காவல் நிலையதில் பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட பெண் உதவி ஆய்வாளர் : வாலிபர் கைது

 

கோவை மாவட்டம் அன்னூர் காவல் லையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஹேமலதா காவல் நிலைய வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர். உதவி காவல் ஆய்வாளரான ஹேமலதா (வயது 44). இவருக்கும், அசோக்குமார் என்பவருக்கும் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 15 வயதில் மகன் உள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஹேமலதா கணவரிடம் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். பின்னர் போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய பாலசந்தர் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்திவந்தார்.

அன்னூர் அருகே நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. அங்கு ஹேமலதா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த பணி முடிந்ததும் இரவு 8 மணிக்கு காவல் நிலையம் சென்றார். பின்னர் அவர், காவல் நிலைய வளாகத்தில் இருக்கும் பழைய காவல் நிலைய கட்டிடத்துக்கு சென்றார். சிறிது நேரத்தில் காவல் நிலையத்துக்கு வந்த அவர் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

உடனே சக போலீஸ்காரர்கள் ஓடிச்சென்று அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தபோது லேசாக நினைவு வந்த ஹேமலதா, அவர்களிடம் தான் விஷம் குடித்துவிட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஹேமலதா கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஹேமலதா தற்கொலை குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.