
வேதா டி. ஶ்ரீதரன்
ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் என்பது ஒரு வக்கிரமான சதி. (தீர்ப்பு முடிவல்ல, ஆபத்து காத்திருக்கிறது – துக்ளக் தலையங்கம் 1.11.2023)
சுமார் 75 வருடங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் ஆரம்பித்த இந்த வக்கிரத்தின் பின்னணியில் வல்லரசுகளின் சதியும் உண்டு. கார்ப்பரேட்டுகளின் பங்களிப்பும் உண்டு. தற்போது மனித உரிமை என்ற பெயரில் இந்த வக்கிரம் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. சுமார் இருபது ஆண்டுகளாக, பாரதம் போன்ற பண்பட்ட தேசங்களையும் குறி வைக்கிறது.
அமெரிக்கா தரும் படிப்பினைகள்
இந்த விஷயத்தில் அமெரிக்காவில் இருந்து நாம் சில படிப்பினைகளைப் பெறுவது நல்லது.
படிப்பினை 1:
1940கள் வரை அமெரிக்கச் சமுதாயத்தில் பெண்கள் வேலைக்குப் போவது குறைவு. வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் கணவனையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் கடமையைப் புறக்கணிப்பவர்களாகக் கருதப்பட்டார்கள்.
1950களில் சில ஹோமோசெக்சுவல்கள் (இந்தியாவில் தற்போது ஒலிப்பது போல) ‘எனது இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இல்லையா?’ என்று அமைப்பு ரீதியான போராட்டங்களைத் தொடங்கினார்கள். இவர்களுக்கு ரஷ்ய ஆதரவு கிடைத்தது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டக்காரர்கள் சோஷலிசம், சமத்துவம், உலகளாவிய சகோதரத்துவம் என்றெல்லாம் பேசிக்கொண்டு திரிந்தார்கள். ஆரம்ப காலத்தில் இவர்கள் பெண்ணுரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார்கள்.
அதேநேரத்தில், இந்த இயக்கம் பெண்கள் மத்தியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது. ‘இது ஆணாதிக்கச் சமுதாயம், இதில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்’ என்ற குரல்கள் பெண்கள் மத்தியில் ஒலிக்க ஆரம்பித்தன. ஹோமோசெக்சுவல்களுக்குப் போட்டியாகப் பெண்ணுரிமை இயக்கங்கள் தலைதூக்கின.
ஆரம்பத்தில், இந்த இயக்கங்கள் ஆண்-பெண் சமத்துவம் தேவை, பாலியல் ரீதியீலான பாகுபாடுகள் மறைய வேண்டும், ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம்தான் பேசி வந்தார்கள். காலப்போக்கில், ‘நம்மை அடிமைப்படுத்தி இருக்கும் ஆண் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை நாம் மணம் முடிக்கலாமா? அது தகாது. எனவே, நாம் பெண்ணும் பெண்ணுமாக இணைந்து வாழுவோம்‘ என்று ஆரம்பித்தனர்.
தற்காலத்தில் அமெரிக்கப் பெண்ணுரிமை இயக்கங்கள் என்றாலே அது லெஸ்பியன் இயக்கம் என்று ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல, இந்த இயக்கங்களுக்குள் நடைபெறும் பாலியல் வக்கிரங்கள் பலரை முடமாக்கியுள்ளன.
இந்த லெஸ்பியன்கள் அனைவரும் ஏதோ தரங்கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, மிகவும் கண்ணியமான குடும்பங்களில் பிறந்து வளர்ந்தவர்களே என்பதுதான் மிகப்பெரிய ஷாக்கிங் சமாசாரம்.
இதுபோன்ற காரணங்களால், அமெரிக்கச் சமுதாயத்தில், ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் குடும்பம் என்ற கருத்து படிப்படியாக வலுவிழக்கத் தொடங்கியது.
படிப்பினை 2:
பெண்ணியவாதிகளால் கவரப்பட்டு ஏராளமான அமெரிக்கப் பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். தற்காலத்தில் வேலைக்குச் செல்லாத இல்லத்தரசிகள் வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாதவர்களாகக் கருதப்படுகிறார்கள். வேலைக்குச் செல்லும் இதர பெண்களைவிட அவர்கள் அறிவுத்தரம் குறைந்தவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். சுயமரியாதை குறைந்தவர்களாகவும் பெண்ணாகப் பிறந்ததற்காகப் பெருமைப்படாதவர்களாகவும் மதிப்பிடப்படுகிறார்கள்.
இதனால், தனக்குப் பாரம்பரியமாக வாய்த்துள்ள தாய், மனைவி ஆகிய பொறுப்புகளை முழு மனதுடன் நிறைவேற்ற விரும்பும் பெண்களும்கூட தங்கள் முன்னே காத்திருக்கும் புதிய வாய்ப்புகள், வருமானம், சமுதாய அந்தஸ்து முதலியவற்றால் கவரப்படுகிறார்கள். இது அவர்களது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. தங்களை அறியாமலேயே, அவர்கள் தங்கள் குழந்தைகளின் மூலம் தங்களுக்கு சமுதாய அந்தஸ்தை ஏற்படுத்திக்கொள்ளத் தலைப்படுகிறார்கள். தங்கள் பிள்ளைகளை மிகச்சிறு வயதிலேயே பெரிய சாதனையாளர்களாக்கி, அவர்கள் மூலம் தங்களுக்கு சமுதாயத்தில் ஓர் உயர்ந்த இடத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார்கள்.
பாவம், அவர்கள் சிறு குழந்தைகள். பெற்றோரின் அரவணைப்புக்குப் பதிலாக, குருவி தலையில் பனங்காயை வைத்ததுபோல, அவர்கள்மீது பெரிய பெரிய சுமை ஏற்றி வைக்கப்படுகிறது. இதனால், அவர்கள் மீளவே முடியாத அளவுக்குப் பெரிய அளவில் உளவியல் ரீதியாகப் பாதிப்படைகிறார்கள்.
அமெரிக்காவில் அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நாம் அறிந்திருப்போம். ஆனால், அமெரிக்காவில் பள்ளிப் பருவத்திலேயே பெரும்பாலானோர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதும், பள்ளிப் பருவத்திலேயே கருத்தரிப்பது சகஜமான விஷயமாகி விட்டது என்பதும் நம்மில் பலரும் அறியாத தகவல். இதுபோன்ற ஏராளமான பாதிப்புகளுக்கு முக்கியக் காரணம் இத்தகைய குழந்தை வளர்ப்புதான்.
படிப்பினை 3:
ஏற்கெனவே, மேற்கத்திய சமுதாயம் தனிநபர் சுதந்திரத்தை மையமாகக் கொண்டது. அத்துடன் மட்டு மீறிய பெண் சுதந்திரமும் சேரவே, விவாகரத்துகள் எல்லை மீறின. அனேகமாக, அமெரிக்காவில் 50 சதவிகிதப் பிள்ளைகள் தங்களது முதல் பெற்றோரின் விவாகரத்தைப் பார்த்தவர்கள். சுமார் இருபத்தைந்து சதவிகிதம் பேர் தங்களது இரண்டாவது பெற்றோரின் விவாகரத்தையும் பார்த்தவர்கள்.
விவாகரத்து இவ்வளவு அதிகரித்த போதிலும், விவாகரத்துக்குப் பின்னர் குழந்தைகளை வளர்ப்பது பெரும்பாலும் (சுமார் 75 சதவிகிதம்) தாயின் கடமையாகவே இன்னும் தொடர்கிறது. குடும்ப அமைப்பு அடியோடு பாதிப்படைந்து விட்ட அந்த நாட்டில்கூட, பெண் என்பவள் இன்னமும் தாயாகத்தான் இருக்கிறாள். அதேநேரத்தில் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம், குழந்தை வளர்ப்பு முதலான பல்வேறு காரணங்களால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
இவைபோன்ற இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு. சுருக்கமாகச் சொல்வதென்றால், இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் ஆரம்பித்த விஷயம் தற்போது அமெரிக்கச் சமுதாயத்தை அதன் பாரம்பரியத்தில் இருந்து அடியோடு விலக்கி விட்டது. குடும்பம் உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் கேலிக்குரியவை ஆகிவிட்டன. பெரியோரின் வழிகாட்டுதலைச் செவிமடுக்கும் நிலையில் பிள்ளைகள் இல்லை. மொத்தத்தில் தற்போதைய அமெரிக்கக் குழந்தைகளுக்கு வாழ்க்கை முறையைச் சொல்லிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் என்று எதுவுமே இல்லை.
ஒரே பாலினத் திருமணத்துக்கு ஆதரவாக இந்தியாவில் குரல் கொடுப்பவர்கள் இங்கேயும் இத்தகைய நிலைக்கு வழிவகுக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். இத்தகைய முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.