spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: விடமும் வடிவேலும்

திருப்புகழ் கதைகள்: விடமும் வடிவேலும்

thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் பகுதி 323
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

விடமும் வடிவேலும் – சுவாமிமலைமாரீசன்

     சீதையைக் கவர்ந்து வர மாரீசனிடம் உதவி கேட்ட இராவணனுக்கு மாரீசன் அறிவுரை-அறவுரை சொன்னான். ஒருகாலத்தில் முனிவர்களின் யாகங்களை அழித்து, அவர்களுக்குப் பெருமளவில் இடையூறு செய்துவந்த மாரீசனின் இந்தச் செயலைக் கண்டால், மாரீசன் திருந்தி தெளிவு பெற்று விட்டான் என்பது தெரியவரும்.

இராமபாணத்தால் தாக்குண்ட மாரீசன், பல ஆண்டுகள் கடுந்தவம் செய்து பெற்ற ஞான அனுபவம், அவனை அவ்வாறு தெளிவாகப் பேசச்சொல்கிறது. ஆனால் தீயவன் ஒருவன் திருந்தி வாழும்போது, உறவுகள் அவனை நல்லவனாக வாழவிடாது. மாரீசன் சொன்ன நல்வார்த்தைகள் எதுவும், இராவணன் காதுகளில் (இருபது காதுகள் இருந்தும்) விழவில்லை; மாறாக, இராவணன் மாரீசனை மிரட்டத் தொடங்கினான்.

“என்ன பேசுகிறாய்? கைலாய மலையையே தூக்கிய என் ஆற்றல், மனிதர்களின் ஆற்றலுக்கு முன் நிற்காது என்கிறாய். என் உள்ளத்தை உணராமல், என்னை அவமானப் படுத்திப்பேசுகிறாய். என் தங்கையை அங்கபங்கப் படுத்தியவரைப் பாராட்டிப் புகழ்கின்றாய். இது முதல்முறையாக இருப்பதால், உன்னை மன்னித்தேன்” என்றான் இராவணன்.

     இராவணனின் வார்த்தைகளில் கோபம் கொப்பளிப்பதைக் கண்டும், மாரீசன் அஞ்சவில்லை; “இராவணா, நீ கோபப்படுவது என்னிடமல்ல; உன் கோபம் உன்னையும் உன் குலத்தையும் அழித்து விடும். இராமனிடம் பகை கொண்டால், அது உன்னை அடியோடு அழித்து விடும். உன்னை வென்ற கார்த்தவீரியார்ஜுனனைக் கொன்ற பரசுராமனை ஒடுக்கிய இராமனின் வலிமையை, நம்மால் எதிர்க்க முடியுமா? தவறு செய்யாதே. அமுதம் என்றெண்ணி, விஷத்தைக் குடிக்காதே. உனக்கு நல்லதைத்தான் சொல்கிறேன். உனக்கு மாமனும் உன் குலத்து முதியவனுமான என் வார்த்தையைக்கேள்” என்று கெஞ்சாத குறையாகச்சொன்னான் மாரீசன்.

     ஆயினும் இராவணன் கேட்கவில்லை. “மாரீசா, உன் தாயைக் கொன்றவனுக்குப் பயந்து, ஓடி ஒளிந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நீ, செத்தவனுக்குச் சமமானவன். உன்னைப்போய் மனிதனாக மதிக்கலாமா? திசையானைகளை வென்று, தேவர்களைச் சிறைப்படுத்தி, சொர்க்க லோகத்தைக் கொளுத்தி, உலகம் முழுதும் ஆளும் என்னிடம், சின்னஞ்சிறு மனிதர்களை வீரர்கள் என்று சொல்கிறாய். நான் சொன்னதைச் செய்ய வேண்டியதுதான் உன் வேலையே தவிர, எனக்கு ஆலோசனை சொல்வது உன் வேலையல்ல. நான் இட்ட கட்டளையை நீ நிறைவேற்றாவிட்டால், உன்னைக்கொன்று விடுவேன். உயிர்மேல் ஆசை இருந்தால், என்சொல் கேட்டு நட” என்று கோபாவேசமாக மிரட்டினான்.

     மாரீசன் ஒரு முடிவிற்கு வந்தான்; “இராவணா, உண்மையாகவே உனக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே, உனக்கு நல்லதைச் சொன்னேன். ஏதோ, பயந்து கொண்டு பேசினேன் என்று எண்ணி விடாதே. கெட்டகாலம் வந்தால், நல்லதுகூடக் கெட்டதாகத்தான் தெரியும். சரி, நான் செய்ய வேண்டியதென்ன? அதைச்சொல்!” என்றான்.

     இராவணன் சொன்னான்; “நீ பொன் மானாக மாறிப்போய், சீதையின் மனதைக்கவர வேண்டும். சீதைக்காக உன்னைப்பிடிக்க இராமன் வருவான். அச்சமயத்தில் நான் போய், சீதையைக் கவர்ந்து வந்து விடுவேன். ஆகையால், நீ பொன்மானாக மாறிப்போ” என்றான். அப்போது மாரீசன், ”மானாக மாறிப்போனால், இராமன் கை அம்பால் முடிவு; போகா விட்டாலோ, இராவணன் கையால் முடிவு” என்று புரிந்துகொண்டான்.

     பொன்மான் வடிவம் கொண்டு, அங்கமெல்லாம் அழகு மின்ன, சின்னஞ்சிறு வாலை ஆட்டி, தலையை அங்குமிங்குமாகத் திருப்பி, பரபரத்த கால்கள் பாவிப்பாவி, தாவித்தாவி, சீதையின் எதிரில் துள்ளிக் குதித்தான். கண்களைக் கவர்ந்த பொன்மானிடம் மனதைப் பறி கொடுத்த சீதை, இராமரை அழைத்து அதைப்பிடித்துத் தரச் சொன்னாள். இராமர் ஒப்புக்கொண்டார். ஆனால் இலட்சுமணனோ தடுத்தான்; “அண்ணா! இது உண்மையான மான் அல்ல; மாயமான்” என்றான். ஆனால் இராமர் மானைப்பிடித்து வரப் புறப்பட்டார்.

     பின் தொடர்ந்த இலட்சுமணன் வேண்டுகோள் விடுத்தான். “அண்ணா! மானைப்பிடிக்க என்னை அனுப்புங்கள். அது மாயமானாக இருந்தால், அதைத் தொடர்ந்து வரும் பகைவர்கள் பலராக இருந்தாலும், அனைவரையும் நான் கொன்று வருவேன். ஒருவேளை உண்மையான மானாக இருந்தால், அதைப்பிடித்துக் கொண்டு வருவேன். என்னை அனுப்புங்கள்” என வேண்டினான். சீதையோ, ”நாயக, நீயே பற்றி நல்கலை போலும்” எனக் கண்ணீர் சிந்தினாள்; உடனே இராமர் இலட்சுமணனிடம், “நானே போய் மானைப் பிடித்து வருகிறேன். சீதைக்குக்காவலாக இங்கேயே நீ இரு” என்று சொல்லி, வில் அம்புகளுடன் மானைப் பின் தொடர்ந்தார்.

     அப்போது மாரீச மான் கைக்கு எட்டுவதைப்போலத் தோன்றி, எட்டாமல் விலகிப்பாய்ந்து விளையாட்டு காட்டியது. இராமரும் உண்மையைப் புரிந்து கொண்டார். அவர் புரிந்து கொண்டதை மாரீசனும் புரிந்து கொண்டான்; இனி இந்த இராமன் நம்மைப் பிடிக்க மாட்டான்; அம்பைச்செலுத்தி அழித்து விடுவான்” என எண்ணிய மாரீசன், ஆகாயத்தில் தாவத் தொடங்கினான். ஆனால் அதற்குள் இராமர் அம்பைச்செலுத்தி விட்டார். இதனைக் கம்பர்,

நெட்டிலைச்சரம் வஞ்சனை நெஞ்சுறப்

பட்ட(து) அப்பொழுதே பகு வாயினால்

அட்ட திக்கினும் அப்புறமும் புக

விட்டழைத்து ஒரு குன்றென வீழ்ந்தனன்.

     மாரீசனின் வஞ்ச நெஞ்சில், இராம பாணம் பாய்ந்தது. அப்போதே அவன் இராமர் குரலிலே, ”சீதா! லட்சுமணா!” என்று திசைகள் எல்லாம் எதிரொலிக்கும்படியாகக் கூவி, மலை விழுவதைப்போல விழுந்தான்; முடிந்தான். அகத்தியரிடம் மோதியதில் தொடங்கிய மாரீசனின் வாழ்வு, அண்ணல் இராமரின் கைகளால் முடிந்தது. விசுவாமித்திர யாகத்தின் போது, ராமரே மாரீசனை உயிர் பிழைக்கும்படியாக விட்டும்; தவம்செய்த மாரீசன் அற வழியில் நடக்க முயன்றும்; ராவணனின் வற்புறுத்தலால் தவறிழைக்க முற்பட்டு முடிந்துபோன மாரீசனின் வாழ்வு, மனித குலத்திற்கு ஒரு பாடம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe