
ரஜினி காந்த் அரசியல். ரஜினி காந்தின் இன்றைய பேச்சு தெளிவில்லாத அணுகுமுறையாக, தயக்கத்தின் வெளிப்பாடாகவே பலராலும் பார்க்கப்படும், ஊடகங்களால் சித்திரிக்கப்படும். அப்படி பார்க்கப்படுவதில் வியப்பில்லை.
ரஜினி காந்த் கட்சியை துவக்க வேண்டும், கட்சியை ஆரம்பிக்க கூடாது , துவக்குவார், மாட்டார் என்னும் எண்ணங்களில் ஒன்றை ஏற்கெனவே உருவாக்கிக் கொண்டுவிட்டவர்கள் அதற்கு ஏற்ற வகையில் அவரது பேச்சை புரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பது தான் உண்மை.
ஆனால், மிகுந்த பொறுப்புணர்வும், அரசியல் கள அறிவின் முதிர்ச்சியும், யதார்த்த நிலையை உணர்ந்த தெளிவும் அவரது பேச்சில் வெளிப்படுகின்றன.
1960 களில் வலிமை பெற்ற திராவிட அரசியலையும், 1967 ல் துவங்கி தொடரும் திராவிட ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வருவது தான் தமிழ் நாட்டின் நலனுக்கு நல்லது என்பதில்
தெளிவாக இருக்கிறார்.
திமுக, அதிமுக ஆகியவற்றின் அமைப்பு ரீதியான
பலமும், பண பலமும் அசுர பலம் கொண்டது என்ற உண்மையை தெளிவாக உணர்ந்து பேசுகிறார்.
தனது சினிமா செல்வாக்கு மற்றும் ரசிகர் மன்ற பலத்தை மட்டுமே கொண்டு இந்த இரண்டு பெரிய கட்சிகளை வீழ்த்தி விட முடியாது என்கிற யதார்த்த நிலை உணர்ந்து பேசுகிறார்.
அதே சமயம் , திமுக மற்றும் அதிமுகவை வீழ்த்துவது முடியவே முடியாது என்ற கருத்தை அவர் ஏற்கவில்லை. வீழ்த்த முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறார்.
திமுகவின் பலம் என்பது திமுக ஆதரவு ஓட்டுகள் + அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள். அதிமுக பலம் என்பது அதிமுக ஆதரவு ஓட்டுகள்+ திமுக எதிர்ப்பு ஓட்டுகள். திமுகவையும் , அதிமுகவையும் எதிர்த்து வீழ்த்த சக்தி வாய்ந்த மூன்றாவது சக்தி ஒன்று உருவானால், திமுகவுக்கு கிடைத்து வரும் அதிமுக எதிர்ப்பு ஓட்டுகளும், அதிமுகவுக்கு கிடைத்து வரும் திமுக எதிர்ப்பு ஓட்டுகளும் மூன்றாவது அரசியல் சக்தியின் பின்னால் திரளும்.
இந்த வாக்குகள் திமுக , அதிமுக ஆதரவு வாக்குகளை விட அதிகம். அதனால் திமுகவும், அதிமுகவும் வீழ்த்த முடியாத கட்சிகள் அல்ல. குறிப்பாக, கருணா நிதி, ஜெயலலிதா என்னும் ஆளுமைகள் இல்லாத இன்றைய சூழல் மூன்றாவது அரசியல் சக்திக்கான வாய்ப்பை எளிதாக்கி இருக்கிறது.
அதே சமயம், மூன்றாவது அரசியல் சக்தியின் பக்கம் வாக்காளர்களை கொண்டு வர வேண்டுமென்றால், வழக்கமான அரசியலில் இருந்து மாறுபட்ட, வெற்றியடைய வாய்ப்பு இருக்கிறது என்று நம்பிக்கை ஊட்டக் கூடிய மாற்று இது என்ற தோற்றத்தை உண்டாக்க வேண்டியது அவசியம்.
அந்த தோற்றத்தை தர படித்த இளைஞர்களையும்,
இளம் பெண்களையும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், நீதிபதிகள், டாக்டர்கள் போன்றவர்களையும் கட்சி முன்னிறுத்தவேண்டும்.
திராவிட அரசியலை நிராகரிக்கும் ஒரு இயக்கமாக புதிய கட்சியின் தோற்றம் அமைய வேண்டும். அந்த மாற்றத்திற்கான புரட்சி வெடிக்க வேண்டும்.
திராவிட அரசியலை நிராகரிப்பது என்பது பாஜக மதச் சார்பு அரசியலை வரவேற்பது அல்ல. ஜாதி, மத அடையாளங்களை கடந்த ; ஆன்மீகத்தை வெறுக்காத ; ஜாதிய கட்டமைப்புகளை நிராகரிக்காத அரசியலை விரும்பும் அனைத்து தரப்பினரையும் ஓரணியில் திரட்டுவது அந்த புரட்சியின் அடையாளமாக இருக்க வேண்டும். இப்படியொரு அரசியல் இயக்கத்தால் மட்டுமே, திமுக, அதிமுக ஆகிய இருபெரும் அரசியல் சக்திகளை வீழ்த்த முடியும்.
2021 தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டையும் தோற்கடிக்க முடியும் என்றால் மட்டுமே கட்சியை துவங்குவதில் அர்த்தம் இருக்கிறது. மாறாக, கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக கட்சியை ஆரம்பிக்கத் தேவையில்லை.
தேவைப்படுவது ரஜினி காந்தின் அரசியல் வருகை அல்ல. இன்றைய அரசியலுக்கு மாற்றான அரசியல் தேவைப் படுகிறது. அந்த அரசியல் மாற்றத்திற்காக ஒரு பொதுவான இயக்கம் அவசியமாக இருக்கிறது. அப்படி தோன்றும் இயக்கத்திற்காக தனது சினிமா செல்வாக்கை பயன்படுத்த ரஜினி காந்த் தயாராக இருக்கிறார்.
சினிமா கதாநாயகன் என்றால் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நிர்வாக திறமை கொண்டவர்களும் அதில் ஆர்வம் உள்ளவர்களும் அதை கவனித்து கொண்டால் போதுமானது. அவர்களை தவறு செய்ய விடாமல் கண்காணிப்பது போதுமானது. திரைப்பட திரைக்கதை காட்சிகளைப் போல தோன்றினாலும், ரஜினி காந்த் தரையில் கால்படாத, இரண்டடிக்கு மேல் நடக்கும் மிகைபட்ட தன்னம்பிக்கையுடன் இல்லை ; சூழ்நிலையின் தன்மையை உள்ளது உள்ளபடி உணர்ந்து இருக்கிறார் என்பதையே இன்றைய அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன.
அரசியல் கட்சி என்பதும் ரசிகர் மன்றம் என்பதும் ஒன்றல்ல; அரசியல் கட்சி துவக்கப்பட்டால் அதில் நீங்களும் ஒரு பகுதியாக இருக்கலாம், நீங்களே கட்சி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று தனது ரசிகர்களுக்கு புரியவைக்க முயற்சிக்கிறார்.
ரஜினி காந்த் கட்சி என்றால் அது அவரது ரசிகர்களின் கட்சி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் அனைவரும் வாருங்கள். இது உங்கள் கட்சி என்று அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கிறார். இது தான் இன்று நடந்து இருக்கிறது.
- வசந்தன் பெருமாள்