சென்னை: உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சன்னி உலோமா கவுன்சில் பொதுச் செயலாளர் முகமது சலீஸ், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிர்வாகி இந்திரேஷ் குமாரிடம் ஆறு கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு அவர், இது சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் நான் கருத்து கூறுவதைவிட ஒரு பொதுக் கூட்டத்தின் வாயிலாக எல்லோருக்கும் எனது பதிலை தரத் தயாராக இருக்கிறேன் என்பதை பதிவு செய்துள்ளார். இதனைப் படித்தபோது, நான் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகன் என்ற முறையில் என்னுடைய பதிலை இங்கே பதிவு செய்கிறேன் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் பதிவு செய்துள்ளார். அவரது பதில்கள்:
- இந்தியாவை ஆர்.எஸ்.எஸ். ஒரு ஹிந்து நாடாக கருதுகிறதா?
இது போன்ற கேள்விகளை கேட்பது அவர்கள் தங்களை பெரியவர்களாக நினைத்துக்கொண்டு ஹிந்துக்களை கேள்வி கேட்கிறார்கள். இது அகங்காரத்தின் உச்சக்கட்டம். இந்தியா என்ற பெயர் யாரால் வைக்கப்பட்டது. அதற்கு முன்னால் இந்த நாட்டுக்கு ஒரு பெயர் இருந்ததல்லவா? அது என்ன? அது தான் பாரதம், ஹிந்துஸ்தானம் என்பது இவர்களுக்கு புரிகிறதா? அல்லது திமிர்த்தனமான மனப்பான்மை காரணமாக அல்லது சிறுபான்மையினருக்கு செல்லம் கொடுத்ததால், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அருவெறுக்ககத்தக்க ஆணவமா? தன்மானம் உள்ள எந்த ஹிந்துவாலும் இந்தக் கேள்வியை சகித்துக்கொள்ள முடியாது.
- இந்தியாவை ஒரு ஹிந்து நாடாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ். ஒரு வடிவத்தை தயாரித்து வைத்திருக்கிறதா?
இந்தக் கேள்வியும் திமிர்த்தனம்தான். ஹிந்து நாடாக மாற்ற தேவையே இல்லை. இது ஏற்கனவே பல்லாயிரம் ஆண்டுகளாக ஹிந்து நாடாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
- ஹிந்து நாடு ஹிந்து மத நூல்களின்படிதான் அமையுமா?
இந்தக் கேள்வியும் எரிச்சல் ஊட்டக்கூடியது. மத நூல்கள்படி இது தர்ம ராஜ்ஜியம். புதிய சித்தாந்தங்கள் எதையும் ஆர்.எஸ்.எஸ். வகுக்கத் தேவையில்லை, பாரதம் எப்பொழுதுமே மதச்சார்பற்ற நாடாகத்தான் இருந்திருக்கிறது. அசோக மன்னர்தான், இந்த நாட்டில் பௌத்த மத கருத்துகளின்படி ஆட்சியை நடத்தினார்.
- மத மாற்றத்தை விரும்புகிறீர்களா?
இந்தக் கேள்வியும் அர்த்தமற்றது. இந்த நாட்டில் அனைவரையும் முஸ்லிம்களாக மாற்ற இவர்கள் முயற்சிக்கவோ அல்லது ஆசைப்படவோ இல்லையா?
- ஒவ்வொரு ஹிந்துவுக்கும் இருக்கிற தேசபக்தியைதான் முஸ்லிம்களிடமிருந்தும் ஆர்.எஸ்.எஸ். எதிர்பார்க்கிறது, விரும்புகிறது.
- ஹிந்து தர்மத்தை மதிக்கிற, பிற மதங்களை வெறுக்காத சமயத்தைத்தான் ஆர்.எஸ்.எஸ். எதிர்பார்க்கிறது.
சிறுபான்மையினர் என்றால் யாரிடமும் எந்த கேள்வியையும் கேட்கலாம் என்ற நினைப்பு அதிகார தோரனை இவர்களிடம் இல்லை என்று இவர்கள் கருதுகிறார்களா? பார்சிகளோ, கிறிஸ்தவர்களோ, யூதர்களோ கூட இப்படிப்பட்ட கேள்விகளை கேட்காத போது இவர்கள் கேட்க காரணம் என்ன என்பதை ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும். சிறுபான்மையினருடன் நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திரேஷ்ஜி முஸ்லீம் ராஷ்டீரிய மன்ச் என்ற இந்த அமைப்பை நடத்திவருகிறார். இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பதன் மூலம் ஹிந்துக்கள் மனதில் கசப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்ற நினைப்பு இவர்களுக்கு இருக்குமானால் அதற்கு ஆர்.எஸ்.எஸ். ஒருநாளும் பலியாகாது.