spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைவிடுபட்ட வாக்காளர் பெயர்கள்! என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?!

விடுபட்ட வாக்காளர் பெயர்கள்! என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?!

- Advertisement -
voting by vips

பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றார்கள். அதுவும் ஒரு தொகுதியில் குறிப்பாக கோவை, வடசென்னை போன்ற தொகுதிகளில், ஒரு லட்சம் என்று சொல்வதெல்லாம் பெரும் அபாயம்! இதனை அந்த ஒரு லட்சம் பேரில் ஒருவர் கூடவா முன்னதாகவே அறிந்திருக்கவில்லை என்று கேள்வி எழுகிறது.

பொதுவாக வாக்காளர் பட்டியலின் பிரதி அனேகமாக அனைத்துக் கட்சியினரின் கைகளிலும் இருக்கும். ஆனால் அதில் விடுபட்டவர் பெயர்களை உணர்ந்து அறிந்து கொண்டு எச்சரித்து வாக்காளரை உசுப்பிவிட்டு அவர்களை தாலுகா அலுவலகத்தில் அல்லது தேர்தல் ஆணையத் தளத்தில் புகார் பதிவு செய்து – இந்த வேலை பார்க்கத்தான் – பூத் கமிட்டி – தேவை. இதைத்தான் உள்ளூர் அளவில் ஒரு கட்சி செய்ய வேண்டும்.

2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த நம் ராஜபாளையம் நண்பரின் மகனான கல்லூரி மாணவனுக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு இன்றி பெயர் நீக்கப் பட்டிருக்கிறது. கணவன் மனைவி ஒரே வீட்டில் இருந்தாலும் மனைவிக்கு மட்டும் வாக்குச் சாவடி தொலை தூரத்தில் என்று மாற்றப்பட்டிருக்கிறது. இவை எல்லாம் திட்டமிட்ட செயல்களென்று குற்றம் சாட்டுகிறார்கள். சில இடங்களில் வெறுமனே டேடா எரர் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரு கிராமத்தில் சுமார் 200 பேர் பெயர்கள் நீக்கப்பட்டதில், அந்த கிராமமே அவர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்தமாக வாக்காளர் அட்டையை சாலையில் வீசியுள்ளனர். இன்னும் பல இடங்களில் வாக்களிப்பதில் குளறுபடிகள்.

நெல்லை நண்பர் ஒருவர், வயதான தாயை அழைத்துக் கொண்டு காரில் சென்றுள்ளார். வாக்குச் சாவடிக்கு வெகு தொலைவிலேயே காரை நிறுத்தி நடந்து போக சொல்லியிருக்கிறார்கள்., இன்னும் கெடுபிடிகள் பல. இதைக் கேள்வியுறும் பிறர் எதற்கு வாக்களிக்க போவானேன் என்று வீட்டில் இருந்துவிடும் வாய்ப்புகளே அதிகம்!

சென்னை, மத்திய சென்னை தொகுதியில் உள்ள சைதாப்பேட்ட்டையில் 5000 அரசு ஊழியர்கள் உள்ளனர். இதில் 500 அரசு ஊழியர்கள் பெயர் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியவில்லை என அரசு ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்… என்று ஒருவர் செய்தி பகிர்ந்தார்.

அதானே பார்த்தான்… அவனுங்களாவது திரிசமம் பண்ணாம சும்மா இருப்பதாவது… ஏதாவது திரிசமஞ் செய்வானுங்க அது இயல்பு! என்றார், விடியலின் தில்லுமுல்லுகளைக் கதைகளாகக் கூறிய ஒருவர்.


இதில் எனக்கும் ஓர் அனுபவம் உண்டு.

1999 தேர்தலின் போது, தென்காசி தொகுதிக்காக, தென்காசி தாலுகா அலுவலகத்தில், (கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த) என் அப்பாவின் நண்பரான தேர்தல் துணை தாசில்தார் லட்சுமணனுக்காக – ஐந்தாறு மாதங்கள் – செக்‌ஷன் ரைட்டர் எனும் பிரிவில் – உதவி செய்தேன். அப்போதுதான் விஷுவல் ஃபாக்ஸ்ப்ரோ டேடாபேஸ் மூலம் – சென்னை எல்காட் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் கொண்டு – வாக்காளர் பட்டியல் தயார் செய்தார்கள்.

தினமும் தென்காசியில் இருந்து நெல்லை ஆட்சியர் அலுவலகம் சென்று பட்டியலை அங்கே இருக்கும் கணினியில் ஃபீட் செய்வோம். ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் இரண்டு பேர் இந்த வேலையை கலெக்டரேட்டில் அமர்ந்து செய்தோம். எனக்கு அலுவலக ரீதியாக அன்று உடன் வந்து அவ்வப்போது ரிப்போர்ட் செய்தவர் தாலுகா அலுவலகத்தில் டைப்பிஸ்டாக இருந்த ஹென்றி பீட்டர். அப்போது நெல்லை கலெக்டராக தனவேல் இருந்தார். ஒவ்வொரு நாளும் மாலை நேரம் வந்து பார்த்து, வேலை எப்படி போகுது, எவ்வளவு ஃபீட் ஆகியிருக்கு என்றெல்லாம் விசாரிப்பார்.

இதில் படிவம் 6,7, 8 என்பதை எல்லாம் நாங்கள் தான் கையாள வேண்டும். சேர்க்கை, மாற்றம், நீக்கம் என்பதாக இந்த மூன்று படிவங்கள். சாதாரணமாக பொதுமக்களிடம் இருந்து பெறும் படிவங்களை ரைட்டா, ரைட்டு, இருக்கா இருக்கு, சரியா சரி, இல்லியா இல்ல… என்பது மாதிரி ஒருவர் சொல்ல ஒருவர் செய்ய என்று செக் செய்து, பின்னர் பதிவேற்றம் ஆகும்.

முதலில் ஒரு லிஸ்ட் கொடுத்தார்கள். அதில் ஏற்கெனவே இருந்த பட்டியலில் இருந்து டேட்டாபேஸில் எல்காட் ஊழியர்கள் சென்னையில் பதிவேற்றி இருந்தார்கள். அதில் பலரது பெயர்கள் தாறுமாறாக இருந்தன. ஒருவர் பெயர் பீச் என்று இருந்தது. ஆழத் தேடிப் பார்த்த போது அவர் பெயர் கடற்கரை. அதை மொழிமாற்றி ஃபீட் செய்திருந்தார்கள். அது போல் வெள்ளைத் துரை என்று இருந்தால் வொய்ட் துரை என்று இருக்கும். இன்னும் பலப் பல. இவற்றை எல்லாம் கவனமாக சரி செய்தோம்.

இது, வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான எனது அன்றைய (கால் நூற்றாண்டுக்கு முந்தைய) அனுபவம்.

இப்போது சொல்லக் காரணம், வாக்காளர் பட்டியல் என்பது முழுக்க முழுக்க உள்ளூர் தாசில்தார் – ஆட்சியர் மேற்பார்வையில் அவர்கள் சொற்படி நடப்பது. இன்று அரசு ஊழியர்கள் பலர் ஆளும் விடியல் அரசுக்கு விடியாத தரவுகள் ஆகிவிட்டதால், பெரும்பாலானோர் பெயர்கள் வேண்டுமென்றே விடுபட்டிருக்கின்றன. அப்படி எனில், படிவம் 7, 8ன் பிரதிகள் நிச்சயம் தாலுகா அலுவலகங்களில் வைத்திருக்க வேண்டும். பெயர்கள், முகவரி மாற்றப்பட்டோ நீக்கப்பட்டோ இருக்குமானால், இந்தப் படிவங்களை தேர்தலுக்கான தாசில்தார்கள், ஆட்சியரிடம் அளித்து, தேர்தல் ஆணையத்துக்கு அளித்தாக வேண்டும். இப்போது எழுந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்தச் செயல் நியாயமாக நடக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். ஒருவேளை நீதிமன்றத்தின் கதவுகளை யாரேனும் தட்டினால், பெயர்கள் நீக்கத்தின் பின்னுள்ள செயல், உண்மைத்தன்மை வெளித்தெரியக்கூடும்!

போன முறை வாக்களித்த இளைஞர்கள், புதிதாக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் பலர் -இந்த முறை பெயர் இல்லாமல் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.

சில இடங்களில் ஒட்டுமொத்தமாக ஒரு பஞ்ச் – தொகுப்பாக, நாலைந்து பக்கங்களாக பட்டியலில் இருந்து உருவப் பட்டிருக்கிறது. இவை எப்படி டேடாபேஸில் இருந்து டெலிட் ஆகின என்பது, மாவட்ட ஆட்சியருக்கே வெளிச்சம்.

இந்த முறை பல ஆட்சியர்கள் ஆளும் அரசுக்கு கைப்பாவையாக செயல்பட்டிருக்கின்றனர் என்பது கண்கூடு. திமுக.,வினர் கொண்டு செல்லும் பணப்பெட்டிகளை கண்டுகொள்ளாமல் விட்டனர். நீலகிரியில் ஒரு அம்மணி – டிவி தயவில் – நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டதுடன் சரி… வேறு எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆட்சியர் அலுவலக அட்ஜஸ்மெண்ட்டில் எல்லாம் சரியாகிவிட்டதாகவே தெரிகிறது.

ஆனால்… எலக்சன் கமிஷன் வெப்சைட் அல்லது ஆப் நம் மொபைலில் நிரந்தரமாக பதிவிறக்கி வைத்து, – நம் பெயர் இருக்கிறதா அல்லது தூக்கிவிட்டார்களா என்று இரண்டு மாதத்துக்கு ஒரு முறை சரி பார்த்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு விடியல்கள் நம் மக்களைத் தள்ளி விட்டிருக்கிறார்கள். மக்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட பறித்துக் கொள்ளும் பாசிஸ விடியலரசு நிச்சயம் இதன் விளைவை சந்தித்தே ஆகவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe