43ம் நாள்: ஐபிஎல் 2024 – 02.05.2024
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஹைதராபாத் அணி (201/3, நிதீஷ்குமார் ரெட்டி 76*, ட்ராவிஸ் ஹெட் 58, கிளாசன் 42*, ஆவேஷ் கான் 2/39) ராஜஸ்தான் அணியை (200/7, யஸஷ்வி ஜெய்ஸ்வால் 67, ரியன் பராக் 77, ரோக்மென் போவெல் 27, ஷிம்ரொன் ஹெட்மயர் 13, புவனேஷ்வர் குமார் 3/41, பேட் கம்மின்ஸ் 2/34, நடராஜன் 2/35) 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.
இன்று ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான ட்ராவிஸ் ஹெட் (44 பந்துகளில் 58 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் அபிஷேக் ஷர்மா (10 பந்துகளில் 12 ரன், 1 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். அதற்கடுத்த ஓவரில் மூன்றாவதாகக் களம் இறங்கிய அமோல்பிரீத் சிங் ஆட்டமிழந்தார். இச்சமயத்தில் ட்ரவிஸ் ஹெட் உடன் அதற்கடுத்த பேட்டரான நிதீஷ் குமார் ரெட்டி (42 பந்துகளில் 76 ரன், 3 ஃபோர், 8 சிக்சர்) இணைந்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
14.4ஆவது ட்ராவிஸ் ஹெட் ஆட்டமிழந்த பின்னர் விளையாட வந்த ஹென்ரிச் கிளாசன் (19 பந்துகளில் 42 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) நிதீஷ் குமாருடன் இணைந்து ஆடி 20 ஓவரில் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோரை 3 விக்கட் இழப்பிற்கு 201 ரன் என்ற நிலைக்கு கொண்டு வந்தார்.
202 ரன் என்ற கடின இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜாஸ் பட்லர் முதல் ஓவர் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் சஞ்சு சாம்சன் (பூஜ்யம் ரன்) ஆட்டமிழந்தார். நான்காவதாகக் களமிறங்கிய ரியன் பராக் (49 பந்துகளில் 77 ரன், 8 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார். அவருக்குப் பின்னர் வந்த ஷிம்ரன் ஹெட்மயர் (13 ரன்), ரொவ்மன் போவல் (27 ரன்), துருவ் ஜுரல் (1 ரன்), அஷ்வின் (2 பந்துகளில் 2 ரன்) ஆகியோர் இன்னமும் சற்று முனைப்பு காட்டியிருந்தால் ராஜஸ்தான் அணி வென்றிருக்கக்கூடும்.
ஆனால் கடைசி ஓவரில் 13 ரன் எடுக்க வேண்டிய நிலை. அஷ்வின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார். அடுத்த நான்கு பந்துகளில் போவல் 2, 4, 2, 2 என 10 ரன் எடுத்தார்.
கடைசிப் பந்தில் 2 ரன் எடுத்தால் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி என்ற நிலையில் புவனேஷ் குமார் போவலின் விக்கட்டை வீழ்த்தி ஹைதராபாத் அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார். இதனால் அந்த அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
02.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
ராஜஸ்தான் | 10 | 8 | 2 | 16 | 0.622 |
கொல்கொத்தா | 9 | 6 | 3 | 12 | 1.096 |
லக்னோ | 10 | 6 | 4 | 12 | 0.094 |
ஹைதராபாத் | 10 | 6 | 4 | 12 | 0.072 |
சென்னை | 10 | 5 | 5 | 10 | 0.627 |
டெல்லி | 11 | 5 | 6 | 10 | -0.442 |
பஞ்சாப் | 10 | 4 | 6 | 8 | -0.062 |
குஜராத் | 10 | 4 | 6 | 8 | -1.113 |
மும்பை | 10 | 3 | 7 | 6 | -0.272 |
பெங்களூரு | 10 | 3 | 7 | 6 | -0.415 |