம் கணிசமான அளவுக்கு மாறியிருக்கிறது.
நமது காவல்துறையினர் இன்று ஏழைகள், தேவையால் வாடுபவர்கள் ஆகியோருக்கு உணவும் மருந்தும் கொண்டு சேர்த்து வருகிறார்கள். எந்த வகையில் இந்தச் செயல்பாடுகள் காவல்துறையினரின் மனிதநேயத்தையும், மனித உணர்வையும் வெளிப்படுத்துகிறதோ, அதே அளவு நமது மனதில் நெகிழ்வையும், நிறைவையும் ஏற்படுத்துகிறது. பொதுமக்கள் காவல்துறையினரோடு உணர்வுரீதியிலான ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இது ஒரு அருமையான சந்தர்ப்பமாக அமைந்திருக்கிறது.
நமது காவல்துறையினரும் பொதுமக்களுக்கு சேவைபுரிய கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பாகவே இதைக் கருதுகிறார்கள். இந்தச் சம்பவங்கள் அனைத்தின் வாயிலாக, இனிவரும் காலத்தில் உண்மையிலேயே மிகவும் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்படலாம், இந்த ஆக்கப்பூர்வமான உணர்வை என்றுமே நாம் எதிர்மறை உணர்வாக ஆகவிட மாட்டோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பிரதமர் மோடியின் மனதின் குரல்…11ஆவது பகுதியில் இருந்து…
ஒலிபரப்பு நாள்: 26.04.2020
தமிழாக்கம் , குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்