வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

manadhinkural - 2026
#image_title

‘மனதின் குரல் (132ஆவது பகுதி)’
ஒலிபரப்பு நாள் : 29.03.2026
தமிழில் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

வளைகுடா நாடுகளுக்கு நன்றி

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.  கடந்த காலத்தில் உலகம் முழுவதும் கோவிட் பெருந்தொற்று காரணமாக நீண்ட காலகட்டத்திற்கு பிரச்சினைகளை சந்தித்து வந்தது என்பது நம் நினைவினில் இன்னும் இருக்கிறது.  கொரோனா பெருந்தொற்று என்ற சங்கடத்தை நாம் கடந்துவந்த பிறகு உலகம் புதிய முறையிலே வளர்ச்சிப் பாதையிலே முன்னேறிச் செல்லும் என்பது நம்மனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.  ஆனால், உலகின் பல்வேறு பாகங்களில் தொடர்ந்து போரும், பிணக்குமான சூழ்நிலைகள் நிலவி வருகின்றன.  தற்போது நமது அண்டைப்புறத்திலே ஒரு மாதக்காலமாகவே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.  நமது இலட்சக்கணக்கான குடும்பங்களின் நெருங்கிய உறவுகள் இந்த நாடுகளில் வசிக்கின்றார்கள், குறிப்பாக பாரசீக வளைகுடா நாடுகளிலே பணியாற்றி வருகின்றார்கள்.  அங்கே இருக்கின்ற ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்துவரும் அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 

பாரதம் உறுதியுடன் எதிர்கொள்கிறது

நண்பர்களே, இப்போது போர் நடைபெற்றுவரும் பகுதி, நமது எரிசக்தித் தேவைகளை நிறைவு செய்துவரும் பெரிய மையமாகும்.  இதன் காரணமாக உலகெங்கிலும் பெட்ரோல்-டீசல் தொடர்பாக சங்கடமான சூழ்நிலை நிலவி வருகிறது.  நமது உலகளாவிய தொடர்புகள், பல்வேறு நாடுகள் நமக்கு அளித்துவரும் உதவிகள் மற்றும் கடந்த பத்தாண்டிலே நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கும் வல்லமை ஆகியவற்றின் காரணமாக பாரதம் இந்தச் சூழ்நிலைகளை உறுதியோடு எதிர்கொண்டு வருகின்றது. 

புரளிகளை நம்பாதீர்கள்

நண்பர்களே, கண்டிப்பாக இது சவாலான காலகட்டம் தான் என்பதில் ஐயமில்லை.  நாமனைவரும் ஒன்றாய் இணைந்து இந்த சவாலான காலகட்டத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று மனதின் குரல் வாயிலாக நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.  அரசியல் செய்வோர் இந்த விஷயம் குறித்தும்கூட அப்படிச் செய்யக்கூடாது.  இது தேசத்தின் 140 கோடி நாட்டுமக்களின் நலன்களோடு தொடர்புடையது, இதிலே சுயநலத்திற்கோ, அரசியலுக்கோ எந்த இடமும் கிடையாது.  இந்தச் சூழலில் யாரெல்லாம் புரளிகளைப் பரப்புகிறார்களோ, அவர்கள் தேசத்திற்கு மிகப்பெரிய தீங்கை ஏற்படுத்துகிறார்கள்.  விழிப்போடு இருங்கள், புரளிகள் உங்களை பாதிக்க அனுமதியாதீர்கள், அரசு தரப்பிலிருந்து உங்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டுவரும் தகவல்களை மட்டுமே நம்புங்கள், அவற்றின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று நாட்டுமக்கள் அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்கிறேன்.   தேசத்தின் 140 கோடி மக்களின் வல்லமையால் எப்படி நாம் கடந்தகாலச் சங்கடங்களை முறியடித்தோமோ, அதே போல இந்த முறையும் கூட நாமனைவரும் இணைந்து, இந்தக் கடினமான சூழ்நிலையையும், மிகவும் சிறப்பான வகையிலே எதிர்கொண்டு மீண்டு வருவோம் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது.

ஞானபாரதம் செயலி

எனதருமை நாட்டுமக்களே, பாரதத்தின் சக்தி இங்கே இருக்கும் கோடானுகோடி மக்களிடம் பொதிந்திருக்கிறது.  இப்படிப்பட்ட ஒரு சக்திவாய்ந்த முயற்சி பற்றியே நான் இன்று மனதின் குரலில் தெரிவிக்க இருக்கிறேன், இது நாட்டுமக்களின் பங்களிப்பு உணர்வினைப் பிரதிபலிக்கிறது.  ஞான பாரதம் ஆய்வு என்ற இந்த முயற்சி நமது பெருமைக்குரிய கலாச்சாரம் மற்றும் வளமையான மரபோடு தொடர்புடைய ஒன்று.  நாடெங்கிலும் இருக்கும் manuscripts அதாவது கையெழுத்துப் பிரதிகள் பற்றிய தகவல்களை ஒன்றுதிரட்டுவதுதான் இதன் நோக்கம்.  இந்த ஆய்வோடு இணைத்துக் கொள்ள ஒருவழி எது என்றால் அது ஞான பாரதம் செயலி தான். 

உங்களிடத்திலே ஏதும் கையெழுத்துப் பிரதி இருக்கிறதா அல்லது அதுபற்றிய தகவல் இருக்கிறதா, அப்படி என்றால் அதன் புகைப்படத்தை ஞானபாரதம் செயலியில் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  ஒவ்வொரு பதிவோடு தொடர்புடைய தகவலும் சரிபார்க்கவும்படுகின்றன.  ஆயிரக்கணக்கான கையெழுத்துப்படிகளை மக்கள் இதுவரை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  

எடுத்துக்காட்டாக, அருணாச்சல் பிரதேசத்தின் நாம்சாயியைச் சேர்ந்த சாஓ நந்திசிந்த் லோகாங்க் அவர்கள், தாய் எழுத்தில் இருக்கும் கையெழுத்துப்படிகளைப் பகிர்ந்திருக்கிறார்.  அமிர்தசரசிலே பாய் அமித் சிங் ராணா, குருமுகீ எழுத்திலான கையெழுத்துப்படிகளைப் பகிர்ந்திருக்கிறார்.  இது நமது மகத்தான சீக்கியப் பாரம்பரியம் மற்றும் பஞ்சாபி மொழியோடு தொடர்புடைய கையெழுத்துப் படிகளாகும்.  பனையோலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருப்பவற்றை சில அமைப்பினர் அளித்தார்கள்.  இராஜஸ்தானத்தின் அபய் ஜெயின் நூலகம், செப்புத்தகடுகளில் பொறிக்கப்பட்டிருக்கும் மிகவும் பழமையான கையெழுத்துப்படிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது.  அதே போல லத்தாக்கைச் சேர்ந்த ஹேமிஸ் மடாலயமானது, திபத்திலே இருக்கும் மிகவும் மதிப்புமிக்க கையெழுத்துப்படிகள் பற்றிய தகவல்களை அளித்தது.  இங்கே நான் சில எடுத்துக்காட்டுகளை மட்டுமே அளித்திருக்கிறேன்.  இந்த ஆய்வு, ஜூன் மாத இடைப்பகுதி வரை நடைபெற இருக்கிறது.  நம்முடைய கலாச்சாரத்தோடு தொடர்புடைய விஷயங்களை முன்னெடுத்துச் செல்வோம், பகிர்வோம் என்று உங்கள் அனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன். 

அரசில்… இளைஞர்களின் ஆலோசனைகள் !

என் மனம்நிறை நாட்டுமக்களே, பாரதம் உலகின் மிகவும் இளமையான தேசம்.  தேசத்தின் இளையசக்தி தேச நிர்மாணத்தோடு தொடர்பு கொள்ளும் போது, மிகப்பெரிய உதவி கிடைக்கிறது.  தேச நிர்மாணத்தின் இந்தப்பெரிய கடமையை ஆற்றுவதில் பெரும்பங்கு ஆற்றிவருவது என்னுடைய இளைய பாரதம் அதாவது ’மை பாரத்’ அமைப்பு.  இந்த அமைப்பு, தேசத்தின் இளைஞர்களை பல்வேறு ஆக்கப்பூர்வமான வழிமுறைகளோடு இணைத்து வருகிறது.  மை பாரத் வாயிலாக பட்ஜட் க்வஸ்ட் என்ற நிகழ்ச்சிக்கு தற்போது தான் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  நாடெங்கிலும் இருக்கும் இளைஞர்களை, பட்ஜெட் செயல்பாடு மற்றும் கொள்கை வடிவமைப்போடு இணைப்பது தான் இதன் நோக்கம்.  இதோடு தொடர்புடைய வினாவிடைப் போட்டியிலே நாடெங்கிலுமிருந்தும் 12 இலட்சம் இளைஞர்கள் பங்கெடுத்தார்கள்.  இதற்குப் பிறகு சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பங்கெடுப்பாளர்கள் கட்டுரைப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.   இவற்றிலே சில கட்டுரைகளைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.  நாட்டின் என்னுடைய இளைய நண்பர்கள் தேசத்தின் வளர்ச்சிக்காக எந்த அளவுக்குத் தங்களுடைய பங்களிப்பை அளிக்கத் துடிப்போடு இருக்கிறார்கள் என்பது இவற்றிலிருந்து எனக்குத் தெரிய வந்தது. 

தெலங்கானாவின் சூர்யாபேட்டிலிருந்து கோட்லா ரகுவீர் ரெட்டி, உத்தர பிரதேசத்தின் பாராபங்கியைச் சேர்ந்த சௌரப் பேஸ்வார், பிஹாரின் கோபால்கஞ்ஜைச் சேர்ந்த சுமித் குமார் ஆகியோர், விவசாயிகள் நலனோடு தொடர்புடைய விஷயம் குறித்து எழுதி இருந்தார்கள்.  பஞ்சாபின் மொஹாலியைச் சேர்ந்த ஆஞ்சல், ஒடிஷாவின் கேந்த்ரபாடாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் ரத் ஆகியோர், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்துத் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்கள்.  ஹரியாணாவின் யமுனாநகரிலிருந்து பிரதம் பரார், பசுமையான, தூய்மையான பாரதமே வழமையான பாரதத்தை எட்டத் தேவையான வழி என்று எழுதியிருக்கிறார், இதிலிருந்து அவருடைய ஆழமான சிந்தனாசக்தி வெளிப்படுகிறது. 

ஊரகப்பகுதிகளில் விளையாட்டுத் திறமைகளை அடையாளம் காண அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தில்லியின் சங்க் குப்தா அளித்திருக்கும் ஆலோசனை.  நமது இளைய நண்பர்கள், திறன் மேம்பாடு மற்றும் வணிகம் புரிவதில் சுலபத்தன்மை குறித்தும்கூட தம்முடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள்.  தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுவரும் அனைத்து இளைஞர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.  இந்தக் கருத்துக்கள் தாம் தேசத்தை முன்னெடுத்துச் செல்ல முக்கியமான தேவைகள்.

மகிழ்ச்சியான கிரிக்கெட் சீஸன்

என் கனிவான நாட்டுமக்களே, நாடெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் விசிறிகளுக்கு இந்த மாதம் உற்சாகம்-ஊக்கம் நிறைந்த மாதம்.  பாரதம் டி 20 உலகக்கோப்பை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிப் பதிவை ஏற்படுத்திய போது நாடெங்கிலும் ஒரே சந்தோஷமயம்.  நமது அணியின் பிரமாதமான இந்த வெற்றி நம்மனைவருக்கும் பெருமிதம் ஏற்படுத்துகிறது.  கடந்த மாதத்தின் நிறைவுப்பகுதியில் கர்நாடகத்தின் ஹுப்ளியில் மிகவும் சுவாரசியமான ஒரு போட்டி நடந்தது, இந்தப் போட்டியில் வென்ற ஜம்மு கஷ்மீரத்தின் கிரிக்கெட் அணி, ரஞ்ஜிக்கோப்பையைத் தன்னுடையதாக்கிக் கொண்டது. 

மிகவும் சந்தோஷமான விஷயம் என்னவென்றால், கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் நீண்ட காலகட்டக் காத்திருப்புக்குப் பிறகு இந்த அணி தனது முதல் ரஞ்ஜிக் கோப்பை வெற்றி என்ற பதிவை ஏற்படுத்தியிருக்கிறது.  வரலாறு காணாத இந்த வெற்றி, விளையாட்டு வீரர்களின் பல்லாண்டுக்கால தொடர் முயற்சிகளின் விளைவுதான்.  அணியின் தலைவர் பாரஸ் டோக்ரா, மிகச் சிறப்பாகத் தம் திறமைகளை வெளிப்படுத்தினார்.  தனது தலைமையால் இந்த வெற்றிக்கு அவர் முக்கியமான பங்களிப்பு அளித்தார்.  இன்று தேசத்திலே கஷ்மீரைச் சேர்ந்த இளைய பந்து வீச்சாளரான ஆகிப் நபியின் வெளிப்பாடு பற்றித் தான் பேச்சாக இருக்கிறது, இவர் இந்த ரஞ்ஜி காலத்தில் 60 விக்கட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார்.  இந்த வெற்றியால் அணியின் வீரர்கள்-பயிற்றுநர்கள் மட்டுமல்லாமல், ஜம்மு கஷ்மீரத்தின் மக்களும் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள்.  

கிரிக்கெட் மைதானத்தின் இந்த அருமையான செயல்பாட்டிற்குப் பிறகு அங்கே இருக்கும் இளைஞர்களிடம் விளையாட்டுக்கள் மீதான உற்சாகம், மேலும் அதிகரித்துவிட்டது.  வரவிருக்கின்ற காலத்திலே, பல இளைஞர்கள் விளையாட்டுக்களில் முனைப்பு காட்ட இந்த வெற்றி உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.  ஜம்மு கஷ்மீரத்தின் மக்களிடத்திலே விளையாட்டுக்கள் தொடர்பாக அலாதியான ஈர்ப்புணர்வு இருந்து வந்திருக்கிறது.  இப்போது பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளைக்கூட நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.  கேலோ இண்டியா பனிக்கால விளையாட்டுப் போட்டிகள் விஷயத்திலே ஏற்கெனவே ’குல்மர்க்’ அடையாளமாக ஆகிவிட்டது.  கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் கூட, இங்கே இளைஞர்களின் விருப்ப விளையாட்டாக இருக்கிறது.  வரவிருக்கின்ற காலகட்டத்திலே, ஜம்முகஷ்மீரத்தின் விளையாட்டு வீரர்களின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

விளையாடுபவரே வளர்வர்

என் உளம்நிறை நாட்டுமக்களே, யார் விளையாடுகிறார்களோ, அவர்களே வளர்வார்கள் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு.  அந்த அளவுக்கு பிரபலமாக இல்லாத விளையாட்டுக்களைக் கூட நமது நாட்டு இளைஞர்கள் இப்போது சொந்தமாக்கிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதைக் காணும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது.  உத்தர பிரதேசத்தின் திறமைசாலியான தடகள வீரர் குல்வீர் சிங் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.  சில வாரங்கள் முன்பாக நடந்த Newyork City Half Marathon போட்டியில் கலந்துகொண்டு, 3ஆவது இடத்தைப் பிடித்து இவர் சாதனை படைத்திருக்கிறார்.  ஒரு மணிநேரத்துக்கும் குறைவான நேரத்திலே அரை மாரத்தான் போட்டியை நிறைவு செய்த முதல் பாரதநாட்டுத் தடகள வீரர் இவர் தான். 

ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அனாஹத் சிங் அவர்கள், Squash on Fire Open என்ற மிகப்பெரிய சர்வதேசப் போட்டியை வென்றிருக்கிறார்.  வெறும் 17 வயதே ஆன இவர் இந்தச் சாதனையை புரிந்திருக்கிறார்.  இதோடு கூடவே இவர் PSA உலக தரவரிசையிலே தலைசிறந்த 20 வீரர்கள் பட்டியலில், மிகக்குறைவான வயதிலே இடம்பெற்ற முதல் ஆசியப் பெண்ணாகவும் ஆகியிருக்கிறார்.  அதே போல அஸ்மிதா ஆத்தலெடிக்ஸ் லீக் பற்றிய தகவலும் என்னிடத்தில் இருக்கிறது.  இதிலே, மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று, பெண்கள் தினத்தன்று பல விளையாட்டு நிகழ்ச்சிகள் மிகப் பிரமாதமாக நடந்தன.  இந்தப் போட்டியிலே சுமார் 2 இலட்சம் பெண்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  இதைக் காணும் போது, பாரதத்தின் பெண்சக்தி, தேசத்தின் விளையாட்டுக்கள் துறையை மாற்றியமைப்பதில் முக்கியமான பங்காற்றி வருகிறது என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

உடலுறுதியில் கவனம் செலுத்துக

நண்பர்களே, நீங்கள் அனைவரும் உங்களுடைய உடலுறுதி மீது கண்டிப்பாக கவனம் செலுத்துங்கள் என்று நான் எப்போதுமே உங்களிடத்திலே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  சர்வதேச யோகக்கலை தினத்துக்கு இன்னும் 100 நாட்களுக்கும் குறைவான காலமே இருக்கிறது, உலகம் முழுவதிலும் யோகக்கலை மீதான ஈர்ப்பும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.  ஆப்பிரிக்காவின் ஜிபூத்தியிலே அல்மிஸ் அவர்கள் தன்னுடைய அரவிந்த யோகா மையம் வாயிலாக யோகக்கலையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று வருகிறார்.   அங்கே இருக்கும் மேலும் பல இடங்களிலும் கூட மக்களுக்கு யோகக்கலையைக் கற்பித்து வருகிறார். 

இன்ஸ்டாகிராம் கண்டெண்ட் கிரியேட்டரான யுவ்ராஜ் துவாவின் பதிவுக்கான எனது பதிலுக்கு உங்களில் பலர் கருத்துக்களைத் தெரிவித்திருந்தீர்கள்.  சர்க்கரை அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று அவருடைய தந்தையாருக்கு நான் கூற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  என்னுடைய வேண்டுகோள் அவருடைய தந்தையாரிடத்திலே நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனக்கு உவகையை அளித்தது.  அதே போல, நீங்களும் கூட நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள், சமையல் எண்ணெய் அளவில் 10 சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று உங்களனைவரிடத்திலும் கூட நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.  இத்தகைய சின்னச்சின்ன முயற்சிகளால் உடல்பருமன் மற்றும் வாழ்கைமுறையோடு தொடர்புடைய நோய்களிலிருந்து நாம் விலகி இருக்க முடியும். 

மாணவர் ஆய்வுத் திட்டங்கள்

என் இதயம்நிறை நாட்டுமக்களே, ஹிந்தி மொழியிலே ஒரு பழமொழி உண்டு, இதன் பொருள் என்னவென்றால் நாம் எத்தனைக்கெத்தனை பயில்கிறோமோ, அத்தனைக்கத்தனை புத்திசாலித்தனத்தை-திறமையை அடைகிறோம் என்பதே.  அதே போல எப்போது ஒருவருடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு இருக்கிறதோ, அப்போதுதான் அவரால் சிறப்பாகக் கற்க முடியும்.  பெங்களூரூவில் கல்வியோடு தொடர்புடைய தனித்தன்மை வாய்ந்த ஒரு முயற்சி பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது.  இங்கே ஒரு குழு, Prayog Institute of Education Research என்ற அமைப்பை நடத்தி வருகிறது.  இந்தக் குழு ஆய்வுத் திட்டங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்துகிறது. 

இந்தக் குழு பள்ளிக்கூட மட்டத்தில் அறிவியல் கல்வியை விருப்பப் பொருளாக ஆக்குவதில் முனைந்திருக்கிறது.   இவர்கள் அன்வேஷன் என்ற பெயரிலான ஒரு பரிசோதனையை மேற்கொண்டார்கள், இதன் வாயிலாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வேதியியல், பூமி பற்றிய அறிவியல் மற்றும் நலவாழ்வு போன்ற துறைகளில், புதுமைகளைப் புரிய சந்தர்ப்பங்களை அளிக்கிறார்கள்.  இதனால் ஆய்வுகள் மேற்கொளவது பற்றிய நல்ல அனுபவம் மாணவர்களுக்கு கிடைப்பதோடு கூடவே, செயல்திட்டங்களைப் பதிப்பிக்கவும் ஒரு தளம் கிடைக்கிறது. 

அறிவியலை அச்சமின்றி அணுகுங்கள்

நண்பர்களே, தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியின் போது, சில மாணவர்கள், அறிவியலைப் படிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம், ஆனால் அதனிடம் ஒருவகை பயமும் இருப்பதாக என்னிடம் கூறினார்கள்.  இந்த நோக்கிலே பிரயோக் குழுவின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.  இந்தப்படி, மாணவர்களை அறிவியலோடு இணைப்பதோடு கூடவே, நடைமுறையிலே சிலவற்றைச் செய்து காட்டக்கூடிய வாய்ப்பையும் அளிக்கிறது.  எந்த ஒரு விஷயத்தையும் நாமே செய்து பார்க்கும் போது தான், ஆர்வமும், நாட்டமும் உருவாகும்.  என்னுடைய இந்த இளைய நண்பர்களில் யார் வருங்காலத்திலே அருமையான விஞ்ஞானியாவார் என்பதை யாரறிவார்கள்?

பாரம்பரியத்தை மீட்டுருவாக்குங்கள்

நண்பர்களே, கல்வி வாயிலாக, கடந்த காலத்தைப் பராமரிக்கவும், வருங்காலத்தைத் தயார் செய்யும் ஒரு முயற்சியை நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் செய்துவருகிறார்கள்.  இந்தச் சமுதாயத்தவர்கள் தங்களுடைய தொல்குடிப் பாரம்பரியங்களை மிகவும் போற்றுகிறார்கள்.  இவற்றின் மீது பெருமிதம் கொள்வதோடு, தங்களுடைய அணுகுமுறையை நவீனமானதாகவும் வைத்துக் கொள்கிறார்கள்.  நாகா பழங்குடிகளில் ’மோரூங்க் கற்றல்’ என்ற ஒரு பாரம்பரியமான வழிமுறை இருந்தது, இதிலே மூத்தகுடிமக்கள் தங்களுடைய அனுபவங்கள் வாயிலாக, இளைஞர்களுக்குப் பாரம்பரியமான ஞானம், வரலாறு மற்றும் வாழ்க்கைக்கல்வி பற்றிக் கூறுவார்கள். 

காலப்போக்கிலே இந்த முறை இப்போது மோரூங்க் கல்விக் கோட்பாடாக மாறிவிட்டது.  இதன் வாயிலாக குழந்தைகளிடத்தில் அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான விஷயங்களில் நாட்டம் ஏற்படுத்தப்படுகிறது.  இதிலே சமுதாயத்தின் மூத்தவர்கள் அவர்களுக்குக் கதைகள், பழங்குடிப் பாடல்கள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களோடு வாழ்கைத்திறன்களைப் பற்றியும் கற்பிக்கிறார்கள்.  இந்த வகையிலே நமது நாகாலாந்து தன்னுடைய கலாச்சார மரபுகளைப் பாதுகாக்கும் அதே நேரத்தில், குழந்தைகளின் கல்வியை முன்னெடுத்தும் வருகிறது.  உங்கள் பகுதியிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் ஏதேனும் இருந்தால், கண்டிப்பாக என்னோடு பகிருங்கள்.

நீர் பராமரிப்பை பரவலாக்குக

எனதருமை நாட்டுமக்களே, தேசத்தில் பல்வேறு பாகங்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது, அதாவது இந்த வேளை நீர்பாதுகாப்பு தொடர்பான நம்முடைய உறுதிப்பாடுகளை மீள் உறுதி செய்து கொள்வதற்கான வேளையாகும்.  கடந்த 11 ஆண்டுகளில் நீர் சேமிப்பு இயக்கம் காரணமாக மக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.  இந்த இயக்கம் காரணமாக, நாடெங்கிலும் சுமார் 50 இலட்சம் செயற்கை நீர் அறுவடை அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.  இப்போது நீர் சங்கடங்களை சமாளிக்க கிராம அளவிலேயே சமூகரீதியான முயற்சிகள் நடக்கத் தொடங்கிவிட்டன என்பது இதமாக இருக்கிறது. 

சில இடங்களில் பழைய குளங்கள் தூய்மைப்படுத்தப் படுகின்றன என்றால், சில இடங்களில் மழைநீர் சேகரிப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  அமுத நீர்நிலைகள் இயக்கத்தின்படி சுமார் 70,000 அமுத நீர்நிலைகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன.  மழைக்காலம் வரும் முன்னரே, இந்த நீர்நிலைகளை சுத்தம் செய்யும் வேலை தொடங்கிவிட்டது.  இன்று நான் உங்களிடத்திலே சில உத்வேகமான எடுத்துக்காட்டுகளை முன்வைக்க விரும்புகிறேன்.  மக்களின் பங்களிப்பு வாயிலாக நீர் பராமரிப்பு எந்த அளவுக்குப் பரவலாகிறது என்பதையே இந்த எடுத்துக்காட்டுகள் தெரிவிக்கின்றன.

மழைநீர் அறுவடை

நண்பர்களே, திரிபுராவின் ஜம்புயி மலைகளில் இருக்கும் வாங்கமுன் கிராமம், 3000 அடி உயரத்தில் இருக்கிறது.  இந்த கிராமம் தீவிரமான நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வந்தது.  கோடைக்காலத்தில் கிராமத்தவர்கள் நீருக்காக நீண்டநெடிய தொலைவுகளுக்குப் பயணிக்க வேண்டி இருந்தது.  முடிவாக கிராமத்தவர்கள் மழைநீரின் ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாப்பது என்று தீர்மானித்தார்கள்.   இன்று வாங்கமுன் கிராமத்திலே கிட்டத்தட்ட அனைத்து இல்லங்களிலும் கூரை மீது அமைக்கப்பட்ட மழைநீர் அறுவடை முறை நிறுவப்பட்டிருக்கிறது.  கிராமம் என்றைக்கும் நீர்த்தட்டுப்பாடு காரணமாக அவதிப்படக்கூடாது என்பதை உறுதிசெய்யும் இந்த நடவடிக்கை, நீர் சேமிப்பிற்கான உத்வேகம்தரும் எடுத்துக்காட்டாகிவிட்டது.

நண்பர்களே, இதைப் போலவே சத்தீஸ்கட்டின் கோரியா மாவட்டத்திலும் கூட ஒரு வித்தியாசமான முன்னெடுப்பைக் காணலாம்.  இங்கே இருக்கும் விவசாயிகள் ஒரு எளிமையான ஆனால் அருமையான உத்தியைக் கைக்கொண்டார்கள்.  இவர்கள் தங்களுடைய வயல்வெளிகளில் சின்னச்சின்ன ரீசார்ஜ் அதாவது மறு ஊட்டக் குளங்கள் மற்றும் soak pit – உறிஞ்சுகுழிகளை ஏற்படுத்தி, இவை காரணமாக மழைநீர் வயல்களிலேயே தேங்கத் தொடங்கியது, நீர் மெல்லமெல்ல நிலத்தடிக்குள் செல்லத் தொடங்கியது. 

இன்று இந்தப் பகுதியில் 1200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த மாதிரியை ஏற்றுக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள், கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் பிரமாதமாகி விட்டது.  இதைப் போலவே தெலங்காணாவின் மஞ்சேரியால் மாவட்டத்தின் முதிகுண்டா கிராமத்திலேயும் கூட மக்களனைவரும் இணைந்து நீர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்கள்.  கிராமத்தின் 400 குடும்பங்கள் தங்களுடைய வீடுகளில் இத்தகைய soak pit -உறிஞ்சுகுழிகளை ஏற்படுத்தி, நீர் பராமரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார்கள்.  இதனால் கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டம் சிறப்பாக ஆனதோடு, மாசடைந்த நீர் காரணமாக ஏற்படும் நோய்களும் குறைந்து போனது.

வெற்றிகரமான மீன் பதப்படுத்தும் தொழில்

எனதருமை நாட்டுமக்களே, நமது மீனவ சகோதர சகோதரிகள், கடல்வீரர்கள் மட்டுமல்ல, தற்சார்பு பாரதத்தின் பலமான அடித்தளங்களும் ஆவார்கள்.  அவர்கள் பொழுது புலரும் முன்பாகவே கடலின் அலைகளுக்கு இடையே பயணித்து, தங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் தேசத்தின் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  இத்தகைய கடும் உழைப்பாளிகளான மீனவர்களின் வாழ்க்கை இன்று பலவகைகளில் சுலபமானதாக ஆகிக் கொண்டு வருகிறது.  துறைமுகங்களின் வளர்ச்சியாகட்டும், மீனவர்களுக்கான காப்புறுதியாகட்டும், இப்படி பல முன்னெடுப்புகள், அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக ஆகி வருகிறது.  கடலிலே அவர்களுடைய செயல்பாடுகளை பருவநிலையின் போக்குத் தான் தீர்மானிக்கிறது என்பதை நாமறிவோம். 

இதைப் புரிந்து கொண்டு, தொழில்நுட்பம் வாயிலாகவும் அவர்களுக்கு முழுமையான உதவிகள் புரியப்பட்டு வருகின்றன.  இப்படிப்பட்ட முயற்சிகளால் நமது மீன்வளத்துறை தன்னிறைவு பெற்றதாக ஆவதோடு மட்டுமல்லாமல், புதியனவற்றை சாதிக்கும் குறிக்கோள் உணர்வு நிறைந்ததாகவும் ஆகியிருக்கிறது.  இன்று மீன்வளம் மற்றும் கடல்பாசித் துறைகளில் புதுமைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன, நமது மீனவ சகோதர சகோதரிகள் தற்சார்பு உடையவர்களாக ஆகி வருகிறார்கள். 

ஒடிஷாவின் சம்பல்பூரைச் சேர்ந்த சுஜாதா பூயான் அவர்களும் கூட இல்லத்தரசியாக இருந்தார் ஆனால் புதியதாக ஏதாவது சாதிக்க வேண்டும், குடும்பத்துக்கு உதவியாக இருக்கவேண்டும் என்று விரும்பினார்.  ஆகையால் சில ஆண்டுகள் முன்பாக அவர் ஹீராகுண்ட் நீர்த்தேக்கத்திலே மீன் பண்ணையைத் தொடங்கினார்.  தொடக்கக்கட்டத்தில் இது அவருக்கு சுலபமாக இருக்கவில்லை.  பருவநிலை மாற்றம், மீன்களுக்கான உணவு ஏற்பாடு மற்றும் வீட்டின் பொறுப்புகள் ஆகியவற்றை சீராக வைத்திருக்க வேண்டிய சவால்கள் இருந்தன; ஆனால் மனதில் உறுதி இருந்தது.  வெறும் 2-3 ஆண்டுகளிலேயே அவர் தனது முயற்சியை ஒரு வளமான வர்த்தகமாக ஆக்கினார்.  இன்று இவருடைய வெற்றியானது, சமுதாயத்தின் பெண்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருக்கிறது.

நண்பர்களே, லட்சத்தீவுகளின் மினிகாயைச் சேர்ந்த ஹாவ்வா குல்ஜார் அவர்களின் கதையானது நமது சகோதர சகோதரிகளின் அற்புதமான உறுதிப்பாட்டினை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.  உள்ளபடியே இவர் ஒரு மீன் பதப்படுத்தும் அலகை நடத்தி வந்தார்.  ஆனால் தன்னிடத்தில் மட்டும் ஒரு நல்ல குளிர்சாதன சேமிப்பு அலகு இருந்தால் மேலும் சிறப்பாகச் செயல்பட முடியுமே என்று கருதினார்.  ஆகையால் குளிர்சாதன சேமிப்பு அலகை அமைக்க முடிவெடுத்தார்.  இன்று இதுவே இவருடைய பலமாகவும் ஆகியிருக்கிறது.  இப்போது சிறப்பான திட்டமிடலோடு வியாபாரத்தைச் செய்து வருகிறார்.

நண்பர்களே, தேசத்திலே இன்று அனைத்து வகைகளிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் நடந்தேறி வருகின்றன, கருத்தூக்கம் அளிக்கின்றன.  பேல்காவியின் சிவலிங்க சத்தப்பா ஹுத்தார், பாரம்பரியமான முறை விவசாயத்தை விட்டு விலகி ஒரு தனிப்பாதையைத் தேர்ந்தெடுத்தார்.  இதற்காக இவர் ஒரு Pond Farm – குளப் பண்ணையை ஏற்படுத்தினார்.  இதனைச் செய்ய இவருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.  இப்போது தனது குளத்திலிருந்து மீன்களை விற்பனை செய்து நல்ல வருமானத்தையும் ஈட்டி வருகிறார்.  அதே போல கடல்பாசிக்கான தேவையைப் பார்த்து பலர் கடல்பாசி வளர்ப்பிலே ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள்.  இதனால் இவர்களுக்கு அதிக ஆதாயமும் கிடைத்து வருகின்றது.  மீண்டுமொரு முறை மீன்வளத்துறையோடு தொடர்புடைய அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.  நமது பொருளாதாரத்தை மேலும் சக்தியடைந்ததாகச் செய்வதில் அவர்களுடைய முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. 

வித்தியாசமான கின்னஸ் சாதனை

எனதருமை நாட்டுமக்களே, சமுதாயம் தானே முன்னேறும் போது, சின்னச்சின்ன முயற்சிகளும்கூட பெரிய மாற்றங்களுக்கான அடித்தளங்களாகி விடுகின்றன.  நமது தேசத்திலே பல்வேறு பாகங்களில் இப்படிப்பட்ட பல எடுத்துக்காட்டுகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன, இவை எல்லாம் நமக்கு இந்தக் கற்றலைத் தான் அளிக்கின்றன.  உத்தர பிரதேசத்தின் வாராணசியில் உள்ளெழுச்சி அளிக்கக்கூடிய ஒரு முயற்சியை தற்போது தான் காண முடிந்தது.  அங்கே ஒரே மணி நேரத்திலே 2 இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்துக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டு, ஒரு புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. 

இந்த முயற்சியின் மிகவும் சிறப்பான விஷயம் என்னவென்றால் இதிலே ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றாகப் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்பதுதான்.  மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் இணைந்து இந்தப் பணியை சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.  மக்கள் பங்கெடுப்பின் இதே உணர்வு தான், அன்னையின் பெயரில் ஒரு மரம் இயக்கத்தின் போதும் காண முடிகிறது.  இந்த இயக்கத்தின் மூலம் நாடெங்கிலும் கோடிக்கணக்கான மரங்கள் நடப்பட்டன.

சமுதாய விதை வங்கி

நண்பர்களே, நாகாலாந்தின் சிஜாமி கிராமத்திலும் கூட மிகவும் உள்ளெழுச்சி அளிக்கக்கூடிய ஒரு முயற்சி பற்றித் தெரிய வந்திருக்கிறது.  சிஜாமி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் இணைந்து 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரக விதைகளைப் பாதுகாத்து வருகிறார்கள்.  இந்த விதைகளை ஒரு சமுதாய விதை வங்கியிலே சேமித்து வைத்திருக்கிறார்கள், இதை கிராமத்துப் பெண்கள் தாம் நடத்துகிறார்கள்.  இதிலே நெல், கம்பு, சோளம், பருப்பு வகைகள், காய்கறிகள், பலவகையான மூலிகைகள் ஆகியன அடங்கும்.  இது எப்படிப்பட்ட முயற்சி என்றால் இதிலே ஞானமும் பாதுகாக்கப்படுகிறது, பாரம்பரியமும் உயிர்ப்போடு இருக்கிறது, வரும் தலைமுறையினருக்கு ஒரு பலமான அஸ்திவாரமும் தயாராகிறது.

நண்பர்களே, இன்று உலகிலே நாம் சூழல்மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொண்டுவரும் வேளையிலே, தீர்வுகள் எப்போதும் தொலைவில் இல்லை என்பதையே இப்படிப்பட்ட முயற்சிகள் எல்லாம் தெரிவிக்கின்றன.   பல வேளைகளில் நம்முடைய பாரம்பரிய ஞானம் மற்றும் சமூக முயற்சிகள் தாம் பலமான பாதையை நமக்குக் காட்டுகின்றன. 

வாய்ப்புகள் அளிக்கும் சூரிய மின்சக்தித் துறை

என் அன்பே வடிவான நாட்டுமக்களே, இன்று தேசத்தின் எந்த ஒரு சிறிய-பெரிய நகருக்குச் சென்றாலும் ஒரு மாற்றத்தை நீங்கள் கண்டிப்பாக கவனிக்கலாம்.  அதிக எண்ணிக்கையில் வீடுகளின் கூரைகளிலே சூரியத் தகடுகள் பொருத்தப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.  சில ஆண்டுகள் முன்பு வரை, இவை ஏதோ சில வீடுகளில் மட்டுமே இருந்தன; ஆனால் இன்றோ பிரதம மந்திரி சூரியசக்தி வீடுகள் திட்டத்தின் தாக்கத்தை தேசத்தின் மூலைமுடுக்கெங்கிலும் காணமுடிகிறது. 

இந்தத் திட்டம் காரணமாக, குஜராத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்தின் பாயல் முஞ்ஜ்பாராவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  இவர் சூரிய முன்முயற்சி வாயிலாக சூரியசக்தி தொழில்நுட்பப் பயிற்சியை மேற்கொண்டு, நான்கு மாதங்களில் சோலார் பிவி டெக்னீசியன் – சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்ப வல்லுநர் படிப்பையும் நிறைவு செய்தார்.  இப்போது இவர் ஒரு திறமைவாய்ந்த சூரியசக்தி தொழில்நுட்ப வல்லுநராக ஆகி வருகிறார்.  அக்கம்பக்கத்தில் இருக்கும் மாவட்டங்களில் சூரியசக்தி கூரைமீதான மின் அமைப்புகளை ஏற்படுத்தி வருகிறார், மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்.

நண்பர்களே, மீரட்டின் அருண் குமாரும் கூட தனது பகுதியிலே ஆற்றல் அளிப்பவராக இருக்கிறார்.  தற்போது தான் தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அருண் குமார் அவர்கள் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.  இப்போது மின்சாரத்துக்கு செலுத்தும் கட்டணத்தைச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல், உபரி மின்சாரத்தை விற்பனை செய்வதாகவும் கூறினார்.

நண்பர்களே, ஜய்பூரின் முரளீதர் அவர்களின் வெற்றியும் கூட இப்படிப்பட்டது தான்.  முன்பெல்லாம் விவசாயத்திற்கு இவர் டீசல் பம்பைச் சார்ந்திருந்தார், இதனால் ஒவ்வோர் ஆண்டும் இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவாகிவந்தது.  ஆனால் சூரியசக்தி பம்பைப் பொருத்தியவுடன், இவருடைய விவசாய வழிமுறையே மாறிப்போனது.  இப்போது எரிபொருள் பற்றிய கவலையே இல்லை, நீர்பாசனம் காலாகாலத்தில் நடக்கிறது, ஆண்டு வருவாயும் அதிகரித்துவிட்டது.  மிகவும் மகத்துவம் வாய்ந்த விஷயம் என்னவென்றால், இப்போது இவருடைய குடும்பத்துக்கு தூய்மையான எரிசக்தி கிடைப்பதோடு கூடவே, அவர்கள் சிறப்பான வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறார்கள்.

நண்பர்களே, பிஎம் சூரியசக்தி வீடுகளுக்கான இலவச மின்சாரத் திட்டத்தால் ஆதாயங்கள் வடகிழக்குப் பகுதிகளிலும் கூட கிடைத்து வருகின்றது.  திரிபுராவின் ரியாங்க் பழங்குடிகளின் பல கிராமங்களில் மின்சாரம் ஒரு பிரச்சினையாக இருந்தது.  இப்போது சூரியசக்தி மினி க்ரிட் வாயிலாக அங்கே வீடுகளில் ஒளிவெள்ளம் இருக்கிறது.  அங்கே பொழுது சாய்ந்த பிறகு கூட குழந்தைகளால் படிக்க முடிகிறது.  மக்கள் தங்கள் மொபைலுக்கு சார்ஜ் செய்து கொள்ள முடிகிறது, கிராமத்தின் சமூக வாழ்க்கை மாறிவிட்டது.

நண்பர்களே, தேசத்தில் சூரியசக்திப் புரட்சிக்கு இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.  நீங்களும் கூட இந்தப் புரட்சியிலே அங்கம் வகியுங்கள், மற்றவர்களையும் இணையுங்கள்.

மனங்களைக் கவர்ந்த மனதின் குரல்

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலுக்காக தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஏராளமான தகவல்கள்-செய்திகள் எனக்குக் கிடைத்தவண்ணம் இருக்கின்றன.  தொலைவான பகுதிகளில் இருப்போர் கூட எத்தனை ஆர்வத்தோடு இந்த நிகழ்ச்சியைக் கேட்கிறார்கள் என்பது இந்தத் தகவல்களாலும் தெரிய வருகிறது.  நான் உங்களுடைய ஆலோசனைகளைப் படிக்கும்போது, இது வெறும் ஒரு நிகழ்ச்சியல்ல, இது நம்மனைவரின் ஒரு நேரடி கலந்துரையாடலாக ஆகிவிட்டது என்றே எனக்குப் படுகிறது.  உங்களுடைய எண்ணங்கள், உங்களுடைய கருத்துக்கள், உங்களுடைய அனுபவங்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சியைத் சிறப்பானதாக ஆக்க தொடர்ந்து உத்வேகத்தை அளிக்கின்றன. 

நீங்கள் உங்கள் அருகே இருக்கும் உள்ளெழுச்சி அளிக்கும் சம்பவங்களை எப்போதும் போலவே பகிர்ந்து வாருங்கள்.  உங்களுடைய ஒரு சின்ன முயற்சி, யாரோ ஒருவருடைய வாழ்க்கையிலே மாற்றத்தை ஏற்படுத்தலாம், முன்னேற்றத்தின் மீதான புதியதொரு நம்பிக்கையை ஒருவரிடம் புகுத்தலாம் – இது தானே வானொலியின் மெய்யான பலம்.  இவை தேசத்தின் பல்வேறு மூலைகளிலும் இருக்கும் மக்களை ஒரே எண்ணம், ஒரே உணர்வு, ஒரே குறிக்கோள் என்ற வகையில் இணைக்கிறது. 

அடுத்த மாதம் மீண்டும் நாம் சந்திப்போம், மேலும் சில உள்ளெழுச்சி அளிக்கும் ஆளுமைகளோடு, நம்மை முன்னேற்றக்கூடிய சக்தியளிக்கவல்ல முயற்சிகளோடு நாம் மீண்டும் இணைவோம்.  அதுவரை, நீங்கள் எல்லோரும் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், சந்தோஷமாக இருங்கள்.  பலப்பல நன்றிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Topics

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories