
நண்பர்களே, ரமலான் புனித மாதம் தொடங்கியிருக்கிறது. கடந்த முறை ரமலான் கொண்டாடப்பட்ட போது, இந்த முறை ரமலான் வேளையில் இத்தனை பெரிய சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.
ஆனால், இப்போது உலகம் முழுவதிலும் இந்தப் பெரும் சங்கடம் கொரோனா வடிவில் உருவெடுத்திருக்கும் வேளையில், இந்த ரமலானை, சுயகட்டுப்பாடு, சகோதரத்துவம், புரிந்துணர்வு, சேவை உணர்வு ஆகியவற்றின் அடையாளங்களாக மாற்றும் ஒரு சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது. இந்த முறை நாம் முன்னர் செய்ததை விட அதிகமாக பிரார்த்தனைகளைச் செய்வோம்.
இதன் காரணமாக, ஈத் வருவதற்கு முன்பாக கொரோனாவிடமிருந்து நாம் விடுபடுவோம், முன்பைப் போலவே உற்சாகத்தோடும், சந்தோஷத்தோடும் ஈத் நன்னாளைக் கொண்டாடுவோம்.
ரமலானின் இந்த நாட்களின் போது உள்ளூர் நிர்வாகத்தினரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கொரோனாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இந்தப் போரை நாம் மேலும் பலப்படுத்துவோம் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தெருக்களில், சந்தைகளில், குடியிருப்புப் பகுதிகளில், தனி நபர் ரீதியான விலகியிருத்தலின் விதிகளைப் பின்பற்றி நடப்பது இப்போது மிகவும் அவசியமானது. ஒருவர் மற்றவருக்கு இடையே குறைந்தபட்சம் 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பன போன்ற விஷயங்களில் தங்களது சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் உதவிகரமாக இருக்கும் அனைத்துச் சமுதாயத் தலைவர்களுக்கும் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மையிலேயே கொரோனாவானது இந்தமுறை பாரதம் உட்பட, உலகெங்கிலும், பண்டிகைகளைக் கொண்டாடும் பாங்கினையே மாற்றி இருக்கிறது, அவற்றின் வடிவங்களை மாற்றி விட்டது. கடந்த நாட்களில் நம் நாட்டிலே பிஹூ, பைசாகீ, புத்தாண்டு, விஷூ, ஒடியா புத்தாண்டு போன்ற பல பண்டிகைகள் வந்தன.
எப்படி தங்கள் வீட்டில் இருந்தபடியே, மிக எளிமையான வகையிலே, சமூகத்தின்பால் நல்லெண்ணத்தோடு பண்டிகைகளை மக்கள் கொண்டாடினார்கள் என்பதை நாம் பார்த்தோம். பொதுவாக, அவர்கள் இந்தப் பண்டிகைகளைத் தங்கள் நண்பர்களோடும், குடும்பத்தாரோடும் பெரும் உவகையோடும் உற்சாகத்தோடும் கொண்டாடுவார்கள். வீட்டிலிருந்து வெளியே சென்று தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள்.
ஆனால் இந்த முறையோ, அனைவருமே கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தார்கள். முழுமையான ஊரடங்கின் விதிமுறைகளின்படி நடந்து கொண்டார்கள். இந்த முறை நம்முடைய கிறிஸ்தவ நண்பர்களும், ஈஸ்டர் நாளை வீட்டில் இருந்தபடியே கடைப்பிடித்தார்கள். நம்முடைய சமூகம் மற்றும் நாட்டின் பால், பொறுப்புணர்வோடு நடந்து கொள்வது இன்றைய மிக முக்கியமான தேவை.
இதன் வாயிலாகத் தான் நாம் கொரோனாவின் பரவலாக்கத்தைத் தடுப்பதில் வெற்றி பெற முடியும், கொரோனா போன்ற உலகம் தழுவிய பெருந்தொற்றைத் தோற்கடிக்க இயலும்.
பிரதமர் மோடியின் மனதின் குரல்…11ஆவது பகுதியில் இருந்து…
ஒலிபரப்பு நாள்: 26.04.2020
தமிழாக்கம் , குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்