
நண்பர்களே, நாடு ஓரணியாகப் பணியாற்றி வரும் வேளையிலே, என்னவெல்லாம் நடக்கும் என்பதை நாம் நிதர்சனமாக அனுபவித்து வருகிறோம். மத்திய அரசாகட்டும், மாநில அரசுகளாகட்டும், இவர்களின் அனைத்துத் துறைகளும், அமைப்புக்களும் நிவாரணப் பணிகளில் இணைந்து, முழுமூச்சுடன் வேலை செய்து வருகிறார்கள்.
நாட்டு மக்களுக்கு பிரச்சனைகள் அதிகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, நமது விமானப் போக்குவரத்துத் துறையில் பணிபுரிவோர், ரயில்வே பணியாளர்கள் ஆகியோர், இரவுபகலாக அயராது உழைத்து வருகிறார்கள். நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் மருந்துகள் கொண்டு சேர்க்கப்பட Lifeline Udan – உயிர்காக்கும் உடான் என்ற பெயரில், சிறப்பான ஒரு இயக்கம் நடைபெற்று வருகிறது என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இதோடு தொடர்புடைய நம்முடைய நண்பர்கள், மிகக்குறைவான நேரத்தில், நாட்டுக்குள்ளே 3 இலட்சம் கிலோமீட்டர்கள் விமானப் பயணம் மேற்கொண்டு, 500 டன்களுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்களை, நாட்டின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.
இதைப் போலவே ரயில்வேயில் பணிபுரியும் நமது நண்பர்களும், இந்தப் பொது ஊரடங்கு நிலவும் காலகட்டத்திலும்கூட, நாட்டுமக்களுக்கு எந்தவொரு அத்தியாவசியமான பொருளும் கிடைக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறார்கள். இந்தப் பணிக்காகவே இந்திய ரயில்வே சுமார் 60க்கும் மேற்பட்ட ரயில் வழித்தடங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களை இயக்கி வருகிறது. இதைப் போலவே மருந்துகளின் தேவையை நிறைவு செய்வதில், நமது தபால்துறை ஊழியர்களின் பங்களிப்பும் மகத்தானது. நமது இந்த நண்பர்கள் அனைவருமே, உண்மையிலேயே, கொரோனா போராளிகள் தாம்.
நண்பர்களே, பிரதம மந்திரி ஏழைகள் நலத் தொகுப்புக்கு உட்பட்டு, ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. முதியோர் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. ஏழைகளுக்கு 3 மாதக்கால இலவச எரிவாயு சிலிண்டர், ரேஷன் பொருட்கள் வழங்கல் ஆகிய வசதிகள் அளிக்கப்படுகிறது. இந்த அனைத்துப் பணிகளிலும் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வங்கிப் பணியாளர்கள் என அனைவரும் ஓரணியாகத் திரண்டு, இரவு பகல் பாராமல் பங்களித்து வருகிறார்கள்.
மேலும், இந்தப் பெருந்தொற்றோடு நாம் நடத்திவரும் போராட்டத்தில், ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்து வரும் நமது நாட்டின் மாநில அரசுகளையும் நான் முழுமனதோடு பாராட்டுகிறேன். உள்ளாட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் ஆகியன பொறுப்புணர்வோடு ஆற்றிவரும் கடமைகள், அவர்களின் உழைப்பு ஆகியன மிகவும் பாராட்டுக்குரியவை.
என் கனிவான நாட்டுமக்களே, நாடு முழுவதிலும் சுகாதார சேவைகளை ஆற்றி வருபவர்கள் தொடர்பாக அறிவித்திருக்கும் அவசரச்சட்டம் அவர்களுக்கு மிகவும் மன நிறைவை அளித்திருக்கிறது, அவர்கள் இதை வரவேற்கிறார்கள். இந்த அவசரச்சட்டப்படி, கொரோனா வீரர்களுக்கு எதிராகப் புரியப்படும் வன்முறை, கொடுமை அல்லது ஏதாவது ஒருவகையில் அவர்களைத் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக, மிகவும் கடுமையான தண்டனை அளிக்கப்படக்கூடிய ஷரத்துக்கள் இருக்கின்றன.
நமது மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், சமூக சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்கள், இந்த நாட்டைக் கொரோனாவிடமிருந்து விடுவிக்கும் போராட்டத்தில் இரவு பகலாக போராடி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானதாக ஆகியிருக்கிறது.
பிரதமர் மோடியின் மனதின் குரல்…11ஆவது பகுதியில் இருந்து…
ஒலிபரப்பு நாள்: 26.04.2020
தமிழாக்கம் , குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்