spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு விடுத்த ‘73வது குடியரசுத் திருநாள்’ செய்தி!

பாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு விடுத்த ‘73வது குடியரசுத் திருநாள்’ செய்தி!

- Advertisement -

73ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தியின் தமிழாக்கம் – 2022

பிரியமான நாட்டு மக்களே, வணக்கம்...

73ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் என்னுடைய இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.  நம்மனைவரையும் ஒரே இழையில் இணைக்கும் பாரதீயத்துவத்தின் மாட்சிமையின் கொண்டாட்டம் இது.  1950ஆம் ஆண்டிலே, இன்றைய தினத்தன்று, நம்மனைவரின் இந்த கௌரவமிக்க அடையாளத்திற்கு முறையானதொரு வடிவம் கிடைத்தது.  அன்று தான் பாரதம் உலகின் மிகப்பெரிய குடியரசு என்ற வகையில் நிறுவப்பட்டது, பாரத நாட்டு மக்களான நாம், நம்முடைய சமூக விழிப்பின் உயிர்ப்புநிறை ஆவணமான அரசியலமைப்புச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தினோம்.  நம்முடைய பன்முகத்தன்மை மற்றும் வெற்றிகரமான மக்களாட்சி, உலகம் முழுவதிலும் பாராட்டப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் திருநாளன்று நாம் நமது வளர்ச்சிகாணும் மக்களாட்சி முறை மற்றும் தேச ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடுகிறோம்.  பெருந்தொற்றின் காரணமாக இந்த ஆண்டின் கொண்டாட்டம் குறைவானதாக இருந்தாலும், நமது உணர்வு எப்போதும் போலவே சக்தியுடையதாக இருக்கிறது.

குடியரசுத் திருநாள் என்ற இந்த தினம், தன்னாட்சிக் கனவுகளை மெய்ப்பிக்க ஈடு இணையற்ற சாகஸங்களை நிகழ்த்தியதோடு, இதன் பொருட்டு போராட நாட்டுமக்களுக்கும் உற்சாகம் அளித்த அந்த மாமனிதர்களையும் நினைத்துப் பார்க்கும் ஒரு வாய்ப்பாகும்.  இரண்டு நாட்கள் முன்பாகத் தான், ஜனவரி மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டுமக்களான நாமனைவரும் ஜய் ஹிந்த் என்ற கோஷத்தை முன்வைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125ஆவது பிறந்த நாளன்று அவரை நினைவில் கொண்டது.  சுதந்திரத்தின் பொருட்டு அவருடைய தாகம், பாரதநாட்டை கௌரவம் மிக்கதாக ஆக்க வேண்டும் என்ற அவருடைய பேராவல், நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ஊற்றாக விளங்குகிறது. 

நமது அரசியலமைப்புச் சட்டத்தை நிர்மாணம் செய்த குழுவில் அந்தக் காலகட்டத்தின் மிகவுயர்ந்த ஆளுமைகள் பிரதிநிதிகளாக இருந்தார்கள் என்பது நமது மிகப்பெரிய பேறு என்று தான் சொல்ல வேண்டும்.  அவர்கள் நமது மகத்தான சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான கொடிதாங்கிகளாக இருந்தார்கள்.    நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பாரதத்தின் தேசிய உணர்வு மீள் எழுச்சி காணத் தொடங்கியது.  இந்த வகையிலே, இந்த அசாதாரணமான பெண்களும் ஆடவர்களும், ஒரு புதிய விழிப்பின் அற்புதமான பங்களிப்பை அளிக்கத் தொடங்கினார்கள்.  அவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு உட்பிரிவு, வாக்கியம் மற்றும் சொல்லிலும், சாமான்ய மக்களின் நலன் தொடர்பாக விரிவான வகையிலே உரைத்தார்கள்.  இந்த கருத்துக் கடைசல் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வரை நடந்து வந்தது.  டாக்டர் பாபாசாஹப் ஆம்பேட்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவர் என்ற முறையில், அரசியல் அமைப்புச் சட்டத்தை அதிகாரபூர்வமாக சமர்ப்பித்தார். இதுவே நமது ஆதார ஆவணமாக மாறியது.

நமது அரசியலமைப்புச் சட்ட வடிவம் விரிவானதாக ஏன் இருக்கிறது என்றால், அதில் மாநிலங்களின் செயல்பாடுகளின் அமைப்பும் விரித்துரைக்கப்பட்டிருக்கிறது.  அதே வேளையில், அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் மக்களாட்சி முறை, நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகள், சாறு பொதிந்த வகையில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.  இந்த நெறிமுறைகளின் ஆதாரத்தில் தான் அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்டிருக்கிறது.  இந்த வாழ்க்கை விழுமியங்களில் தான் நமது சமூக பாரம்பரியமும் பிரதிபலிக்கிறது.

இந்த வாழ்க்கை விழுமியங்களுக்கு, அடிப்படை உரிமைகள் மற்றும் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் என்ற வகையில் நமது அரசியல் அமைப்புச்சட்டம் வாயிலாக முதன்மையான மகத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது, இதற்கு இருபக்கங்கள் உள்ளன.  அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிக்கப்பட்டிருக்கும் அடிப்படைக் கடமைகளைக் குடிமக்கள் பின்பற்றி நடக்கும் பொழுது, அடிப்படை உரிமைகளுக்கான முழுமையான சூழல் ஏற்படுகிறது.  அழைப்பு விடுக்கப்பட்ட பொழுது, நாட்டிற்கு சேவையாற்றுவது என்ற அடிப்படைக் கடமையை நிறைவேற்றும் வண்ணம் நமது கோடிக்கணக்கான நாட்டுமக்களும் தூய்மை இயக்கம் தொடங்கி, கோவிட் தடுப்பூசி இயக்கம் வரை, ஒரு மக்கள் பேரியக்கமாக மாற்றினார்கள்.  இப்படிப்பட்ட இயக்கங்களின் வெற்றிக்கான மிகப்பெரிய நன்மதிப்பும் கடமையாற்றுவதிலே கருத்தாக இருந்த நமது குடிமக்களையே சாரும்.  நமது நாட்டுமக்கள் இதே கடமையுணர்வோடு, தேச நலன் தொடர்பான இயக்கங்களில் தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்துத் தொடர்ந்து பலப்படுத்தி வருவார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பிரியமான நாட்டுமக்களே,

பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று, அரசியலமைப்புச் சட்ட அவை வாயிலாக அங்கீகரிக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டது.  அந்த நாளைத் தான் நாம் அரசியலமைப்புச் சட்ட நாளாக கொண்டாடுகிறோம்.  இதற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியன்று நமது அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக அமல் செய்யப்பட்டது.  நாட்டு மக்கள் முழுமையான சுதந்திரத்தை அடைந்தே தீருவது என்ற உறுதிப்பாட்டை மேற்கொண்ட 1930ஆம் ஆண்டினை நினைவில் கொள்ளும் வகையிலே இவ்வாறு செய்யப்பட்டது.  1930 முதல் 1947 வரை, ஒவ்வொரு ஆண்டும் ஜன்வரி மாதம் 26ஆம் தேதி பூரண சுயராஜ்ஜிய தினமாகக் கொண்டாடப்ப்பட்டது.  ஆகவே அதே நாளன்று அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக வழக்கத்திற்குக் கொண்டு வருவது என்று தீர்மானிக்கப்பட்டது.

1930ஆம் ஆண்டு காந்தியடிகள் நாட்டுமக்களுக்கு பூரண சுயராஜ்ஜிய தினத்தைக் கொண்டாடும் வழிமுறையை விளங்க வைத்தார்.  அவர், ”நாம் நமது இலக்கை அகிம்சையான, வாய்மையான முறையிலே, அடைய விரும்புகிறோம்; ஆன்ம சுத்தி வாயிலாக மட்டுமே இதை நம்மால் செய்ய முடியும். ஆகையால் நாம் நமது நாட்களை, நம்மால் இயன்ற வகையில் ஏதாவது ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடுத்த வேண்டும்” என்று கூறினார்.

இயன்ற அளவுக்கு ஆக்கப்பூர்வமான செயல்களைப் புரிய, காந்தியடிகள் அளித்த இந்த உபதேசம் என்றுமே கருத்தில் கொள்ளத்தக்கதாக இருக்கும்.  அவருடைய விருப்பத்திற்கு இணங்க, குடியரசுத் திருநாளைக் கொண்டாடும் தினத்தன்றும் சரி, அதன் பிறகும் சரி, நம்மனைவரின் சிந்தனையிலும் செயலிலும் ஆக்கப்பூர்வமான விஷயங்களே இருக்க வேண்டும்.  நாமனைவரும் நமக்குள்ளே கூர்ந்து பார்த்து, ஆன்ம பரிசோதனை செய்து, மேலும் சிறப்பான மனிதனாக மாறும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.  இதன் பிறகு நாம் வெளியே கவனித்து, மக்களோடு கைகோர்த்து, ஒரு சிறப்பான பாரதம் மற்றும் மேம்பட்ட உலகை உருவாக்க நம்முடைய பங்களிப்பை அளிக்க வேண்டும்.

அன்பான நாட்டுமக்களே,

இன்று இருப்பது போல பரஸ்பர ஒத்துழைப்பிற்கான தேவை மனித சமூகத்திற்கு இது வரை ஏற்பட்டதில்லை.  ஈராண்டுகள் கடந்த இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான மனித சமூகத்தின் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது.  இந்தப் பெருந்தொற்றிலே ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.  ஒட்டுமொத்த உலகின் பொருளாதார நிலையும் சீர்கேடு அடைந்திருக்கிறது.  தினமும், புதிய வடிவங்களில் இந்தக் கிருமி புதிய சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.  இந்த நிலை, மனித சமூகத்திற்கு எதிரான ஒரு அசாதாரணமான சவாலாக உருவெடுத்திருக்கிறது.

பெருந்தொற்றுக்கு எதிரான பாரதத்தின் போராட்டம் என்பது எதிர்பார்த்தபடியே கடினமானதாகவே இருந்தது.  நமது நாட்டில் மக்கள்தொகை மிகச் செரிவான ஒன்று, வளர்ந்துவரும் பொருளாதாரம் என்ற முறையிலே நம்மிடத்திலே, இந்த அடையாளம் தெரியாத எதிரியோடு போராடத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளும், அவசியமான கருவிகளும் போதுமான அளவிலே இல்லாமல் இருந்தது.  ஆனால் இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் தான் எந்த ஒரு தேசத்தின் போராடும் திறன் பளிச்சிடுகிறது.  கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக அசாதாரணமான உறுதிப்பாட்டையும், செயல்திறனையும் நாம் வெளிப்படுத்தி இருக்கிறோம் என்பதைக் கூறும் போது எனக்கு மிகுந்த பெருமிதம் உண்டாகிறது.  முதலாம் ஆண்டிலேயே, நாம் சுகாதாரச் சேவைகளின் அடிப்படை அமைப்பினை விரிவானதாகவும் பலமானதாகவும் உருமாற்றினோம்.  மற்ற நாடுகளுக்கு உதவிக்கரமும் நீட்டினோம்.  இரண்டாம் ஆண்டுக்குள்ளாக, நாம் உள்நாட்டிலேயே தயாரித்த தடுப்பூசியை உருவாக்கி, உலக வரலாற்றின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை ஆரம்பித்தோம்.  இந்த இயக்கம் விரைவு கதியில் முன்னேறி வருகிறது.  நாம் பல நாடுகளுக்கும் தடுப்பூசி மற்றும் சிகிச்சை தொடர்பான பிற வசதிகளை அளித்திருக்கிறோம்.  பாரதத்தின் இந்தப் பங்களிப்பு உலக அமைப்புகளின் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, சங்கடங்கள் தொடர்ந்து வரத் தொடங்கின, ஏனென்றால் இந்த நோய்க்கிருமி உருமாற்றம் பெற்று மீண்டும் வந்து கொண்டிருக்கிறது.  எண்ணற்ற குடும்பங்கள், பயங்கரமான கஷ்டத்தில் உழன்று கொண்டிருக்கின்றன.  நமது சமூகம் அனுபவித்து வரும் சிரமத்தை என்னால் சொற்களில் வடிக்க இயலாது.  ஆனால் பலருடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன என்பது மட்டுமே சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயம்.  பெருந்தொற்றின் தாக்கம் இப்பொழுதும் கூட பரவலான வகையில் தொடர்கிறது என்பதால், நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும், நமது பாதுகாப்பு விஷயத்தில் சற்றும் கூட தளர்வாக இருக்கக் கூடாது.  நாம் இதுவரை கடைப்பிடித்த முன்னெச்சரிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வர வேண்டும்.  முகக்கவசத்தை அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், கோவிட் பெருந்தொற்றோடு தொடர்புடைய வழிகாட்டுதல் நெறிமுறைகளை முக்கியமானவையாகப் பின்பற்றி நடக்க வேண்டும்.  கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போரில், விஞ்ஞானிகள் மற்றும் வல்லுனர்கள் வாயிலாகப் பரிந்துரைக்கப்படும் முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவது இன்று நாட்டுமக்கள் ஒவ்வொருவரின் தேசியக் கடமையாக இருக்கிறது. நாம் இந்த சங்கடத்திலிருந்து விடுபடும் வரை, இந்த தேசியக் கடமையை நாம் பின்பற்றியே ஆக வேண்டும்.

சங்கடம் நிறைந்த இந்த வேளையில், நாட்டுமக்களான நாமனைவரும் எப்படி ஒரு குடும்பமாக பரஸ்பர ஒற்றுமையோடு இருக்கிறோம் என்பதைக் காண முடிந்தது.  சமூக இடைவெளி என்ற இந்தக் கடினமான வேளை நம்மனைவரிடத்திலும் நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  ஒருவரை ஒருவர் நாம் எந்த அளவுக்குச் சார்ந்திருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்தோம்.  கடினமான சூழ்நிலைகளில், மணிக்கணக்காகப் பணியாற்றி, நோயாளிகளை கவனித்துக் கொள்ளத் தங்களுடைய உயிரையே பணயம் வைத்து, மருத்துவர்களும், செவிலியர்களும், துணை மருத்துவப் பணியாளர்களும், மனித சேவை புரிந்திருக்கிறார்கள்.  பல பேர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு எந்த விதமான இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்தார்கள், விநியோகச் சங்கிலிகள் சீராக இருப்பதை உறுதிப்படுத்தினார்கள்.  மத்திய மாநில அளவில் சமூக சேவகர்கள், கொள்கை வரையறுப்பவர்கள், நிர்வாகத்தினர் மற்றும் பிறர், காலத்திற்கேற்ப முடிவுகளை மேற்கொண்டார்கள்.

இந்த முயற்சிகளின் துணையோடு தான் நமது பொருளாதார அமைப்பிலே மீண்டும் வேகம் பிறக்கத் தொடங்கி இருக்கிறது.  எதிர்மறையான சூழ்நிலைகளிலும் கூட பாரத த்தின் உறுதிப்பாட்டின் அத்தாட்சி என்று சொன்னால், கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி ஈர்க்கக்கூடிய வகையில் இருக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது.   இது கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட தற்சார்பு பாரதம் இயக்கத்தின் வெற்றியை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.  பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் மேம்பாட்டைப் புகுத்தவும், தேவைக்கு ஏற்றவாறு உதவிகளைப் புரியவும் அரசாங்கம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது.  இந்த கருத்தைக் கவரும் பொருளாதாரச் செயல்பாட்டிற்குப் பின்னால் விவசாயம் மற்றும் தயாரிப்புத் துறைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் பங்களிப்பு மகத்தானது.  நமது விவசாயிகள், குறிப்பாக சிறிய நிலப்பகுதிகளை வைத்திருக்கும் இளம் விவசாயிகள், இயற்கை விவசாயத்தில் உற்சாகமாக ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்து எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், பொருளாதார அமைப்பின் வேகத்தைக் கூட்டவும் சிறு மற்றும் குறு தொழில்கள் மகத்துவமான பங்களிப்பை அளித்திருக்கின்றன.  நமது நூதனமான இளம் தொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் சூழல்முறைகளை, சிறப்பான முறையிலே பயன்படுத்தி, புதிய வெற்றிச் சிகரங்களைத் தொட்டு வருகிறார்கள்.  ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு வருவது என்பது நமது தேசத்தின் மேம்பட்ட, விசாலமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளத்தின் வெற்றிக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

மனித வளத்தால் பயனடைதல் அதாவது மக்கள்தொகை ஆதாயத்தைப் பெற, நமது பாரம்பரியமான வாழ்க்கை விழுமியங்கள் மற்றும் நவீன திறன்களின் சீரிணைவு நிறைந்த தேசிய கல்விக் கொள்கை வாயிலாக, அரசாங்கம் முழுமையானதொரு சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.  உலகின் முதல் 50 புதுமையான பொருளாதாரங்களில் பாரதம் இடம் பிடித்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை நாம் முன்னிறுத்தும் அதே வேளையில், தகுதிக்கும் தகுந்த இடத்தை அளிப்பதால் இந்தச் சாதனை மேலும் மகிழ்ச்சியை அளிப்பதாக விளங்குகிறது.

சகோதர சகோதரிகளே,

கடந்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் நமது விளையாட்டு வீரர்கள் அற்புதமாக விளையாடி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தார்கள்.  இந்த இளம் வெற்றியாளர்களின் தன்னம்பிக்கை, இலட்சக்கணக்கான நாட்டுமக்களுக்கு இன்று உத்வேகம் அளித்து வருகிறது.

தற்போது பல்வேறு துறைகளில் நாட்டுமக்களின் அர்ப்பணிப்பு மற்றும் செயல்பாடு வாயிலாக, தேசம் மற்றும் சமூகத்திற்கு பலம் அளிக்கும் பல சிறப்பான எடுத்துக்காட்டுக்களை பார்க்க முடிந்திருக்கிறது.  இவற்றில் நான் இரண்டு எடுத்துக்காட்டுக்களை மட்டுமே கூற விரும்புகிறேன்.  இந்திய கடற்படை மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் அர்ப்பணிப்பு நிறைந்த குழுக்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிக நவீனமான விமானம் தாங்கிக் கப்பலான ஐ.ஏ.சீ. விக்ராந்தினை உருவாக்கி இருக்கிறார்கள்; இது நமது கடற்படையில் இணைக்கப்பட இருக்கிறது.  இப்படிப்பட்ட நவீன கடற்படைத் திறன்களின் பலத்தில் தான் இப்போது பாரதம் உலகின் முதன்மையான கடற்படை சக்தி நிறைந்த நாடுகள் வரிசையில் இடம் வகிக்கிறது.  இது பாதுகாப்புத் துறையில் தற்சார்பை நோக்கி முனைப்புடன் இருப்பது என்பதற்கான கருத்தைக் கவரும் எடுத்துக்காட்டு.  இதிலிருந்து சற்று விலகி, ஒரு சிறப்பான அனுபவம் என் இதயத்தை வெகுவாகத் தொட்டது.  ஹரியாணாவின் பிவானி மாவட்டத்தில் சுயி என்ற பெயருடைய கிராமத்தின் விழிப்புணர்வுடைய சில குடிமக்கள் தங்கள் புரிந்துணர்வு மற்றும் கடமையுணர்வை வெளிப்படுத்தும் வகையில், சுயமாக உத்வேகம் பெற்ற ஆதர்ஸ கிராமத் திட்டத்தின்படி, தங்களுடைய கிராமத்தை உருமாற்றியிருக்கிறார்கள்.  தங்களுடைய கிராமம், அதாவது தங்களுடைய தாய் மண்ணின் மீது கொண்ட பற்றுதல் மற்றும் நன்றியுணர்வால் உந்தப்பட்ட இது பின்பற்றப்படக்கூடிய ஒரு எடுத்துக்காட்டு.  நன்றியுணர்வு படைத்தவர்களின் இதயத்தில் தங்களுடைய தாய்நாட்டின் மீது, வாழ்நாள் வரையிலுமான வாஞ்சையும், அர்ப்பணிப்பும் நீடித்திருக்கும்.  இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகளால், ஒரு புதிய பாரதம் மலர்கிறது என்ற என்னுடைய நம்பிக்கை மேலும் உறுதிப்படுகிறது.  சக்தி படைத்த பாரதம் மற்றும் புரிந்துணர்வு உடைய பாரதம்.  இந்த எடுத்துக்காட்டிலிருந்து உத்வேகம் அடைந்து திறன்மிகு நாட்டுமக்கள் பிறரும், தங்களுடைய கிராமங்கள் மற்றும் நகரங்களை மேம்படுத்த தங்களுடைய பங்களிப்பை அளிக்க முன்வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்த வேளையில் நாட்டுமக்களான உங்கள் அனைவரிடத்திலும் ஒரு சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்.  கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் எனது பிறந்த இடமான அதாவது என்னுடைய கிராமமான பரௌங்க் செல்லும் பேறு கிடைத்தது.  அங்கே சென்றவுடனேயே, இயல்பாகவே என்னுடைய கிராமத்தின் மண்ணை என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் உணர்வு ஏற்பட்டது. ஏனென்றால், என் கிராம பூமியின் ஆசிகளின் பலத்தாலேயே என்னால் குடியரசுத் தலைவர் மாளிகை வரை செல்ல முடிந்திருக்கிறது என்பதே எனது நம்பிக்கை.  உலகிலே எங்கு நான் சென்றாலும், என்னுடைய கிராமமும், என்னுடைய பாரதமும் நீக்கமற என்னில் நிறைந்திருக்கின்றன.  தங்களுடைய உழைப்பு மற்றும் திறமைகளால் வாழ்க்கை ஓட்டத்தில் முன்னேறியவர்களிடத்தில் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் உங்களுடைய வேர்களை, உங்களுடைய கிராமங்கள்-நகரங்களோடு, உங்கள் மண்ணோடு கொண்ட தொடர்புகளை என்றுமே நினைவில் இருத்திக் கொள்ளுங்கள் என்பதே. இதோடு கூடவே, நீங்கள் உங்கள் பிறந்த இடம் மற்றும் தேசத்திற்கு என்ன சேவையை உங்களால் செய்ய முடியுமோ, அதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள்.  பாரதத்தின் வெற்றியாளர்கள் அனைவரும் அவரவருடைய பிறந்த இடங்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புணர்வுடன் செயல்களைச் செய்தால், வட்டார வளர்ச்சியின் அடிப்படையில் தேசம் முழுவதும் வளர்ச்சியடையும்.

பிரியமான நாட்டுமக்களே,

இன்று, நமது இராணுவ மற்றும் பாதுகாப்புப் படையினர் தேசத்தின் கௌரவம் என்ற மரபினை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.  இமயத்தின் தாங்கவொண்ணா குளிர் மற்றும் பாலைவனத்தின் கொடூரமான வெப்பத்தில், தங்கள் குடும்பங்களை விட்டு விலகி, அவர்கள் தாய்த்திருநாட்டின் பாதுகாப்பிற்காக விழிப்போடு இருக்கிறார்கள்.  நமது ஆயுதப்படையினர் மற்றும் காவல் படையினர், தேசத்தின் எல்லைகளைப் பாதுகாப்பதோடு, உள்நாட்டுப் பாதுகாப்பினை உறுதி செய்ய இரவுபகலாக விழிப்போடு இருக்கிறார்கள்; இதனால் தான் நாட்டுமக்கள் அனைவராலும் நிம்மதியாக உறங்க முடிகிறது.  படைவீர்ர் ஒருவரது மரணம் நிகழ்ந்தால், நாடு முழுவதும் சோகத்தால் பீடிக்கப்படுகிறது.  கடந்த மாதம் ஒரு விபத்தில் தேசத்தின் மிகவும் சாகஸமான படைத்தலைவர்களில் ஒருவரான தளபதி பிபின் ராவத் அவர்கள், அவருடைய மனைவி மற்றும் பல வீரர்களை நாம் இழந்திருக்கிறோம்.  இந்த விபத்தின் காரணமாக நாட்டுமக்கள் அனைவருக்கும் ஆழமான துக்கம் உண்டானது.

சகோதர சகோதரிகளே,

நாட்டுப்பற்று உணர்வு, நாட்டுமக்களின் கடமையுணர்வுக்கு மேலும் பலம் சேர்க்கிறது.  நீங்கள் மருத்துவராகவோ, வழக்குரைஞராகவோ, கடைக்காரராகவோ, அலுவலகத்தில் பணிபுரிபவராகவோ, தூய்மைப் பணியாளராகவோ, தொழிலாளியாகவோ யாராக இருந்தாலும், உங்களுடைய கடமைகளை திறமையோடும், அர்ப்பணிப்போடும் ஆற்றுவது தான், தேசத்தின் பொருட்டு உங்கள் முதன்மையான மற்றும் மிகவும் மகத்துவமான பங்களிப்பாகும்.

ஆயுதப்படையினரின் முதன்மைத் தளபதி என்ற வகையில், இந்த ஆண்டு ஆயுதப்படைகளில் பெண்களின் அதிகாரமளித்தல் என்ற முறையில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது என்பதைத் தெரிவிப்பதில் நான் பேருவகை அடைகிறேன்.  நமது பெண்கள் பாரம்பரியமான எல்லைகளைக் கடந்திருக்கிறார்கள், இப்போது புதிய துறைகளில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரமான கமிஷன் என்ற வாய்ப்பு தொடங்கப்பட்டு விட்டது.  இதோடு கூடவே, இராணுவப் பள்ளிகளிலும், புகழ்மிக்க தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் தேர்ச்சி பெறுவதற்கான பாதை வகுக்கப்படுவதால், படைகளின் திறமைத் தேவைகள் நிறைவு பெறுவதோடு, நமது படைகளுக்கு பாலின சமத்துவத்தின் ஆதாயமும் கிடைக்கும்.

எதிர்கால சவால்களை எதிர்கொள்வதில் பாரதம் இன்று சிறப்பான நிலையில் இருக்கிறது.  21ஆம் நூற்றாண்டு நீர் மற்றும் காற்றின் மாற்றத்திறகான யுகமாகப் பார்க்கப்படுகிறது, பாரதம் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் தனது சாகஸமும், மகத்துவமான இலக்குகளோடு உலக அரங்கில் தலைமை இடத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது.  தனிப்பட்ட முறையிலே, நாம் ஒவ்வொருவதும் காந்தியடிகளின் அறிவுரைப்படி, நமது அருகிலே இருக்கும் சூழலை மேம்படுத்த நம்முடைய பங்களிப்பை அளிக்க வேண்டும்.  பாரதம் உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாகவே கருதி வந்திருக்கிறது.  உலக சகோதரத்துவத்தின் இந்த உணர்வோடு, நமது தேசமும், ஒட்டுமொத்த மனித சமுதாயமும் மேலும் அதிக சமரசமும், நிறைவும் உடைய எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

பிரியமான நாட்டுமக்களே,

நமது தேசம், சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவு என்ற வரலாற்றுப்பூர்வமான கட்டத்தை இந்த ஆண்டு கடக்க இருக்கிறது.  இந்த வேளையை நாம் சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவம் என்ற முறையிலே கொண்டாடி வருகிறோம்.  பெரிய அளவிலே நமது நாட்டுமக்கள், குறிப்பாக நமது இளைஞர்கள், இந்த வரலாற்றுபூர்வமான ஏற்பாடுகளில் உற்சாகத்தோடு பங்கெடுத்து வருகிறார்கள் என்பது எனக்கு பேருவகையை அளிக்கிறது.  இது வருங்காலத் தலைமுறையினருக்கு மட்டுமன்றி, நம்மனைவருக்குமே நமது கடந்த காலத்தோடு இணைந்து கொள்ளும் ஒரு பொன்னான வாய்ப்பாக மிளிர்ந்திருக்கிறது.  நமது சுதந்திரப் போராட்டம், நமது கௌரவமிக்க வரலாற்றுப் பயணத்தின் ஒரு உத்வேகம் அளிக்கும் அத்தியாயம். சுதந்திரத்தின் இந்த 75ஆவது ஆண்டு, நமது மகத்தான தேசிய இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த அந்த வாழ்க்கை விழுமியங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் காலம்.  நமது சுதந்திரத்தின் பொருட்டு பல வீராங்கனைகளும், மைந்தர்களும் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.  சுதந்திரத் திருநாள் மற்றும் குடியரசுத் திருநாள் என்ற திருநாட்கள், எத்தனையோ துயர்கள் மற்றும் தியாகங்களின் பலனாகவே நமக்கு வாய்த்திருக்கின்றன.  வாருங்கள்! குடியரசுத் திருநாள் என்ற இந்த வேளையிலே நாமனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு, அமரர்களான அந்தத் தியாகிகளையும் நினைவில் கொள்வோம்.

பிரியமான நாட்டுமக்களே,

நாம் ஒரு இளம் குடியரசு என்றாலும், நமது நாகரீகம் பழமையானது.  தேசத்தைக் கட்டமைப்பது என்பது தொடர்ந்து நடைபெறும் ஒரு இயக்கம்.  ஒரு குடும்பத்தில் நடப்பதைப் போலவே தான் ஒரு நாட்டிலும் நடக்கிறது.  ஒரு தலைமுறையானது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதில் கடுமையாக உழைக்கிறது.  நாம் சுதந்திரம் பெற்ற போது, காலனி ஆதிக்கத்தின் சுரண்டல்கள் காரணமாக, நாம் கொடுமையான ஏழ்மைநிலையில் தள்ளப்பட்டிருந்தோம்.  ஆனால் அதன் பிறகு 75 ஆண்டுகளில் நாம் ஈர்க்கத்தக்க முன்னேற்றம் அடைந்திருக்கிறோம்.  இப்போது இளம் தலைமுறையினருக்கு சந்தர்ப்பங்களின் புதிய வாயில்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.  நமது இளைஞர்கள், இந்த சந்தர்ப்பங்களால் ஆதாயம் பெற்று, புதிய அளவுகோல்களை நிறுவி இருக்கிறார்கள்.  இதே ஆற்றல், தன்னம்பிக்கை மற்றும் தொழில்முனைவுடன், நமது தேசம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறி, தனது திறமைகளுக்கு ஏற்ப உலக சமுதாயத்தில் தனது முன்னணி இடத்தைக் கண்டிப்பாக எட்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நான் உங்களனைவருக்கும் மீண்டும் குடியரசுத் திருநாளுக்கான இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

நன்றி. ஜெய் ஹிந்த்!!

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸம்,
ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe