மாநாட்டில் பங்கேற்க தில்லி சென்றார் முதல்வர் பன்னீர்செல்வம்

சென்னை: முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் விமானம் மூலம் சென்னையில் இருந்து தில்லிக்கு பயணம் மேற்கொண்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொள்ளும் மூன்று நாள் மாநாடு தில்லியில் தொடங்கியது. இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து பங்கேற்றுப் பேசினார். இதில் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து மாநில தலைமை நீதிபதிகள் மற்றும் முதலமைச்சர்கள் மாநாடு ஞாயிறு காலை தில்லியில் நடைபெறுகிறது. தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து மாநில நீதிபதிகள் மற்றும் முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றார்.