இண்டியா டிவியின் அதாலத் கேள்வி பதில் நிகழ்ச்சியில் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்…
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
கஜ்வா ஏ ஹிந்த்
கேள்வி– நாட்டில் இருந்து கொண்டே சிலர் கஜ்வா ஏ ஹிந்த் எனும் நாட்டின் மீதான இஸ்லாமியத் தாக்குதல் குறித்துப் பேசுகிறார்கள், பாரதத்தைக் கைப்பற்றுவது பற்றிப் பேசுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து?
பதில்– அதாவது இந்த கஜ்வா ஏ ஹிந்த் பத்தின கனவு, இறுதித்தீர்ப்பு நாள் வரை கூட….. வெற்றியடைப் போறதில்லை. நான் சொல்றதை நல்லா குறிச்சு வச்சுக்குங்க, பல தலைமுறைகள் மடிஞ்சு போகலாம், ஆனா இந்தக் கனவு நிறைவேறப் போறதில்லை. அதோட பாரதம் தன்னோட பயணத்தை இதே முறையில, தொடர்ந்து முன்னேறிப் போகும். மேலும் மோதிஜியோட தலைமையில, உலகத்தோட மிகப் பலம் வாய்ந்த சக்தியாவும் ஆகும்.
கேள்வி– இந்தத் தேர்தலுக்குப் பிறகு மோதி அரசு தேசம் முழுக்க பொதுச் சிவில் சட்டத்தை அமல் செய்யுமா?
பதில்– இது அமல் செய்யப்பட்டே ஆகணும் அதோட, இதை நாங்க எங்களோட சங்கல்ப பத்திரத்தில கூட பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிடுறதில்லை அது சங்கல்ப பத்திரம்…… சங்கல்பம்னா என்ன அர்த்தம்? மாற்று கிடையாது. செய்யப்பட்டே ஆகும்ங்கற உறுதிப்பாடு. பாரதிய ஜனதா கட்சியோட ஆட்சி அமையும். நாங்க தேசத்தில பொது சிவில் சட்டத்தை அமல் செஞ்சே தீருவோம் நான் என்ன விரும்பறேன்னா மொத்த தேசமும், பொது சிவில் சட்டத்துக்காக, பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவா, அணி திரளணும்.
கேள்வி – நமாஸை சாலைகளில் படிக்க அனுமதிக்க மறுக்கிறீர்களே?
பதில் – பாருங்க, நான் முன்ன கூட சொல்லியிருந்தேன். சாலையில நீங்க நமாஸ் படிச்சீங்கன்னா என்னால ஹனுமான் சாலீஸா படிக்கறதை தடுக்க முடியாது. தவிர, நான் மாநிலத்தோட 25 கோடி பேர்களை கவனிக்க வேண்டியிருக்கு. அவங்க போக்குவரத்துக்கு தடை ஏற்படுறதை என்னால அனுமதிக்க முடியாது. ஆலயம் பூஜை பண்ற இடம். மஸ்ஜித் நமாஸுக்கானது.
நீங்க நமாஸ் படிக்கணும்னா ஒண்ணு மஸ்ஜிதுக்கு போங்க இல்லை இத்காவுக்குப் போங்க. அதிக கூட்டம் வந்தா ரெண்டு ஷிஃப்டா இல்லை மூணு ஷிஃப்டா படிங்க. ஆனா, சாலையில இல்லை. மேலும் சாலையில, எனக்கு சந்தோஷமா இருக்கு, இன்னிக்கு யுபியில சாலைகள்ல எங்கயும் நமாஸ் படிக்கறதில்லை.
மஸ்ஜித் வழிபாட்டு இடங்கள்ல இருக்கற கூம்பு ஒலிபரப்பிகளை அகற்றியாச்சு. அமைதியான முறையில நோயாளிகள் குழந்தைகள், மாணவர்களும் கூட, இவங்க எல்லாரும்…… ஆனந்தமா தங்களோட தேர்வுகளுக்குத் தயார் செஞ்சுக்கலாம். நோயாளிகள் ஆசுவாசமா வீட்டுல ஓய்வு எடுத்துக்கலாம். பிள்ளைங்க எல்லாரும் சந்தோஷமா வீட்டுல இருக்கலாம். காட்டுக்கத்தல்ல நோயாளிங்க குழந்தைங்க எல்லாருக்கும் உளைச்சல்.
தேர்வுகளுக்குத் தயாராகற மாணவர்கள் கருத்தூன்றி படிக்க ஆரம்பிக்கையில எங்கிருந்தாவது சத்தம் கேட்கும் அவங்க கவனம் சிதறிடும். எத்தனை கஷ்டம் பாருங்க. இப்ப யுபியில இதெல்லாம் கிடையாது. ரொம்ப அமைதி. ரொம்ப அமைதியான சூழ்நிலை. யாருக்கும் எந்தக் கஷ்டமும் இல்லை. ரொம்ப அமைதியான முறையில எல்லா நிகழ்ச்சிகளும் நடக்குது.
மேலும், இது எல்லாருக்கும் சமமான முறையில அமல் செய்யப்பட்டிருக்கு. பெரியபெரிய நிகழ்ச்சிகள் நடக்குது. பிரயாக்ராஜ் கும்பமேளாவில 24 கோடி பக்தர்கள் கலந்துக்கிட்டாங்க. இப்ப ராமஜன்மபூமி நிகழ்ச்சியில நீங்ககூட பார்த்திருக்கலாம். இன்னும் நடந்துக்கிட்டு இருக்கு. இதில, ஓவ்வொரு நாளும், தேர்தல்…. அறிவிக்கப்பட்டதுக்கு முன்னாடி வரைக்கும், நாளொன்றில 3 இலட்சம் பேர் வந்தாங்க. மூணுலேர்ந்து அஞ்சு இலட்சம். இப்பவும் கூட ஒண்ணுலேர்ந்து ஒண்ணரை இலட்சம் பக்தர்கள் அயோத்திக்கு வர்றாங்க.
எல்லாம் அமைதியா நடக்குது. எல்லாரும் சிரத்தையோட வர்றாங்க, தரிசனம் செய்யறாங்க சந்தோஷமா போறாங்க யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாரும், உணர்வுரீதியா கலந்துக்கறாங்க.
அயோத்தி பத்தி அவங்க கேள்விப்பட்டிருக்காங்க, இன்னைக்கு அயோத்தியை நேர்ல பார்க்கும் போது ஆச்சரியப்படுறாங்க. அயோத்தியில ஃபோர் லேன், அயோத்தில சிக்ஸ் லேன்…. அயோத்தியில சர்வதேச விமானநிலையம். விமானநிலையமும் மகரிஷி வால்மீகி பெயர்ல. அதோட, உணவு விடுதி. .
அன்னை சபரி பெயர்ல. ஓய்விடம். நீங்க பயணிக்க நினைச்சா, அது நிஷாத்ராஜ் பெயர்ல. இது புதிய அயோத்தியின் புதிய அடையாளம் பகவான் இராமனின் அனைத்து சகாக்களும், இன்னைக்கு அயோத்தியோட இணைஞ்சு அயோத்தியோட பயணத்தை மேலும் வலுப்படுத்தறாங்க.
மேலும், அயோத்தியில ராம்ஜன்மபூமியில அடிக்கல் நாட்ட பிரதமர் தானே வந்ததோட பிராண பிரதிஷ்டையிலயும் 11நாள் அனுஷ்டானங்களையும் முடிச்சுக்கிட்டு, பகவான் இராமனோட தொடர்புடைய பவித்திரமான இடங்களுக்குப் போயி அதுக்கப்புறம் அயோத்திக்கு வந்து தன் கைகளாலயே பிராணபிரதிஷ்டை செஞ்சு முடிச்சு இராமன் தேசத்தின் அடையாளம்னாரு.
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.