spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்ஆயர்கள் தோற்றுவித்த மகரத் திருநாளும் ஏறுதழுவுதலும்!

ஆயர்கள் தோற்றுவித்த மகரத் திருநாளும் ஏறுதழுவுதலும்!

- Advertisement -

மகரத்திருநாள்: ஆயர்கள் தோற்றுவித்த மகரத்திருநாளும் ஏறுதழுவுதலும்: YeruThazhuvuthal(BullHugging):

இந்திரனிடமிருந்து, ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து கண்ணபிரான் காத்தருளிய நாளே “மகரத்திருநாளாகும் தை-1”.

தை 1-ம் நாள் சூரியபகவானை சூரியநாராயணராக பாவித்து புதுப்பாலும் புத்தரிசியும் வெல்லமும் இட்ட பொங்கல் படைத்து ஆயர்கள் விழாவை கொண்டாடினர்.

பொங்கல் என்பது உணவின் பெயர். பொங்குதல் என்பதன் வினைப்பெயரே பொங்கல்.

இந்திரன் தன் தவறை உணர்ந்து கண்ணனிடம் தன்னையும் மக்கள் வழிபட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதால் தை 1-ம் நாள் முன்தினம் “இந்திர வழிபாடை(போகி பண்டிகை)” ஆயர்கள் கொண்டாடினர். போகி என்ற சொல் இந்திரனை குறித்தது. போகத்தை(விளைச்சலை) தந்தவன் போகி. பிற்காலத்தில் ஆயர்கள், போகத்தை(விளைச்சலை) தருபவனான கலப்பை ஏந்தியுள்ள உழவுக்கடவுள் ஆயர்களின் மூத்ததெய்வம் பலராமரை வழிபட தொடங்கினர்.

மகரத்திருநாளின் மறுநாள் ஆயர்கள் தங்களின் ஆநிரைகளுக்கு விழா (மாட்டுப்பொங்கல்) எடுத்து தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும், “கோ பூஜை” செய்து பசுக்களை வழிபட்டும், காளைகளுடன் விளையாடியும் (கொல்லேறு தழுவுதல்) விழாவை கொண்டாடினர். காளைகளுடன் விளையாடுவதே ஏறுதழுவுதல்.கொல்லக்கூடிய காளையைத் தழுவி”அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

ஏறுதழுவுதல், என்பது தொன்மை குடிகளான ஆயர்களின் மரபுவழி குல விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். ஏறுதழுவுதல் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆயர்கள் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் வருகிறது. மாட்டை ஓடவிட்டு அதை ஆயர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான் விளையாட்டு.

பிற்காலத்தில், 7 காளைகளை அடக்கி தன் மாமன் மகளான நப்பின்னை என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அதனை தங்கள் குல வழக்கமாக கொண்டு காளையை அடக்கும் ஆயர்குல மாவீரனுக்கே, அந்த பெண்ணிற்கு பிடிக்கும் பட்சத்தில் ஆயர்குலத்தினர் தங்கள் பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

சங்க இலக்கியமான கலித்தொகை:
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய – உயிர்துறந்து
நைவாரா ஆய மகள் தோள்.

“கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை(ஆயனை) மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்.” என்பதாகும். பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தை கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர். ஏறுதழுவும் ஆயர்குல வீரனைப் பொதுவன் என்பர்

ஆயச்சியர் குரவைக்கூத்தும் ஏறுதழுவுதலும்:

ஏறுதழுவலுக்கும் குரவைக்கூத்திற்கும் தொடர்புள்ளது. குரவைக்கூத்து ஏறுதழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறுதழுவும் நாளின் மாலையிலாவது ஆயர்மன்றத்தில் நிகழும். முதல் நாளாயின் தம் ஆயனை ஏறுதழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் ஆயனின் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர்குல மகளிர் பாடுவர்.

புலிக்குளம் காளை:

புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஏறுதழுவுதலுக்கு(சல்லிக்கட்டு) என்று தனிச்சிறப்பாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம் . இது காங்கேயம் காளைகளை விட மிகவும் மூர்க்கமானது. புலிக்குளம் காளைகளைப் பாரம்பரியக் கால்நடை வளர்ப்பாளர்களான கோனார்களே (ஆயர்) வளர்த்து வருகின்றனர். உலகளவில் இந்திய நாட்டின் பசுக்களின் பாலே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதிலும் புலிக்குளம் இனப்பசுக்களின் பாலே சிறந்தது என்று விஞ்ஞானிகளால் நிருபிக்கப்பட்டுள்ளது.கோனார்கள்(ஆயர்) தங்கள் கடவுள் கிருஷ்ணனின் ஆணையாக ஏற்று புலிக்குளம் பசுக்களின் பாலை விற்காமல் இலவசமாக கொடுத்து வருகின்றனர்.

ஏறுதழுவுதல் பயிற்சி:

ஏறுதழுவுதலுக்கு தயாராகும் முன் ஆயர்கள் செய்யும் பயிற்சியே கபாடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது.

ஏறுதழுவுதலை மையப்படுத்தி ஆயர்களால் உருவாக்கப்பட்ட விளையாட்டு கபாடி. எதிரணிக்கு செல்லும் வீரர் மாட்டைப்போல் கருதப்படுவார். அவ்வீரரை தொடவிடாமல் மடக்கி பிடிப்பது, மாட்டை முட்ட விடாமல் அடக்குவதற்கு சமமாகும்.

ஏறுதழுவுதல் வகைகள்:

ஏறுதழுவுதல், தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு: மதுரை சுற்றுவட்டார பகுதிளில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக்காசு’ என்னும் நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது.

வேலி மஞ்சுவிரட்டு: வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டி பிடிப்பதும் நடைபெறுகிறது.

வடம் மஞ்சுவிரட்டு: வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில் 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.

இவ்வாறு வெவ்வேறு பெயர்களில் ஏறுதழுவுதல் நடைபெறுகிறது.

பழந்தமிழ் இலக்கியங்களிலும், சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரையில் காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் ஏறுதழுவல், தமிழகத்தை போல ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் வெவ்வேறு பெயர்களில் தை மாதத்தில் மகரத்திருநாளின் மறுநாள் நடத்தப்படுகிறது. அக்காலத்தில், ஆயர்களின் திருமண காலங்களிலும் ஏறுதழுவல் நடைபெற்றது.

பிற மாநிலங்களில் ஏறுதழுவுதல் நடைபெற்றாலும், ஏறுதழுவிய ஆயருக்கு பெண் கொடுக்கும் வழக்கம் பற்றி தமிழ் இலக்கியம் எடுத்துரைக்கிறது.

ஏறுதழுவுதலுக்கு, பெண் கொடுக்கும் வழக்கத்தை முதன் முதலில் தோற்றுவித்தவர் கண்ணனின் தாய்மாமனும் அன்னை யசோதையின் தமையனுமான, அரசர் கும்பக்கோன்.

ஏறுதழுவி திருமணம் செய்து கொண்ட முதல் ஆயர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

  • மதுரை கா.ராஜேஷ்கண்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe