சென்னையில் மோடி; வரவேற்ற முதல்வர்: எதிர்க்கட்சியினர் கறுப்புக் கொடி போராட்டம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

modi eps - 2026

சென்னை: சென்னை திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியைத் திறந்து வைப்பதற்காக, பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணி அளவில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் தில்லியில் இருந்து வந்திறங்கிய அவரை முதல்வர் எடப்பாடி வரவேற்றார்.

எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே சென்னை வந்துள்ளார் மோடி. அவரை மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

modi in airport - 2026

பின்னர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராணுவக் கண்காட்சி நடக்கும் திருவிடந்தை பகுதிக்குச் சென்றார். அங்கு அவரை அதிகாரிகள் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதனிடையே  பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் கறுப்புக் கொடி காட்டி, மோடி வருகைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களும், போராட்டங்களும் நடத்தினர்.

மோடி வருகைக்காக விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பை மீறி போராட்டக்காரர்கள் முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை அங்கிருந்து போலீஸார் அப்புறப் படுத்தினர்.

சென்னை விமான நிலையம் முன்பு பல்வேறு அமைப்புகளின் சாலை மறியல் போராட்டம் காரணமாக கடும் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. அலுவலக நேரம் காரணமாக தாம்பரம் கிண்டி விமான நிலைய சாலையில் மூன்று கிலோமீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையாக தேங்கின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.