spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைகோபமும் குணமும்: தேசிய இளைஞர் தினத்தில் ஒரு வாழ்வியல் நெறி

கோபமும் குணமும்: தேசிய இளைஞர் தினத்தில் ஒரு வாழ்வியல் நெறி

ஜனவரி 12 ஆம் நாள் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம். நாட்டின் இளைஞர்களுக்கெல்லாம் ஆதர்ஷ புருஷராக விளங்கியவர் சுவாமிஜி. இந்தியாவின் இளமை அடையாளத்தை உலகுக்கு உணர்த்தியவர். சுவாமிஜியின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள் சுவாமிஜியின்பால் பற்றுள்ளவர்கள். இது அரசின் அதிகாரபூர்வ நாளாகவும் அறிவிக்கப்பட்டால், விவேகானந்தரின் உலக சாதனையை நாடே நினைவுகூர்வதாக அமையும்!

காஞ்சிபுரத்திலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இளைஞர் தினத்தை ஒட்டி ஒரு சொற்பொழிவு நிகழ்த்த… 2005இல் அழைத்திருந்தார் மடத்தின் தலைவர் சுவாமி தர்மாத்மானந்தர். (அன்பு ததும்பும் அவர் வார்த்தைகளால், இளையோர் பட்டாளம் அவரை மொய்ப்பதைக் காண ஆனந்தமாக இருந்தது.) சுவாமிஜியின் செய்தியை இளைஞர்களுக்கு சொல்வதைவிட வேறு மனநிறைவு என்ன இருக்கப்போகிறது! காரணம்- நாட்டைப்பற்றிய சிந்தனை; சமூகம் பற்றிய கோட்பாடு; எளியோரையும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் சமயம் / பக்தி மார்க்கம் – குறிப்பாக, வீரத்தை மையமாகக் கொண்ட அவரது கம்பீரம் போன்றவற்றை மாணவர்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டுமே!

ஒரு சுபாஷிதம்: (பொன்மொழி)

அச்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவச நைவச| அஜாபுத்ரம் பலிம் தத்யாத் தேவோ துர்பல காத:||

அச்வம் – குதிரை; கஜம் – யானை; வ்யாக்ரம் – புலி; அஜாபுத்ரம் – ஆட்டுக்குட்டி…

இந்த சுபாஷிதத்தின் பொருள்: (பலமுள்ள) குதிரையோ யானையோ புலியோ பலியிடப்படுவதில்லை; (பலவீனமான) ஆட்டுக்குட்டிதான் பலியிடப்படுகிறது. அதுபோல் (துர்பலனான) பலவீனமானவனுக்கு தேவர்களின் பெயராலும் துன்பமே நேரும். எனவே வீரம் நிறைந்தவனுக்குத் துன்பம் தர யாருமே சற்று யோசிப்பார்கள் என்பது புரிகிறதல்லவா?!

சுவாமிஜி இதை எளிமையாக “பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!’ என்று ஒற்றை வாக்கியத்தில் முழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார். வீரம் நெஞ்சில் இருக்கும்போது தானே பலம் வெளித்தெரிகிறது.

அந்த வீரம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? நல்ல குணமுள்ள எளியோருக்கு இரக்கம் காட்டவும், கொடுமதி படைத்த வலியோரை வீழ்த்தவும் உரமுள்ளதாக இருக்கவேண்டும். பலரும் வெற்று வார்த்தைகளால் வீரம் காட்டி, மனத்தால் கோழைகளாகிவிடுகிறார்கள். அவர்களிடம் வெளித்தெரிவது கோபம் – சினம் தானே ஒழிய வேறல்ல! அப்படிப்பட்டவர்களால் சுற்றமும் நட்பும் கெட்டுவிடுகிறது என்பது வள்ளுவர் வேதம். (சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி…)

வீரத்துக்கும் கோபத்துக்கும் நூலிழைதான் வேறுபாடு!

கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் – என்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சந்தர்ப்பவாதிகள்; சுயநலமிகள் என்பது என் எண்ணம். எப்படி? – வார்த்தை உக்கிரத்தால் பிறர் மனத்தைக் காயப்படுத்திவிட்டு, சொல்லாலும் செயலாலும் தன் கோபத்தைப் பிறர் மீது திணித்துவிட்டு, அடுத்த சில நொடிகளில் அவர்கள் அடங்கிப் போவார்கள். சமாதானம் பேசுவார்கள். காரணம் – காரியம் நடக்கவேண்டும். ஆனால் வார்த்தை வடுக்களால் காயமுற்ற பிறர் நெஞ்சோ, அந்த ரணத்திலிருந்து கொஞ்சமும் ஆறாமல் அப்படியே இருக்கும்.

ஸ்டீபன் கோவே என்பாரின் “90/10 கொள்கை’ கட்டுரையை ஒருமுறை வாசித்தேன். அந்தக் கட்டுரையின் சாரம்…

*** கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் – என்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சந்தர்ப்பவாதிகள்; சுயநலமிகள் என்பது என் எண்ணம். எப்படி? – வார்த்தை உக்கிரத்தால் பிறர் மனத்தைக் காயப்படுத்திவிட்டு, சொல்லாலும் செயலாலும் தன் கோபத்தைப் பிறர் மீது திணித்துவிட்டு, அடுத்த சில நொடிகளில் அவர்கள் அடங்கிப் போவார்கள். சமாதானம் பேசுவார்கள். காரணம் – காரியம் நடக்கவேண்டும். ஆனால் வார்த்தை வடுக்களால் காயமுற்ற பிறர் நெஞ்சோ, அந்த ரணத்திலிருந்து கொஞ்சமும் ஆறாமல் அப்படியே இருக்கும்.

ஸ்டீபன் கோவே என்பாரின் “90/10 கொள்கை’ கட்டுரையை ஒருமுறை வாசித்தேன். அந்தக் கட்டுரையின் சாரம்…

10% வாழ்க்கை, உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது. 90% வாழ்க்கை, நீங்கள் அதற்கு ஏற்ப எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அந்த 10% த்தை நாம் கட்டுப்படுத்தமுடியாது. உதாரணத்திற்கு, பஸ், கார் பிரேக் டவுன் ஆவதையோ, ஏரோப்ளேன் தாமதமாவதையோ, டிரைவரால் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதையோ… குறிப்பாக பிறரால் நமக்கு நேரும் இதுபோன்ற விஷயங்களையோ நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மீதமுள்ள 90% த்தைத் தீர்மானிப்பது நாமே!

ஒரு வாழ்க்கை உதாரணம்:

குடும்பத்தோடு காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் செல்ல மகள் காபி கொண்டு வருகிறாள். எதிர்பாராமல் கால் தடுக்கி கை அசைந்து காபி உங்கள் அழகான சட்டையில் அபிஷேகம் செய்துவிடுகிறது. இச்செயலுக்கு நீங்கள் பொறுப்பாக முடியாது. இச்செயலை உங்களால் கட்டுப்படுத்தவும் முடியாது. காரணம் – எதிர்பாராமல் நடந்தது. ஆனால் அதற்குப் பிறகு நடக்க வேண்டியதை நீங்கள் தீர்மானிக்க முடியும்.

ஆனால் நடப்பது? உங்கள் மகளைக் கோபத்தால் திட்டுகிறீர்கள். அஷ்டகோணலான உங்கள் முகத்தைக் கண்ட அப்பெண் உடனே காபிக் கோப்பையைத் தடாலெனப் போடுகிறாள். கண்களில் “பொலபொல’வென கங்கைப் பிரவாகம். திட்டிமுடித்தபிறகு உங்கள் மனைவியிடம் சொல்கிறீர்கள்… “”ஏன் காபிக் கோப்பையை சட்டை அருகே கொண்டு வந்து நீட்டவேண்டும்? அப்படி தொலைவிலேயே வைத்துவிடக் கூடாதா?” கேட்டுக் கொண்டே மாடியில் உங்கள் அறைக்குச் சென்று வேறு உடை மாற்றிக் கொண்டு வருகிறீர்கள். அப்போதும் உங்கள் மகள் அழுதுகொண்டே மெதுவாகச் சாப்பிடுகிறாள் – வேண்டா வெறுப்பாக! பிறகு பள்ளி செல்லத் தயாராகி வெளியே வந்தால் பள்ளிப் பேருந்து போய்விட்டது… உங்கள் மனைவியோ உடனே செல்லவேண்டும்! என்ன செய்ய? மகளைக் காரில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு விரைகிறீர்கள் – காரை வேகமாக ஓட்டியபடி! 40 கி.மீ வேக வரையறை மறந்து 60 கி.மீட்டரில் ஓட்டுகிறீர்கள். நேரமாகிவிட்டதே! போலீஸ்காரர்கள் சும்மாயிருப்பார்களா? உரிய தண்டத்தொகை செலுத்திவிட்டு பள்ளிக்குப் போனால், கார் கதவைத் தடாலெனத் திறந்து உங்கள் மகள் “குட்-பை’ கூட சொல்லாமல் பள்ளிக்குள் ஓடுகிறாள். பிறகு 20 நிமிட தாமதத்தில் அலுவலகம் நுழைந்தால், அவசரத்தில் முக்கியமான கைப்பெட்டி “மிஸ்ஸிங்!’ -அது வீட்டில்! உங்கள் நாள் மிக மோசமாக அன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இதுவே தொடர்ந்தால் அன்றைய வேலைகள் அதோகதிதான்! எப்படியோ சமாளித்து மாலை வீட்டிற்குள் நுழைந்தால் உங்களுக்கும் உங்கள் மனைவி மகளுக்கும் இடையே மவுனயுத்தம் தொடங்கியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இது எதனால்? நீங்கள் காலையில் நடந்துகொண்ட முறை யினால். உங்கள் தினம் ஏன் அன்று மோசமானது?

1. காபியாலா? 2. மகளாலா? 3. போலீஸ்காரராலா? 4. உங்களாலா?

நிச்சயம் உங்களால்தான். காபியால் அன்று உங்களுக்கு நேர்ந்ததைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு அடுத்த 5 நிமிடங்களில் நீங்கள் நடந்து கொண்ட முறையே அன்றைய உங்கள் நாளைப் பாழாக்கியது. அதற்குப் பதிலாக, காபியை இப்படி சட்டையில் கொட்டிவிட்டோ மே என்று துணுக்குற்ற மகளிடம், “சரி, பரவாயில்லை; இனி இப்படிச் செய்யாதேம்மா’ என்று அன்போடு கூறி, அடுத்த நிமிடத்திலேயே மாடிக்குச் சென்று வேறுசட்டை மாற்றிக் கீழே வரும்போது உங்கள் செல்ல மகள் “டாடா’ சொல்லி வலியவரவழைத்த புன்னகையோடு “பஸ்’ ஏறியிருப்பாள். நீங்களும் 5 நிமிடம் முன்னதாக அலுவலகம் சென்று மேலதிகாரிகளிடம் “ஹவ் எ நைஸ் டே’ என்று புன்னகை பதிலைப் பறிமாறியிருக்கலாம்.

இரண்டுக்கும் உள்ள வேற்றுமையைப் பாருங்கள். 90% உங்கள் கைகளில்தானே உள்ளது. 90/10 கொள்கையை உங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க சில வழிகள்…

* உங்களைப் பற்றி தவறாக யாராவது சொல்லிக் கொண்டிருந்தால், கோபத்தை ஆயுதமாக்கக் கூடாது. கண்ணாடி அறையினுள் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பதுபோல் மனத்தைத் தெளிவாக்கி அகன்று விடலாம். சூழ்நிலைக்குத் தக்க, பொறுமையோடு கையாளலாம்.

* வேகமாகச் சென்று கொண்டிருக்கும் உங்கள் காரை வழிமறித்தால்… வேலையிழப்பு நேர்ந்தால்… விமானமோ ரயிலோ தாமதமானால்… பார்க்கவேண்டிய நபர் இல்லாமல் போனால்… – இப்படி பல சந்தர்ப்பங்களில் 10/90 கொள்கையைக் கடைப்பிடித்தால் வாழ்க்கை இனிதாகும். அது உங்கள் கையில்… – இப்படி நீண்டுகொண்டே போகிறது ஸ்டீபன் கோவேயின் கட்டுரை.

*** வாரியார் சுவாமி ஓரிடத்தில் கோபம் பற்றிச் சொல்வார்… “”சூடான பால் ஆறவேண்டும் என்றால் அதை வேறு டம்ளரில் மாற்றி ஊற்றி ஆற்றவேண்டும். அதுபோல் சூடான சூழ்நிலையால் உங்கள் மனம் சலனமுற்றால் அந்த இடத்தைவிட்டு அகன்று விடவேண்டும்.” – இது ஒரு வழி.

பிறர் உங்களைக் கோபப்படுத்தும்படி நடந்துகொண்டால் இப்படி நடந்துகொள்ளலாம். ஆனால் நீங்கள் பிறரைக் கோபப்படுத்தாமல் இருக்க ஒரு வழி உண்டு. பொதுவாகச் சொன்னால் – அடுத்தவர் குறைகளைப் பெரிதுபடுத்திப் பேசாமல் இருப்பது. பெரும்பாலும் மனிதன் அவதூறுகளைக் கண்டே கோபம் கொள்கிறான்.

குண தோஷௌ புதோ க்ருஹ்ணந் இந்துக்ஷ்வேளா விவேச்வர:| சிரஸா ச்லாகதே பூர்வம் பரம் கண்டே நியச்சதி||

உலகில் குணமே இருப்பவனும் குற்றமே இருப்பவனும் யாருமிலர். அனைவருக்கும் இரண்டும் கலந்தே இருக்கும். ஆனால் விவேகியானவன், இரண்டையும் தெரிந்து கொண்டு ஒருவனின் குற்றங்களை வாய்விட்டு வெளிவிடாமலும், குணங்களைத் தலையில் தூக்கிக் கொண்டாடியும் வாழவேண்டும். இதற்கு உதாரணம் – சிவபெருமான்.

மகாவிவேகியான பரமசிவனுக்கு, ஆலகால விஷமும் சந்திரனும் கிடைத்தன. சந்த்ரமௌலீச்வரன் என்ற பேருக்குத் தக்கபடி, தண்ணொளி பரப்பும் வெண்ணிலாவைத் தன்தலையில் வைத்துக் கொண்டாடுகிறான். நீலகண்டன்; காலகண்டன் எனும் பேர்களுக்குத் தக்க, விஷத்தைத் தன் கழுத்தில் அடக்கி மறைத்துவிட்டான். ஆனால் உலகில் நாமோ, பிறர் குணங்களை மறைத்து குற்றங்களையே வெளியிடுவோராயுள்ளோம்!

மகனிடம் பாடம்கேட்ட அந்த அப்பனிடமிருந்து, பிள்ளைகள் கற்கவேண்டிய பாடம் இது என்று தோன்றுகிறது. ஆனால் குணம், குற்றத்துள் ஒருவனுக்கு எது அதிகமாக இருக்கிறதோ, அதையறிந்து, அவனை சேர்க்கவோ விலக்கவோ வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஒரு வகையில் இதுவும் நன்மை தருவதே!

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

– இது இந்தக் கருத்துக்கான வள்ளுவன் குறள்.

இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்

சினத்தை அடக்கல் சிறப்பு.

– இது முந்தைய கருத்துக்கான என் குரல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe