
நண்பர்களே, நம்முடைய சமூகத்தில், மேலும் ஒரு பெரிய விழிப்புணர்வு என்ன ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், பொதுவிடங்களில் துப்புவதால் என்ன தீங்கு ஏற்படும் என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். அங்கே இங்கே என கண்டவிடங்களிலும் துப்புவது, தவறான பழக்கத்தின் அங்கமாக ஆகியிருந்தது. இது தூய்மைக்கும், ஆரோக்கியத்துக்கும் பெரிய சவாலாக வடிவெடுத்து இருந்தது.
ஒரு வகையில் பார்த்தோம் என்றால், இந்தப் பிரச்சனை பற்றி நமக்கு நன்கு தெரிந்திருந்தாலும், இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் சமூகம் சிக்கித் தவித்தது. இப்போது இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் கனிந்து விட்டது. Better late than never, என்று கூறுவார்களில்லையா? கால தாமதமானாலும்கூட, இனிமேல் பொதுவிடங்களில் துப்புவதை விட்டொழித்தே ஆக வேண்டும். இவை அடிப்படை சுகாதார விஷயங்களை மேம்படுத்தும் அதே வேளையில், கொரோனா பரவலைத் தடுப்பதில் பெரும் உதவிகரமாக இருக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, நான் உங்களோடு இன்று உரையாற்றிக் கொண்டிருக்கும் இந்த நாள், அக்ஷய திரிதியை புனிதமான நன்னாள். நண்பர்களே, ‘க்ஷய’ என்ற சொல்லின் பொருள், அழியும் தன்மை உடையது, ஆனால், அழிவே இல்லாமல் வளர்வது என்றால் அது “அக்ஷய்’’. நம்முடைய இல்லங்களில் நாமனைவரும் இந்தப் புனித நன்னாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவோம் என்றாலும் இந்த ஆண்டு நமக்கு இது விசேஷமான மகத்துவத்தைத் தாங்கி வருகிறது. இன்றைய இந்தக் கடினமான வேளையில், இந்த நாளானது, நமது ஆன்மா, நமது உணர்வு ஆகியன குறைவே இல்லாமல் வளரும் தன்மை உடையன என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது.
இந்த நன்னாள், நமது பாதையில் எத்தனை தான் இடர்கள் எதிர்ப்பட்டாலும், எத்தனை சங்கடங்கள் எதிர்வந்தாலும், எந்தனை நோய்கள் பீடித்தாலும், இவை அனைத்துக்கு எதிராகப் போரிடுவது என்ற மனித உணர்வுகள் குறைவில்லாமல் வளர்வன என்பதைக் குறிக்கிறது. இந்த நன்னாளன்று தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், சூரிய தேவன் ஆகியோருடைய நல்லருளால் பாண்டவர்களுக்கு அள்ள அள்ளக்குறையாத அக்ஷ்ய பாத்திரம் கிடைத்தது என்று கருதப்படுகிறது. நம்மனைவருக்கும் அன்னமளிக்கும் வள்ளல்களாம் விவசாயிகள், அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாட்டுக்காக, நமக்காக இதே உணர்வோடு தான் உழைத்து வருகிறார்கள்.
இவர்களுடைய மகத்தான உழைப்பின் காரணமாகவே, இன்று நம்மனைவருக்கும், ஏழைகளுக்கும், நாட்டில் உணவுப்பொருள் சேமிப்பு நிறைவாகவும் வளமாகவும் இருக்கிறது. இந்த அக்ஷ்ய திரிதியை நன்னாளன்று, நமது வாழ்க்கையில் மகத்துவம் நிறைந்த பங்களிப்பு நல்கிவரும் நமது சுற்றுச்சூழல், வனங்கள், நதிகள், ஒட்டுமொத்த சூழல் அமைப்புப் பாதுகாப்பு பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் குறைவற்றவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், நமது பூமி குறைவற்றதாக இருப்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அக்ஷ்ய திரிதியை என்ற இந்த நன்னாள், அளித்தலின் சக்தி அதாவது power of giving என்பதை செயல்படுத்தவும் ஒரு சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது. இருதயப்பூர்வமாக நாம் எந்த ஒரு பொருளைக் கொடுத்தாலும், மகத்துவம் அளித்தல் உணர்வுக்குத் தானே ஒழிய, கொடுக்கப்படும் பொருளுக்கு அல்ல. நாம் என்ன கொடுக்கிறோம், எத்தனை கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல, கொடுக்க வேண்டும் என்ற உணர்வே பிரதானம்.
இந்தச் சங்கடம் நிறைந்த காலகட்டத்தில் நம்முடைய மிகச்சிறிய முயற்சிகூட, நமக்கு அருகிலே இருக்கும் பலருக்கு மிகப்பெரிய பலமாக ஆகும் வல்லமை உடையது. நண்பர்களே, ஜைன பாரம்பரியத்திலும்கூட, இது மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது; இந்த நாள் தான் முதல் தீர்த்தங்கர் பகவான் ரிஷபதேவரின் வாழ்க்கையில் மகத்துவமான நன்னாள்.
இதை ஜைனர்களும் புனித நாளாகக் கொண்டாடுகிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த நாளில் தான் மக்கள் எந்த ஒரு மங்கலமான காரியத்தையும் ஆரம்பித்துச் செய்வதை விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால், இன்று புதிய செயல் ஒன்றைத் துவக்கும் நாள் என்பதால், நாமனைவருமாக இணைந்து, நம்முடைய முயற்சிகள் காரணமாக நமது பூமியை வளமானதாக, குறைவேதும் இல்லாததாக ஆக்குவோம் என்ற உறுதிப்பாட்டை மேற்கொள்வோமா?
நண்பர்களே, இன்று பகவான் பஸவேஸ்வரின் பிறந்தநாளும் கூட. பகவான் பஸவேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் அளித்திருக்கும் செய்தியினைப் பற்றியும் மீண்டும் மீண்டும் சிந்திக்கவும், கற்கவும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது என்பதை நான் பெரும்பேறாகவே கருதுகிறேன். நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் பகவான் பஸவேஸ்வரின் அனைத்து சீடர்களுக்கும் அவரது பிறந்தநாளை ஒட்டி பலப்பல நல்வாழ்த்துக்கள்.
பிரதமர் மோடியின் மனதின் குரல்…11ஆவது பகுதியில் இருந்து…
ஒலிபரப்பு நாள்: 26.04.2020
தமிழாக்கம் , குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்