அமைச்சர் ஜெயக்குமார் வீட்டின் முன் நண்டுவிடும் போராட்டம்; இருவர் கைது

பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட வீடுகளை அமைச்சர் சரி செய்யாததை கண்டித்து  சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சரின் வீட்டின் முன் நர்மதா, நந்தக்குமார் ஆகியோர் நண்டுவிடும் போராட்டம் நடத்தினர்.

பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பு காரணமாக 300க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. இதன் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடியிருப்புகளை இழந்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் கடல் சீற்றம் காணப்படுகிறது. அதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு 300 வீடுகள் இடிந்துள்ளன. மீனவர்களின் வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன.

குடியிருப்புகளை விட்டு வெளியேறிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அரசு அதிகாரிகளிடம் உதவி கோர முயன்ற போது அவர்களை தொடர்புக் கொள்ள முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இருப்பிடத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்