அமைதி ஆக்கப்பட்ட அழகிரி..! பொங்குவாரா? பதுங்குவாரா?

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

azhagiri - 2026

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

இதை அடுத்து, அடுத்தடுத்த அரசியல் பரபரப்பு இன்றுசெய்தியாளர்களை தொற்றிக் கொண்டிருக்கிறது. ஞாயிறு பொழுது இன்று காலையே அமமுக., து.பொ.செ டிடிவி தினகரனால் பிள்ளையார் சுழி இடப்பட்டு, தொடங்கப் பட்டிருக்கிறது. தொடர்ந்து அதிமுக., மற்றும் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிப் பட்டியலை ஓபிஎஸ் வெளியிட்டார்.

அடுத்து… மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலும் இன்று காலை வெளியாகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார். இதனால் அண்ணா அறிவாலயம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் திமுக.,வுக்கு மீண்டும் சூடு கொடுக்கத் தொடங்கி இருக்கிறார் மு.கருணாநிதியின் மகன் மு.க அழகிரி. முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் மு.க அழகிரி மீண்டும் திமுகவில் சேர்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால்,  திமுக தலைவர் ஸ்டாலின் அதனை நிராகரித்தார். அழகிரி மீண்டும் கட்சியில் இடம்பெறாத அளவுக்கு பார்த்துக் கொண்டார். இதை அடுத்து, மு.க அழகிரி சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி சென்றார். ஆனால் அது எதிர்பார்த்த எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை!

பின்னர் அரசியல் களத்தில் மு.க. அழகிரி அமைதி ஆக்கப் பட்டார். அதிரடி அரசியல் செய்து வந்த அழகிரி, காலத்தின் கட்டாயத்தாலும் கருணாநிதியின் ஓரவஞ்சத்தாலும் அமைதி நிலைக்குச் சென்றார். அவ்வப்போது சத்தம் போட்டாலும், அது காற்றில் கரைந்த நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதிரடி அரசியல் களத்துக்கு அழகிரி வந்துள்ளதாகக் கூறப் படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தல் காரணமாக அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

திமுக இன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபிறகு மு.க. அழகிரி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகக் கூறினார். இந்த சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நான் பேசுவேன் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். இதை அடுத்து சென்னையில் செய்தீயாளர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.