தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
சிஏஏ தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு மோதி விடுக்கும் சவால்
சமாஜ்வாடி காங்கிரஸ் போன்ற கட்சிகள், யுபி மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும், கலவரங்களை ஏற்படுத்த முழுமையாக முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
இந்த இண்டிக் கூட்டணிக்காரர்கள் கூறுகிறார்கள், இந்த மோதி, இவர் ஏதோ சிஏஏவைக் கொண்டு வந்திருக்கிறார் இல்லையா, என்று இவர் அகல்கிறாரோ, இந்த சிஏஏவும் போய் விடுமாம். சொல்லுங்கள் இந்த தேசத்திலே, சிஏஏவை முடிவுக்குக் கொண்டு வரும் யாராவது, இதுவரை பிறந்திருக்கிறார்களா?
நான் மிகமிகத் தெளிவாகப் பேசுகிறேன் சகோதர சகோதரிகளே, நாட்டிலும் சரி அயல்நாடுகளிலும் சரி, எத்தனை பேரை வேண்டுமானாலும் கூட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். நானும் களத்தில் இருக்கிறேன் நீங்களும் களத்தில் இருக்கிறீர்கள். என்றைக்கும் உங்களால் சிஏஏவை தடுக்க முடியாது.
இண்டிக் கூட்டணி நொறுங்கிப் போகும், சட்டுசட்டுன்னு சட்டுப்புட்டுன்னு
சமாஜ்வாடி காங்கிரஸின் அரசகுமாரர்களுக்கு, தேசத்தின் வளர்ச்சி என்றால், ஏதோ ஒரு பகுதியில் வாழும் குழந்தைகள், எல்லோரும் சேர்ந்து கிட்டிப்புள்ளு விளையாடுவது போல இவர்களுக்கு இருக்கிறது. மாளிகைகளில் பிறப்பெடுத்த, இந்த அரசகுமாரர்களுக்கு, உழைத்தும் பழக்கமில்லை, விளைவுகளை ஏற்படுத்தியும் வழக்கமில்லை.
ஆகையால் தான் கூறுகிறார்கள், தேசத்தின் வளர்ச்சி தானாக நடக்குமென்று. என்ன சொல்கிறார்கள் இவர்கள்? வளர்ச்சி எப்படி ஏற்படுமாம்? அதாவது சட்டுபுட்டுன்னு சட்டுபுட்டுன்னு. இவர்கள் நினைக்கிறார்கள், பாரதம் தற்சார்புடையதாக, தானாகவே ஆகி விடுமென்று. யாராவது எப்படி என்றால் உடனே, சட்டுபுட்டுன்னு சட்டுபுட்டுன்னு என்கிறார்கள்.
இவர்கள் நினைக்கிறார்கள், புதிய நெடுஞ்சாலைகள், தாமாகவே ஏற்பட்டு விடுமென்று. யாராவது எப்படி என்றால் உடனே, கவலையே படாதப்பா சட்டுபுட்டுன்னு சட்டுபுட்டுன்னு என்கிறார்கள். இவர்கள் நினைக்கிறார்கள் பாரதத்தின் ஏழ்மை தொலைந்து போகுமென்று. எப்படி என்றால் உடனே, சட்டுபுட்டுன்னு சட்டுபுட்டுன்னு என்கிறார்கள். அட யாராவது இவர்களுடைய புத்திக்கு, உரைக்கும்படி சொல்லுங்கள், இப்போது ராய்பரேலியின் மக்களும் கூட, சட்டுபுட்டுன்னு சட்டுபுட்டுன்னு சட்டுபுட்டுன்னு, வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அமேடியிலிருந்து காணாமல் போனார், ராய்பரேலியிலிருந்தும் காணாமல் போவார்.
நண்பர்களே, தேசத்தை ஆளுவதென்பது, தங்கத் தொட்டிலில் பிறந்து வளர்ந்த பாலகர்களுக்கான விளையாட்டு அல்ல. அது உங்களால் முடியாத காரியம். ஏனென்றால் ஜூலை 4ஆம் தேதிக்குப் பிறகு, மோதி அரசு கண்டிப்பாக அமைந்தே தீரும். நாட்டுமக்கள் மோதி அரசை ஏற்படுத்தியே தீருவார்கள்.
ஆனால் இதுமட்டுமல்ல. மேலும் நிறைய நடக்க இருக்கிறது. என்ன நடக்கும் என்று நான் கூறவா? ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு, மோதியரசு அமையும் என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தான். இன்னும் கூட நிறைய நடக்கும் என்ன என்பதை நான் சொல்லவா? சொல்லவா? இந்த இண்டிக் கூட்டணி, உடைந்து சின்னாபின்னமாகிப் போகும் சட்டுப்புட்டுன்னு சட்டுப்புட்டுன்னு.
தோற்றுப் போன பிறகு, பலியாடு யார் என்பதைத் தேடத் தொடங்குவார்கள். சட்டுப்புட்டுன்னு சட்டுப்புட்டுன்னு. அப்புறம் அரசகுமாரர்கள், அது லக்னவின் அரசகுமாரனாகட்டும், அல்லது தில்லிக்காரர்.
இந்த அரசகுமாரர்கள், கோடை விடுமுறைக்காலத்தில், வெளிநாடு சென்று விடுவார்கள், சட்டுப்புட்டுன்னு சட்டுப்புட்டுன்னு. யாரோ என்னிடத்தில் கூறினார், டிக்கெட்டை புக் செய்யச் சொல்லியும் விட்டார்களாம். சகோதர சகோதரிகளே, இவர்கள் சட்டுப்புட்டுன்னு சட்டுப்புட்டுன்னு ஓடிப் போய் விடுவார்கள், நாம் தான் இங்கே இருப்போம், நானும் நீங்களும் மட்டுமே இருப்போம். நாட்டுமக்கள் தங்கி இருப்பார்கள். நான் உங்களுக்கு கேரண்டி அளிக்கிறேன்.
நான் உங்கள் சேவையிலே, இரவுபகல் பாராது சலியாமல் உழைப்பேன். என்னுடைய கணம்தோறும், உங்களின் பெயர். என்னுடைய உடலின் கணுதோறும், உங்களின் பெயர். நாம் வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக்குவோம், தற்சார்பு பாரதத்தை உருவாக்குவோம். இதை உருவாக்க, நாட்டுமக்கள் நாமனைவரும் இணைந்து, இன்முகத்தோடு உழைப்போம்.
எனக்கு பலமான நம்பிக்கை இருக்கிறது, நீங்கள் அனைவரும் எனக்குத் துணை வருவீர்கள் என்று. வருவீர்களா? வருவீர்களா? ஆமாம் இது மோதியளிக்கும் கேரண்டி மக்களே.
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.