spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்கோவையானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

tn secretariat
#image_title

தமிழகத்தில் 42 யானை வழித்தடங்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறும் அறிக்கை.

புரியாத ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்போவதாக கூறுவதா?

தமிழக அரசின் அறிக்கையை, தமிழில் தயாரிக்க திராணியற்ற இவர்கள் தான், தமிழ் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்

அப்பாவி மக்களின் நிலத்தை அபகரிப்பதன் மூலம், அவர்களின்  வாழ்வாதாரத்தை பறிக்கத் துடிக்கும் கொடூர மனம் கொண்ட  திமுக அரசு.

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

யானைகளுக்குத்  தீங்கு விளைவிக்காத அப்பாவி மக்களை, வெளியேற்றி விட்டு திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா? – இவ்வாறு கேள்வி எழுப்பி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல்களைத் தவிர்க்கவும், யானைகளைப் பாதுகாக்கவும் வனத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அது தொடர்பான 161 பக்க அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அடையாளம் காணப்பட்டுள்ள இந்த யானை வழித்தடங்களில் தனியார் விடுதிகள், நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் மட்டுமல்லாது மக்கள் வசிக்கும் பகுதிகளும் உள்ளன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியைச் சேர்ந்த, 46 கிராமங்கள் இதில் உள்ளன. அப்பகுதிவாழ் மக்கள் வனத்துறையின் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், 2022-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 80 யானைகள் இருப்பதாக  அன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானைகளுக்கு இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவை தேவர்சோலா- நிலம்பூர் மற்றும் ஓவேலி. தேவர்சோலா- நிலம்பூர் வழித்தடத்தில் உள்ள 7 கிராமங்களில் 34,796 குடும்பங்கள் வசிக்கின்றன. ஓவேலி வழித்தடத்தில் உள்ள 31 கிராமங்களில், 2,547 குடும்பங்கள் வசிக்கின்றன.

அதேபோல மசினக்குடி வனக்கோட்டத்தில் 61 யானைகள் இருப்பதாக 2023 கணக்கெடுப்பில் தெரியவந்தது. இங்கு அடையாளம் காணப்பட்டுள்ள சீகூர் வழித்தடத்தில் உள்ள 8 கிராமங்களில் 513 குடும்பங்கள் வசிக்கின்றன.

கூடலூரில், தனியார் நிலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் குத்தகை காலம் முடிந்த  தோட்ட நிலங்களை கைப்பற்றி, அவற்றை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால், இந்தப் பகுதிகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் சென்று விடும் எனவும், பல தலைமுறைகளாக இங்கு வசிப்பவர்கள் வெளியேற  வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் கூடலூர் மற்றும் மசினக்குடி கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மாயார் பள்ளத்தாக்கு வரை உள்ள 61,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியை  யானை வழித்தடம் எனக் கூறியுள்ளார்கள். இவ்வளவு பெரிய பகுதியை வழித்தடமாக மாற்றும்போது, யானைகள் தங்கள் வாழ்விடங்களை மாற்றும் அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த 61,000 ஹெக்டேர் பகுதியில் 1193 ஹெக்டேர் நிலப்பரப்பில் 10 பகுதிகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள். முதுமலை முதல் சத்தியமங்கலம் வரை உள்ள காடுகள் வழியாக யாரையும் தொந்தரவு செய்யாமல் யானைகள் சென்று வருகின்றன; மனிதர்களும் அவற்றை சீண்டுவதில்லை.  அப்படிப்பட்ட சூழலில், திடீரென யானை வழித்தட  அறிக்கை ஏன் என்பது தான் அப்பகுதி மக்கள் முன் வைக்கும் கேள்வி.

பொதுமக்கள்  பல ஆண்டுகாலமாக யானைகளோடு தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று சூழலியல் நிபுணர்கள் பலரும் கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் 20 யானை வழித்தடங்களை மத்திய அரசு கண்டறிந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு, 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக கூறுகிறது.  சுற்றுச்சூழல், வனப்பகுதி பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசின் எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளையும் திமுக அரசு பின்பற்றுவதாகத்  தெரியவில்லை. மனம்போன போக்கில் தன்னிச்சையாக இந்தத்  திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிகிறது. 

2000-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 25 யானை வழித்தடங்கள் இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் 2017இல் மீண்டும் ஒரு கணக்கெடுப்பில், 18 வழித்தடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. 2023இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 20 என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது 42 என்கிறார்கள்.

மேலும் இந்த அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்கள். சாதாரண மக்கள் இதை எப்படி படித்து புரிந்துகொள்வார்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என பீற்றிக்கொள்ளும் திமுக அரசின் லட்சணம் இது தான். தமிழக அரசின் அறிக்கையை தமிழில் தயாரிக்க திராணியற்ற இவர்கள் தான் தமிழ் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். 

ஆங்கிலத்தில் சாதாரண மக்களுக்குப் புரியாத மொழியில் அறிக்கை என்று ஒன்றை வெளியிட்டு, என்ன நடக்கிறது என்று யாரும் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்குவதும், இதனைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதும் தான் இதன் பின்னால் இருக்கும் திமுக அரசின் சதித்திட்டம்.

தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு, ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பதாக இவர்கள் கூறுவது வேடிக்கையான ஒன்று. 

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்களோ, கூடலூர் மற்றும் மசினக்குடி பகுதிகளில் உள்ள மக்கள் யாரும் பதற்றப்படத் தேவையில்லை, இப்போது வெளியிடப்பட்டிருப்பது ஒரு திட்ட வரைவு மட்டுமே, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மக்களிடம் இது குறித்து கருத்து கேட்கவில்லை. தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு பகுதி மக்களிடமும் சென்று கருத்து கேட்போம் என்கிறார். 

தமிழக அரசிடம் நான் கேட்கும் கேள்வி இது தான். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, அவசர கதியில் இந்த அறிக்கையை வெளியிட  வேண்டிய அவசியம் என்ன? மக்களிடம் கருத்துக் கேட்கக்கூட கால அவகாசம் இல்லை என்றால், ஏன் உடனடியாக வெளியிட வேண்டும்? 

யாரையும் வெளியேற்றினால், அவர்களுக்குத்  தகுந்த நஷ்ட ஈடும், மாற்று இடமும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மதிவேந்தன் கூறுகிறார். இதில் இருந்தே அந்தப் பகுதியில் காலம் காலமாக வசிக்கும் மக்களை வெளியேற்றி விட்டு அந்தப் பகுதியை ஆக்கிரமிக்கும் திட்டம் திமுக குடும்பத்திற்கு வந்து விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. 

கூடலூரின், ஓவேலி பகுதியில் புலிகள் காப்பகத் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நஷ்ட ஈடும், மாற்று இடமும் தரப்படுவதாக சொன்ன வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. 

பல தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் ஒருபோதும் யானைகளின் வாழ்விடங்களையோ, வழித்தடங்களையோ ஆக்கிரமித்ததில்லை. அப்படிப்பட்ட மக்களை வெளியேற்றி விட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு வழங்குவதற்காகத்  தான் அவசர கதியில் யானை வழித்தடம் என்ற புதிய பீதியை திருட்டு மாடல் திமுக அரசு செய்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

யானைகள் வழித்தடத்தை காக்க வேண்டும் என்ற கடமை எல்லோருக்கும் உள்ளது. அதை மக்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. அதேசமயம் மக்களின் சந்தேகங்களை தீர்க்காமல், அப்பாவி மக்களின் நிலத்தை அபரிக்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் மக்களிடம் கருத்து கேட்பதை ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ள இருப்பதாகத்  தெரிகிறது. அதற்குப் பதிலாக கடைக்கோடி மக்களிடமும் நேரடியாக சென்று கருத்து கேட்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

-Dr.L. முருகன் (மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை  மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe