சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் இன்று பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடிகளை ஏற்றியும், கருப்பு பலூன்களை பறக்க விட்டும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, திமுக தலைவர் கருணாநிதிக்கும் கருப்புச் சட்டையை அணிவித்துள்ளனர். ஆனாலும் அவர் தோளில் போட்டுள்ள மஞ்சள் துண்டில் கை வைக்கவில்லை. மஞ்சள் துண்டு, கறுப்புச் சட்டையுடன் கருணாநிதியின் புகைப்படம் இப்போது சமூகத் தளங்களில் வைரலானது.
முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
பிரதமர் மோடி தமிழகம் வரும் நாளை துக்க நாளாக கடைபிடிக்கும் வகையில், 12ம் தேதி எல்லோருடைய வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்ற வேண்டுமென்றும், அனைவரும் கறுப்பு உடையணிய வேண்டும் என்றும், கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் திமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயம், கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீடு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.