சென்னை அருகே உறை கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம் பெருங்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகரை சேர்ந்தவர் சரவணன் (49). இவர், திருவான்மியூரில் அச்சகம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் உள்ள சுமார் 7 அடி ஆழம் கொண்ட உறை கிணற்றை சுத்தம் செய்ய முடிவு செய்தார். இதற்காக நீலாங்கரையை சேர்ந்த காளிதாஸ் (55) என்பவருடன் சேர்ந்து உறை கிணற்றை சுத்தம் செய்தார். அப்போது திடீரென கிணற்றில் இருந்து வந்த விஷவாயு தாக்கியதில் காளிதாஸ் மயங்கி கிணற்றில் விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன், காளிதாசை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் விஷவாயு தாக்கியதில் அவரும் கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் விழுந்த 2 பேரையும் மீட்டனர். ஆனால் சரவணன், காளிதாஸ் இருவரும் விஷவாயு தாக்கியதில் பரிதாபமாக இறந்து விட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த துரைப்பாக்கம் போலீசார், பலியான 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.