
மும்பை: சென்னையில் நடத்த திட்டமிடப் பட்டிருந்த ஐபிஎல்., போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டன.
ஐபிஎல் சீசன் 11 இப்போது களை கட்டியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக நீதிமன்றத்தின் தடையை எதிர்கொண்டிருந்த சென்னை சூபர் கிங்க்ஸ் அணி, இந்த ஆண்டு மீண்டும் களம் புகுந்துள்ளது.
சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன் பெங்களூரு, பஞ்சாப் உள்ளிட்ட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. 10 ஆம் தேதி, சென்னையில் சென்னை– கோல்கட்டா அணிகள் மோதிய போட்டி பலத்த எதிர்ப்புகளைக் கடந்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணி வென்றது. இருப்பினும் மைதானத்தினுள் செருப்பு வீச்சு நடைபெற்றது. மைதானத்துக்கு வெளியே தடியடி, காவல்துறையினர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் என வன்முறைகள் அரங்கேறின.
இந்நிலையில், வீரர்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் நடக்க இருந்த 6 போட்டிகள் திருவனந்தபுரம், புனே, விசாகப்பட்டினம், ராஜ்கோட் ஆகிய நான்கு இடங்களில் ஏதாவது ஒன்றில் மாற்றப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஆறு போட்டிகளும் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐபிஎல், தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,‘‘ சென்னையில் போட்டிகள் நடத்த பாதுகாப்பு தர இயலாது என போலீசார் கூறிவிட்டனர். எனவே மீதமுள்ள போட்டிகளை புனே நகருக்கு மாற்றியுள்ளோம்’’ என்றார்.
இதை அடுத்து, தங்கள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும், தங்கள் போராட்டத்துக்கு பயந்து, போட்டிகள் தமிழகத்தை விட்டு மாற்றப் பட்டுள்ளதாகவும் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளனர் எதிர்ப்பாளர்கள்.



