
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
சனாதன தர்மத்தில் நூல்களின் செழிப்பு அதிகம். மிகப் பெரிய அறிவுப் பெட்டகம் நமக்குள்ளது. முனிவர்கள் தம் தவ வலிமையால் கேட்டுணர்ந்த, ஆழ்ந்த, நுட்பமான மறை பொருளைக் கொண்ட கம்பீரமான வேத மந்திரங்களின் குவியல் அது. அடிப்படை அறிவின் சாராம்சம். அவை சாட்சாத் சப்த வடிவான இறைவன். ஒலி வடிவில் வெளிப்பட்ட இறைசக்தி. அவற்றின் பொருளை உலகியல் மொழியறிவு கொண்டோ, சமுதாயக் கோணத்திலோ முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது. சமுதாயத்திற்கும், சாமானியரின் பார்வைக்கும் அப்பாற்பட்ட விஸ்வ ரகசியங்கள் பல அவற்றில் பொதிந்துள்ளன. அவற்றை மீண்டும் முனிவர்களே நமக்கு அளிக்க வேண்டும். அதனால்தான் புராணம், இதிகாசம், தர்ம சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், தந்திர சாஸ்திரம் என்று பல வகைகளில் அவை தவ முனிவர்களின் வாயிலாகவே உலகிற்கு வெளிப்பட்டன.
அவற்றில் சில விஷயங்கள் நவீன காலத்திற்குப் பொருத்தமற்றவை என்றும், சமூகத்தில் பகைமையை வளர்ப்பவை என்றும், எவ்விதப் பொருளுமற்றவை என்றும் அவற்றை வக்கிரப் பார்வையோடு பார்த்து வாதிட்டவர் உள்ளனர். அதுமட்டுமின்றி, இவற்றின் மேல் மதிப்பு கொண்டவர்களிடம் கூட அவற்றின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கும் மனப்போக்கு காணப்படுகிறது. இவை உண்மைதானா என்று ஐயுறுவதாகத் தோன்றுகிறது. அதனால் புராணங்கள், தர்ம சாத்திரங்கள் போன்றவை ஆதாரமற்றவை என்றும், பிற்காலத்தில் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டவை என்றும் முத்திரை குத்தும் கூற்றுகளையும் நாம் எதிர்கொள்ள நேர்கிறது. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்குக் கட்டுப்பட்ட சிலர், தம் விருப்பத்திற்கு இணங்காத எதையும் பயனற்றது என்றும் ஆதாரமற்றது என்றும் வகைப்படுத்துகின்றனர். ஒத்திசைவு இன்மையாலும், ஆழமான உட்கருத்துகளை உள்வாங்க இயலாமல் போவதாலும், தாம் உருவாக்கிக் கொண்ட இறுக்கமான கட்டமைப்பிலிருந்து வெளியில் வரத் தயங்கும் மனப்பான்மையாலும் உருவான கருத்துகளே இவை.
இக்காரணத்தாலேயே நம் தர்ம நூல்களை ஏளனம் செய்வதற்கு, தம்மைத் தாமே அறிவுஜீவிகள் என்று அறிவித்துக் கொள்ளும் சிலர் சமுதாயத்தில் உலவுகின்றனர். ஆனால் முனிவர்கள் எழுதிய தொன்மையான நூல்களின் உள்ளடக்கங்களை ஆராய்வதற்கு, அவை இயற்றப்பட்ட காலத்தில் வழக்கத்திலிருந்த கலைச்சொற்களையும் மருபு சார்ந்த மொழி பற்றிய புரிதலையும் கொண்டிருப்பது இன்றியமையாதது. ஒரு சொல் உணர்த்தக் கூடிய பன்முகப் பொருள்களை இனங்கண்டு அறியும் திறன் வேண்டும்.
எடுத்துக்காட்டாக, “இந்திரன் (கோ) பசுக்களால் பாறையைத் தாக்கினான்” என்ற மத்திரத்திற்கு, “வேதத்தில் பசுக் கொலை உள்ளது” என்று பொருள் கூறியவர்கள் உள்ளனர். ஆனால் ‘கோ’ என்ற சொல்லுக்கு ‘ஒளிக்கதிர்’ என்று ‘வேத நிருக்தம்’ கூறும் பொருளும் உண்டு. சூரியனுக்கும் இந்திரன் என்ற பெயர் உண்டு. சூரியனின் ஒளிக்கதிர்களின் வலிமையால் பாறை சிதறும் நிகழ்வை விவரிக்கும் மந்திரத்திற்குப் புரிதல் இன்மையால், பசுவதை என்று பொருள் கூறுவது பெரும் பிழை அல்லவா?
ஆகவே, சாதாரண மத நூலாக வேதங்களைப் பார்க்கக் கூடாது. அதேபோல் தெய்வங்களைக் குறித்த சில கதைகள் குறியீட்டு மொழியிலும், வேத மொழியிலும் கூறப்பட்டுள்ளன. இப்பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்த மாற்றங்களைச் சித்திரிக்கும் பலவகைக் குறியீட்டுக் கதைகள் உள்ளன. வானியல் அறிவியலின் கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது இவற்றின் உண்மையான உட்பொருள் தெளிவாகப் புரியும்.
இது வெறும் சமூக அம்சங்களை மட்டும் உற்று நோக்கும் விஷயம் அல்ல. ஜோதிட விஞ்ஞானம், யோக விஞ்ஞானம், தத்துவ விஞ்ஞானம், மந்திர விஞ்ஞானம், யக்ஞ விஞ்ஞானம், மருத்துவக் கல்வி, உடற்கூறியல், வேதங்களின் பொருளை உணர்ததும் விஞ்ஞானம் போன்ற பல்வேறு துறைகள் கதைகளாகவும் போதனைகளாகவும், கவிதை வடிவிலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாகப் புரிந்து கொள்ளும் போது, அவற்றில் மறைத்துள்ள உட்பொருள் பற்றிய தெளிவு மேலும் அதிகமாகும்.
அதனால்தான், சிக்ஷா (உச்சரிப்பு, ஒலியியல்), வியாகரணம் (இலக்கணம்), சந்தஸ் (யாப்பு), நிருக்தம் (சொற்பிறப்பியல்), ஜோதிடம் (வானியல், ஜோதிடம்), கல்பம் (சடங்குகள்) என்ற ஆறு (வேதங்களின் துணை நூல்கள்) வேதாங்க சாஸ்திரங்களில் பயிற்சி பெற்றவர்கள் வேதங்களின் பொருளை உண்மையாக அறிவார்கள் என்று சம்பிரதாய அறிஞர்கள் கூறுவர்.
சிலர் வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே போதும் என்பார்கள். ஆனால் அவை ஒன்றுக்கொன்று துணையாக சனாதன தர்மமாக, நித்திய நூதனமாக பல யுகங்களாகத் தொடர்ந்து இருந்து வருகிறன்றன.
மனிதர்களின் உயிரியல் பண்புகள், விருப்பங்கள், உடல் நிலைகள், உள்ளத்தின் எண்ணங்கள், உணர்வுகள் போன்றவை ஒன்று போல் இருக்காது. இக்காரணத்தால் பல்வேறு இயல்புள்ளவர்களுக்கு ஏற்ப தனித்துவமான ஆன்மீகப் பாதைகளை முனிவர்களின் நூல்களான ஞான இலக்கியங்கள் வழங்கியுள்ளன.
தந்திர நூல்களின் அற்புதங்கள், யோக சாஸ்திரங்களில் ஹட யோகம், லய யோகம், நாத யோகம், ராஜ யோகம், மந்திர யோகம் என்று பலவேறு பிரிவுகள், ஸ்வரம் (இசை ஒலி) , பிரச்னம் (கேள்வி ஜோதிடம்), ஜோதிஷம் (வானியல் ஜோதிடம்) போன்ற அறிவியல்கள், அறநெறி ஒழுக்கத்தை போதிக்கும் நூலகள், தனிமனித ஆளுமையை மலரச் செய்யும் அறிவுரைகள் போன்றவை அவற்றில் ஏராளமாக உள்ளன. எண்ணற்ற கவிஞர்களும், உரையாசிரியர்களும், அறிஞர்களும் அவற்றை மேலும் செழுமையாக்கி விரிவுபடுத்தினர்.
எந்த நிலையில் இருப்பவரானாலும் அவரவருக்குப் பிடித்த வகையில் ஆன்மீக சாதனை செய்து, பக்குவத்தை அடையும் பலவேறு பாதைகளை நம் முன்னோர் அளித்துள்ளனர். அவற்றைக் கடைப்பிடித்து உய்வடைந்தவர் மிகப்பலர் உள்ளனர்.
“இத்தனை உயர்ந்த ஆன்மீக நிலைத் தத்துவத்தை போதிக்கும் நீங்கள் ஹிந்து மதத்தில் இருக்கும் அற்பமான விக்ரக வழிபாட்டை எவ்வாறு நியாயப்படுத்துகிறீர்கள்?” என்று சிலர் சுவாமி விவேகானந்தரைக் கேட்டபோது, அவர் “எந்த வழிமுறையைப் பற்றிப் பேசினாலும் அந்தப் பாதையைப் பின்பற்றுபவரின் தரத்தையும் பார்க்க வேண்டும். நீங்கள் அற்பம் என்று புறக்கணிக்கும் விக்ரக வழிபாட்டு முறையில் எண்ணற்ற பக்தர்களின் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்திய தத்துவ ஞானிகள் உள்ளனர். அந்த வகையில் அந்த பாதையும் உயர்ந்ததே” என்றார்.
விக்ரகங்களின் வடிவமைப்பு, அளவுகள், பூஜை விதிமுறைகள் இவையனைத்தும் சிறந்த நுட்பமான அறிவியல் சாத்திரங்களாக விரிந்துள்ளன. அவற்றை ஆராயாமல் வெறும் மேலெழுந்தவாரியாகப் பார்த்து விமர்சிப்பது சரியல்ல.
அதனால் சம்பிரதாயமாக வரும் நம் முனிவர்கள் அளித்த ஞானத்தை, எண்ணற்ற மகான்களால் போற்றப்பட்ட கருத்துகளை அவசரப்பட்டு புறக்கணிப்பதோ தவறுதலாக விமர்சிப்பதோ சரியல்ல. நம் அனைத்து பாரம்பரிய வழிமுறைகளும் உயர்ந்தவையே. ஒரு குறிப்பிட்ட பாதைக்குக் கட்டுப்பட்டு பின்பற்றி மகிழ்வதும் நல்லதே. ஆனால் மீதியிருப்பவற்றை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதோ இழிவுபடுத்துவதோ பொருந்தாது. ஒரு தவளைக்குத் தன் கிணற்றின் ஆழம் மட்டுமே தெரியும்.
இன்னொரு முக்கியமான விஷயம். ஒருவர் தனக்குத் தற்போது ஏற்புடையதல்ல என்று தோன்றிய கருத்தையோ, வழிமுறையையோ கடைபிடிக்காமல் ஒதுக்கி வைக்க நினைக்கலாம். நம் தொன்மையான நூல்களில் முக்காலத்திற்கும் பொருத்தமான நன்மை பயக்கும் விஷயங்களும் கருத்துகளும் ஏராளம் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ளலாம். எந்தக் காலத்திற்கும் எந்த மனிதருக்கும் பயன்படும் நல்ல கருத்துகள் செழுமையாக நம் நூல்களில் உள்ளன. காலத்திற்கேற்ப அப்போதைக்கப்போது மனித இனத்தைத் தொடர்ந்து வழிநடத்தும் மாபெரும் இலக்கியக் களஞ்சியமும், பாரம்பரிய ஒழுக்க விதிகளும் உறுதியாக நிலைத்து நின்கின்றன.
நமக்கு பிடிக்காதவற்றை நிராகரித்தாலும், பிடித்தவை பல எஞ்சியிருக்கும். மொத்தத்தில் அபாரமான இலக்கியச் செல்வத்தில் அத்தனை விதமான பயன்களையும் அற்புதமாக நிறைவேற்றும் காலத்தால் அழியாத கருத்துகள் பல உள்ளன. அவற்றை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். திறந்த மனத்தோடு, கபடமின்றி, நேர்மையாக அவற்றை ஆராய வேண்டும். அழகாக கருத்தொருமை காண வேண்டும். அதன் மூலம் வாழ்வின் முழுமையை சாதிக்க வேண்டும்.
(Source: தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், ஏப்ரல் 2026)



