spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: திருக்கயிலை மலை

திருப்புகழ் கதைகள்: திருக்கயிலை மலை

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் பகுதி 325
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தேன்உந்து முக்கனிகள் – திருக்கயிலை மலை

     அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி நாற்பதாவது திருப்புகழான “தேன்உந்து முக்கனிகள்” எனத் தொடங்கும் திருப்புகழ் திருக்கயிலைத் தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “திருக் கயிலை நாதா, பற்றுக்கள் யாவும் அற்று, சிவானந்தப் பேரின்பத்தில் திளைத்திருக்க அருள்புரிவாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்

     சீரும் பழித்தசிவ …… மருளூறத்

தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ

     சீவன் சிவச்சொருப …… மெனதேறி

நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி

     நாதம் பரப்பிரம …… வொளிமீதே

ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ

     நாளுங் களிக்கபத …… மருள்வாயே

வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்

     மாலும் பிழைக்கஅலை …… விடமாள

வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு

     மானின் கரத்தனருள் …… முருகோனே

தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது

     தானுண் கடப்பமல …… ரணிமார்பா

தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை

     சாலுங் குறத்திமகிழ் …… பெருமாளே.

     இத்திருப்புகழின் பொருளாவது – கடலில் தோன்றிய ஆலகாலவிடத்தின் கொடிய வலிமை கெட அதனை வாரி எடுத்த திருக்கரத்தை உடையவரும், அடியேங்களை ஆட்கொள்ளும் பரம பிதாவும், மழுவையும் மானையும் ஏந்திய திருக்கரத்தினருமாகிய சிவபெருமான், பொன்னுலகம் செழிப்புற்று ஓங்குமாறும், அடியேன் உய்ந்து ஈடேறுமாறும், மாலயனாதி வானவர் மாயாமல் பிழைக்குமாறும் பெற்றருளிய முருகக் கடவுளே; “தானந்த னத்த தனனா” என்று ஒலிசெய்து வண்டுகள் வட்டமிட்டுத் தேனைப் பருகுகின்ற கடப்ப மலர்மாலையைத் தரித்துக் கொண்டிருக்கின்ற அழகிய திருமார்பை உடையவரே; அடியேங்களை ஆட்கொள்வதற்கு தக்க இடமாகக் குறித்து திருக்கயிலாய மலையின் மீது எழுந்தருளியுள்ள வள்ளிநாயகியார் மகிழ்கின்ற பெருமிதமுடையவரே;

     சிறந்த தேன், உயர்ந்த மா, பலா, கதலி என்ற முக்கனிகள், பால், செங்கருப்பஞ்சாறு, இளநீர் முதலியவைகளின் இனிமையைத் தனது இணையற்ற உயிரினும் உணர்விலும் இனிக்கும் பெருஞ்சுவையால் பழிக்கும் சிவத்தின் திருவருட்பெருக்கு உண்டாகவும், நன்மையும் தீமையும் ஆகிய வினைகள் முழுவதும் துகள் பட்டொழியவும், சீவன் சிவ வடிவு என்பதைத் தெளிந்தும், அகங்காரத்தை ஒழித்து பரவெளியில் அருள்நாதத்தோடு கூடிய பரஞ்சோதியில் சிவஞானம் பெருகிவரவும் உவட்டாத இன்பத்துடன் கூடிய முத்தியில் என்றும் நிலைத்து மகிழவும் தேவரீருடைய திருவடியைத் தந்தருள்வீர் என்பதாகும்.

     இத்திருப்புகழின் முதல் பத்தியான தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர் சீரும் பழித்தசிவம் என்ற வரிகளில் அருணகிரியார் ஒரு அரிய தத்துவத்தை விளக்குகிறார். சிவத்தைச் சிந்தித்து, திருவருள் மயமாகி நிற்கும்போது அளவிட்டுச் சொல்லவும் எழுதவும் இத்துணைத்தென்று நினைக்கவும் முடியாத ஓர் இன்ப உணர்ச்சி உண்டாகும். அவ்வநுபவ இன்பத்தைப் பிறரறிய கூறவியலுமோ? இதனை கந்தரநுபூதியில்,

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று

ஒவ்வாதது என உணர்வித்தது தான்

அவ்வாறு அறிவார் அறிகின்றதலால்

எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே?   

என்று அருணகிரியார் பாடுவார். அதாவது இன்ப நாயகனாம் இறைவனை மெல்ல மெல்ல நினைக்கத் தொடங்கும்போது, இணையற்ற ஒரு தனிப் பரமானந்தம் அரும்பும். அவ்வினிமையைச் சுவைத்து அறிந்தவர்க்குக் கரும்பு துவர்க்கும்; தேன் புளிக்கும்; பிற அனைத்துப் பொருட்களும் கசக்கும். தொடக்க இன்பமே இங்ஙனமாயின் அதன் முதிர்ச்சியில் உண்டாகும் இனிமையின் திறத்தை அளவிடற்பாலர் யாவர்? எழுதுவது எங்ஙனம்?

     இளநீரை உலையாக வைத்து, அதில் நல்ல பசும்பாலையும் முப்பழச் சாற்றையும் பிழிந்துவிட்டு, கருப்பஞ் சாற்றையுங்கூட்டி பதத்தில் இறக்கி, வடித்தெடுத்த கொம்புத் தேனையும் விட்டுக் குழைத்துச் செய்த ஒரு மதுவர்க்கம் மிகவும் இனிமையாக இருக்கும். ஆனால், நுனி நாவில் மட்டுந்தான் இனிக்கும். அதை எடுத்துக் கண்ணிலும் காதிலும் மூக்கிலும் விட்டால் இனிக்குமா? இன்பத்தை அளிக்குமா? துன்பத்தையே தரும். அந்த மதுவர்க்கத்தை முதுகில் மார்பில் வைத்தால் இனிக்குமா? இவ்வளவு பாடுபட்டு முயன்று செய்த அது நாவின் நுனியில் மட்டுமே இனிக்கும். இறைவன் தியானத்தினாலுண்டாகும் ஒப்பில்லாத சிவ அமுது நாவிற்கும், கண்ணிற்கும், காதுக்கும், பிற உறுப்புகட்கும் உள்ளத்திலும் உணர்விலும் உயிரிலும் கலந்து தெவிட்டாத இனிமையைத் தந்து பிறவி நோயையும் போக்கும்.

     இதனை உணர உங்கள் வீடருகே உள்ள ஒரு கோவிலுக்குச் சென்று ஒரு பத்து நிமிடம் அத்திருக்கோவிலில் இறைவனைத் துதிக்கச் செல்விடுங்கள். ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் இதனைச் செய்யுங்கள். உங்களுக்குள் ஒரு மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். அந்தப் பரமானந்தத்தைத்தான் இங்கே அருணகிரியார் விளக்குகிறார்.

     இத்தனை சிறப்புடைய, ஒரு பெரிய தெய்வ தத்துவத்தையே உள்ளடக்கிய நாக்கு பற்றிய சில சிறப்புச் செய்திகளை நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe