spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள் :பல காதல் பெற்றிடவும் - சுவாமி மலை!

திருப்புகழ் கதைகள் :பல காதல் பெற்றிடவும் – சுவாமி மலை!

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் 313
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பல காதல் பெற்றிடவும் – சுவாமி மலை

     தசக்ரீவன் இராவணன் ஆன கதையை திருஞானசம்பந்த பெருமான் தமது ஒவ்வொரு பதிகங்களில் (பெரும்பாலும்) எட்டாவது திருப்பாட்டில், இராவணன் தனது ஆணவத்தினால் கைலை மலையை எடுக்க முயற்சித்தும், அதனைக் கண்ட இறைவன், தன் கால் விரலால் அவனை அழுத்தியதும், அதானால் அரக்கன் அழுது புலம்பி சாம கானம் இசைத்தும், பின் அவன் நிலையைக் கண்டு இரங்கி, அவனுக்கு வாளும் நாளும் நல்கி அவனுக்கு அருள் புரிந்த வரலாறும் விரிவாகப் பேசுகிறார்.

     இராவணன் சிறந்த சிவபக்தன். இறைவன் முதலில் மறக்கருணை காட்டி பின்னர் அறக்கருணை நல்கி அரக்கனை வழி நடத்தினார். இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான். திருஞானசம்பந்தர் தமது திருநீற்று பதிகத்தில் ‘இராவணன் மேலது நீறு’ என்றே அருளி அவன் சிறந்த சிவபக்தன் என்று குறிப்பு உணர்த்தி உள்ளார்கள்.

     திருஞானசம்பந்த சுவாமிகள் மூன்றாம் திருமுறையில், திருக்கடைக்காப்பு பதிகத்தில் சாதாரி பண்ணில் பாடிய சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை பதிகத்தில் இந்தக் கதையை பாடல் ஒன்றில் கூறுகிறார்.

வள்ளல் இருந்த மலை அதனை வலம்

         செய்தல் வாய்மை என

உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து, அன்று

         எடுத்தோன் உரம் நெரிய,

மெள்ள விரல் வைத்து, என் உள்ளம் கொண்டார்

         மேவும் இடம்போலும்,

துள்ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த

         தோணி புரந்தானே.

சுந்தரர் அருளியுள்ள திரு நாகைக் காரோணம் பதிகத்தில் ஏழாவது பாடலில்

தூசு உடைய அகல்அல்குல் தூமொழியாள் ஊடல்

தொலையாத காலத்துஓர் சொல்பாடாய் வந்து

தேசுஉடைய இலங்கையர்கோன் வரைஎடுக்க அடர்த்துத்

திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்,

நேசம்உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த

நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்

காசுஅருளிச் செய்தீர்,இன்று எனக்குஅருள வேண்டும்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.

எனப் பாடுகிறார். அதாவது – கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நல்லாடையை உடுத்த அகன்ற இடையையும், தூய மொழியையும் உடைய, உம் தேவி உம்பால் கொண்ட ஊடலை நீர் தொலைக்க முயன்றும் தொலையாதிருந்த காலத்தில், நீர் சொல்ல வந்தவன் போல, ஒளியையுடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க, அவனை முன்னர் ஒறுத்து, அவன் சிறந்த இசையைப் பாட, அவனுக்குத் தேரும், வாளும் கொடுத்தீர். அதுவன்றி, வற்கடத்தில் அன்புடைய அடியார்கள் பசியால் வாடுதல் இன்றி நன்கு உணவருந்தி இருக்குமாறு, மறையவர் நிறைந்த திருவீழிமிழலையில் நாள்தோறும் அன்று படிக்காசு அருளினீர். அதுபோல, இன்று எனக்கு அருளல்வேண்டும் – எனபது இத்தேவாரப் பாடலில் பொருளாகும்.               

     திருமந்திரத்தில் திருமூலர் இக்கதையை ஒரு தத்துவத்தை விளக்கக் கூறுகிறார்.

தாங்கி இருபது தோளும் தடவரை

ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி

ஆங்கு நெரிந்து அமரா என்று அழைத்தபின்

நீங்கா அருள் செய்தான் நின்மலன் தானே

(திருமந்திரம் – 350)

     இருபது தோள்கள் கொண்ட இராவணன், கயிலை மலையைத் தூக்க முயன்று, அதன் அடியில் சிக்கி அலறினான். பெரும் ஆற்றல் பெற்ற அவன், சிவபெருமானை நோக்கி அபயக்குரல் எழுப்பியபின் அவனுக்கு நீங்காத அருளைச் செய்தார் சிவபெருமான். இராவணன் கைலாய மலையைத் தூக்க முயன்றான். ஏன்? இந்தக் கேள்விக்கான பதிலில் ஒரு அடிப்படை உண்மை உள்ளது. இராவணனை நம் பிரதிநிதியாகவும் பொறி புலன்களும், அவற்றின் செயல்பாடுகளும் பத்து தலைகளாகவும் சொல்லப்பட்டுள்ளன. நம் செயல்பாடுகளின் மூலம் உயர்கிறோம். உயர உயர ஆணவம் தலை எடுக்கிறது. அதன் விளைவாக தெய்வ வடிவாகச் சொல்லப்படும் மலை முதலானவைகளை அழிக்க முற்படுகிறோம். அத்தவறால் நாம் தண்டிக்கப்படும்போது துயரம் தாங்காமல் அழுகிறோம். இராவணனைப் போல.

     நம் அழுகையைக் கண்டு இறைவன் இரங்கி நமக்கு இராவணனுக்குச் சிவபெருமான் அருள் செய்ததைப் போல அருள்புரிகிறார். தவறு செய்து தண்டிக்கப்பட்ட இராவணன், இறைவனிடமிருந்து அருள் பெற்ற பிறகாவது திருந்தினானா என்றால், அதுதான் இல்லை. சீதா தேவியைத் தூக்கிப் போய், அதன் காரணமாகத் தண்டிக்கப்பட்டான். என்ன பலன்? நம் தவறுகளின் மூலம் நாம் தண்டிக்கப்படும்போது துயரம் தாங்காமல் புலம்புகிறோம். அத்தவறுகள் மன்னிக்கப்பட்டு மறுபடியும் நல்வாழ்வு வாழ வாய்ப்பு வழங்கப்படும்போது, ஊக்கம் பெற்ற நாம் முன்பை விடப் பெரும் தவறைச் செய்கிறோம். நம் கதை முடிந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe