குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் கணக்கெடுப்பு பணி

ஈரோடு:

குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் பணியின் ஒரு பகுதியாக ஆட்டோ ஓட்டுநர்களின் முழு விவரம் குறித்த கணக்கெடுப்புப் பணி இன்னும் 3 மாதங்களில் நிறைவடையும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் குறித்த அனைத்து ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக ஆட்டோ ஓட்டுநர்களின் ஆவணங்களும் பதிவு செய்யப்படவுள்ளன.

ஈரோடு, கோபி, பெருந்துறை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மொத்தம் 900 டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு அவர்களின் ஓட்டுநர் உரிமம், இருப்பிடம், முகவரி, கைரேகைகள், ரத்த வகை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் மாவட்ட காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல இன்னும் 3 மாதங்களில் மாவட்டம் முழுவதும் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் கைரேகைகள், முகவரி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு விடும். பின்னர் ஒவ்வொரு ஆட்டோ மற்றும் டாக்ஸியின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் அடிப்படையில் தனித்தனியே எண்கள் வழங்கப்படும்.

அந்த எண்ணை சம்பந்தப்பட்ட டாக்ஸி மற்றும் ஆட்டோவில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அந்த எண்ணுடன் அவசர உதவி எண்ணும் குறிப்பிடப்படும். குறிப்பிட்ட அந்த வாகனத்தில் சவாரி செய்பவர்களிடம் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலோ அல்லது அவர்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் கேட்டாலோ உடனடியாக அந்த வாகனத்தின் எண்ணைக் குறிப்பிட்டு உதவி மையத்துக்கு புகார் செய்தாலே சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளரின் அனைத்துத் தகவல்களையும் எளிதில் சேகரித்து விடலாம்.

இதன் மூலம் ஆட்டோ, டாக்ஸி மூலமாக நடைபெறும் குற்றச்செயல்கள் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.