தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
சிம்ஹ மேஷ ந்யாய: – சிம்ஹம் – சிங்கம். மேஷம் – ஆடு.
இது ஒரு பிரபலமான நியாயம் இது ஏதோ விலங்குகளின் கதையல்ல. இந்த நியாயத்தில் இரண்டு விதமான செய்திகள் உள்ளன.
ஒன்று வேதாந்த அர்த்தம். நம் உண்மை சொரூபத்தை அறிவது. இரண்டாவது உலகியல் அர்த்தம். ‘நீ வலிமை கொண்டவன்’ என்ற தன்னம்பிக்கையை அளிப்பது.
வேதாந்த வகுப்புகளில் இந்த ‘சிம்ஹ மேஷ’ நியாயத்தொடு தொடர்புடைய கதையை எடுத்துக்காட்டுவது வழக்கம்.
ஒரு ஊரில் ஒரு ஆடு மேய்ப்பவன் இருந்தான். அவன் ஒருநாள் ஆடுகளை மேய்த்து வருகையில் ஒரு சம்பவம் நேர்ந்தது. நிறைமாத கர்ப்பத்தோடு இருந்த ஒரு சிங்கத்தை ஒரு வேடுவன் அம்பு விட்டு அடித்தான். அந்தச் சிங்கம் ஒரு குட்டியை ஈன்றுவிட்டு ஓடி மறைந்தது.
ஆடு மேய்ப்பவன் கருணையோடு அந்தச் சிங்கக் குட்டியை எடுத்து வந்து ஆடுகளோடு சேர்த்து வளர்த்து வந்தான். அது ஆடுகளைப் போலவே இலை, தழைகளைத் தின்று, வளர்ந்து வந்தது. ஆடுகளைப் போலவே ம்மே ம்மே என்று கத்தியது.
ஒருநாள் ஒரு பெரிய சிங்கம் அந்த ஆட்டுமந்தையில் இருந்த சின்னச் சிங்கத்தைக் கண்டது. ஆடுகளோடு சேர்த்து அதுவும் ஓட்டம் பிடித்தது. இயல்பான பகைவர்களின் இடையில் ஆட்டைப் போலவே நடந்து கொண்ட சிங்கக் குட்டியை, பெரிய சிங்கம் பிடித்து நிறுத்தியது. புதிய விலங்கைப் பார்த்து அஞ்சிய சிங்கக் குட்டி, ம்மே ம்மே என்று கத்தியது. பெரிய சிங்கம், அஞ்சாதே என்று கூறி சிங்கக் குட்டியை ஒரு நதியருகில் அழைத்துச் சென்று, அதன் நிழலை அதில் காண்பித்தது. “சரியாகப் பார். நாம் இருவரும் ஒன்று போல் இருக்கிறோம். உன் பிடரி மயிரைப் பார்” என்று சிங்கக் குட்டிக்கு உண்மையை உணர்த்தியது. கர்ஜனை செய்வதற்குக் கற்றுக் கொடுத்தது. குட்டிச் சிங்கத்தை ஆட்டு மந்தையில் இருந்து விலக்கி, தன்னோடு அழைத்துச் சென்றது. இது சுருக்கமாக ‘சிம்ஹம் மேஷம்’ கதை.
சுவாமி விவேகானந்தர், இந்தக் கதையைத் தன் சொற்பொழிவுகளில் அடிக்கடி எடுத்துக் காட்டுவார். வெளிநாட்டு மதமான கிறித்தவம் சர்ச்சுகளில் மக்களைப் பார்த்து, “பாவிகளே” என்று அழைப்பது அவருக்கு வருத்தத்தை அளித்தது. பல சந்தர்பங்களில் அவர் உரையாற்றும் போது, “நீங்கள் பாவிகள் அல்ல. அமிர்தத்தின் புதல்வர்கள். நாம் அமிர்தப் புத்திரர்கள்” என்று கர்ஜனை செய்வார்.
“சிங்கங்களே, விழித்தெழுங்கள் நீங்கள் ஆடுகள் என்ற பிரமையிலிருந்து வெளியே வாருங்கள். அமிர்தப் புதல்வர்கள் நீங்கள். எத்தனை இனிமையான உற்சாகமூட்டும் பெயர்
அமிர்தம்” என்று கூறும் சுவாமிஜி, “நீ என்னவாக வேண்டும் என்று விரும்புகிறாயோ அதுவாகவே ஆவாய். நீ உன்னை பலவீனனாக நினைத்தால் பலவீனமாக ஆவாய். வலிமையுள்ளவனாக நினைத்தால் வலிமையுள்ளவனாக ஆவாய். இந்த சிம்ஹ மேஷ நியாயத்தின் அர்த்தங்களில் இதுவும் ஒன்று. கள்ளமற்ற மனிதர்களைப் பாவிகள் என்று அழைப்பது எத்தகைய பாவம்?” என்று கூறுவர் சுவாமிஜி, மேற்சொன்ன கதையிலுள்ள பெரிய சிங்கத்தைப் போல, இந்த இளைய சுவாமிஜி உண்மையைத் தெளிவுபடுத்தி குருவாக ஆனார்.
வெளிநாட்டு யாத்திரைக்குப் பின்னர் அவர் பாரத மண்ணில் பாதம் பதித்தபோது ஏற்பாடு செய்த வரவேற்புக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்வாமிஜி, சிங்கத்தைப் போல் கர்ஜித்தார். “எழுமின், விழிமின், மனிதர்களாகுங்கள். நாம் அடிமைகள் என்றும் எதற்கும் பயன் படமாட்டோம் என்றும் நம் மூதாதையரான ரிஷிகள் சொல்லியதெல்லாம் நகைப்புக்குரியன என்றும் எவனோ வெளியாள் கூறியவுடன் அதுவே உண்மையென்று நம்பி அவனுடைய பூட்சைத் துடைப்பது எத்தகைய கீழ்மை வாய்ந்தது? எத்தனை பரிதாபம்” என்று கூறி இந்த ‘சிம்ஹ மேஷ’ நியாயத்தை எடுத்துக் காட்டினார். “நீங்கள் என் பாரத தேசச் சிங்கங்கள்” என்றார் சுவாமி விவேகானந்தர்.
இந்த நியாயத்திற்கான வேதாந்தப் பொருள் என்னவென்றால், “தத்வமசி, அஹம் பிரஹ்மாஸ்மி, நான் உடல் என்ற ‘தேக பிராந்தி’ இருக்கக் கூடாது” என்று கூறுவது. “ஸ்வ – ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்” என்று கூறுவதே இதன் சாராம்சம். வேதாந்த சாத்திரத்தில் இந்தக் கதையை மற்றொரு விதமாக விளக்குவார்கள்.
ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான். எதிரிகளின் தாக்குதலில் நாட்டை இழந்தான். அந்த அரசனின் ராணி கருவுற்றிருந்தாள். மந்திரிகள் சாமர்த்தியமாக அவளை எதிர்களிடமிருந்து பாதுகாத்து காட்டில் மறைத்து வைத்தனர். சில நாட்களில் அவள் ஒரு ஆண் சிசுவுவைப் பெற்றெடுத்தாள். காட்டில் வேடுவர்களிடையே வளர்ந்த அந்த சிறுவன் தான் அரசகுமாரன் என்ற உண்மையை மறந்தான்.
சில காலம் கழிந்தது. இளைஞனான அரச குமாரனுக்கு மந்திரி உண்மையை எடுத்துரைத்தான். “நீ வனவாசி இல்லை. நீ ஒரு அரச குமாரன்” என்றான். ரோஷம் மிகுந்த அரசிளங்குமரன் படைக்கலை பயின்று படைதிரட்டிச் சென்று பகையரசன் மீது முற்றுகையிட்டு வெற்றி பெறும்படி உற்சாகம் பெற்றான். “உன் சக்தியை நீ அறிந்து கொள்” என்ற உலகியல் அர்த்தத்தோடு கூட நம் உண்மை சொரூபம் என்ன என்பதை உணரவேண்டுமென்பது வேதாந்தம் காட்டும் பொருள்.
“நீ யார்?” என்ற கேள்விக்கு எட்டு வயது ஆதிசங்கரர் மனித இனத்திற்கு எடுத்துரைத்த உண்மையே ‘நிர்வாண ஷட்கம்’ என்ற சுலோகமாகப் புகழ்பெற்று விளங்குகிறது.
“மனோ புத்யஹங்கார சித்தானி நாஹம்
ந கர்ணம் ந ஜிஹ்வா ந ச க்ராண நேத்ரே |
ந ச வ்யோம பூமிர்ண தேஜோ ந வாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் ||”
பொருள் – மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் எதுவும் நானல்ல. காது, நாக்கு, மூக்கு, கண் எதுவும் நானல்ல. பஞ்ச பூதங்களும் நானல்ல. நான் சிதானந்த ரூபமான சிவம். நான் சிவம்.
குருமார்கள் ஒரே கருத்தையே கூறுகிறார்கள். “நாம் வெறும் ஐந்து கோசங்கள், ஏழு தாதுக்கள் கொண்ட உடம்பு அல்ல” என்று போதிக்கிறார்கள். “ஆடு அல்ல. சிங்கம்” என்று எடுத்துரைக்கிறார்கள்.
ஆதி சங்கரரின் நிர்வாணஷட்கம் கூறும் கருத்தை அனுசரித்து, ‘ஆச்சார்ய புல்லெல ஸ்ரீராமச்சந்த்ருடு’, நாம் பாரதியர்கள் என்று நினைவுபடுத்தும் ‘மஹான் பாரதோஹம்’ என்ற பத்து சுலோகங்கள் கொண்ட ஸ்தோத்திர மாலையைப் படைத்துள்ளார்.
“நாம் எதோ ஒரு இடத்தையோ மதத்தையோ சேர்ந்தவர்கள் அல்ல. நாம் பாரதியர்கள்” என்ற உண்மையை வெளியிடும் இந்த தசகத்தில் எல்லா சுலோகங்களும் இந்த நியாயத்திற்குப் பொருளாக உளளன. அவற்றுள் ஒன்றை இங்கு பார்ப்போம்.
“ந வங்கோ நவாங்கோ நவாஹம் கலிங்கோ
ந வா மத்யதேஸ்யோ மமாராஷ்ட்ரகோ வா
ந வா சைந்தவோஹம் ந வா காமரூப:
நிரஸ்த ப்ரபேதோ மஹான் பாரதோஹம் ||”
பொருள் – நான் பெங்காலிக்காரனோ, ஒரிஸ்ஸாகாரனோ, மத்தியப்பிரதேஷ்காரனோ அஸ்ஸாம்காரனோ மட்டுமல்ல. நான் பாரதியன். மகிமை பொருந்திய பாரத தேசத்தவன்.
இந்த ‘சிம்ஹ, மேஷ நியாயம்’ அளிக்கும் வேதாந்தச் செய்தியை சங்கரர், கீதாசாரியன் மற்றும் பலர் எடுத்துரைத்துள்ளனர். ஜகத்குரு ஆதிசங்கரரின் சீடரான ஹஸ்தாமலகர் இந்த கருத்தை அளிக்கும் ஸ்தோத்திரங்களை இயற்றியுள்ளார். இவற்றுக்கு சாட்சாத் குருவான ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதியுள்ளார் என்பது சிறப்பு.
ஹஸ்தாமலகரின் பிறவி விசித்திரமானது. மரணித்த ஒரு குழந்தையின் உடலில் ஒரு மகா ஞானி பிரவேசித்த சம்பவம் அது. நிரந்தரமான பரகாய பிரவேசம். அந்தக் குழந்தைக்கு ஏழு வயது நிரம்பினாலும் பேச்சு வரவில்லை. கவலை கொண்ட பெற்றோர் ஆதி சங்கரரிடம் அழைத்து வந்தார்கள்.
சங்கரர் சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தார். “ஓ சிசுவே, நீ யார்? யாரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து வந்தாய்? உன் பெயர் என்ன? எங்கு செல்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, அது வரை பேசாத சிறுவன், வசந்த காலம் வந்தவுடன் குயில் கூவத் தொடங்குவது போல, சங்கரரின் எதிரில் பேசத் தொடங்கினான். அதுவே
‘ஹஸ்தாமலக ஸ்தோத்ரம்’. பதினான்கு சுலோகங்கள் கொண்ட வேதாந்த நூல். சங்கரரின் கேள்விகளுக்கு ஹஸ்தாமலகரின் பதில்கள் நமக்காக.
நா ஹம் மனுஷ்யோ, ந ச தேவ யக்ஷௌ
ந ப்ராஹ்மண, க்ஷத்ரிய வைஸ்ய சூத்ரோ
ந ப்ரஹ்மசாரி ந க்ருஹீ வனஸ்தோ
பிக்ஷுர்ண சாஹம் நிஜபோதரூப”
பொருள் – நான் மனிதன் அல்ல. தேவனோ யக்ஷனோ அல்ல. நான் நான்கு வர்ணங்களைச் சேர்ந்தவனும் அல்ல. நான்கு வர்ணாசிரமங்களைச் சேர்ந்தவனும் அல்ல. நான் பிக்ஷுவுமல்ல. நான் சுத்தமான ஞான சொரூபன்.
உன் உண்மை சொரூபத்தை நீ அறிந்து கொள் என்று கூறும் ஸ்தோத்திரம் இது. ‘ஸ்வ ஸ்வரூப’ ஞானமே முக்கியமானது. நான் உடலே என்ற உணர்வு சரியல்ல.
அப்படிப்பட்ட ஞானத்தை அறிவது அவசியம் என்பதை ஒருகதை வடிவில் கூறும் நியாயமே இந்த ‘சிம்ஹ மேஷ நியாயம்’.
தத்வமஸி, அஹம் ப்ரஹ்மாஸ்மி, ப்ரஞ்ஞானம் ப்ரஹ்ம, அயமாத்மா ப்ரஹ்ம என்ற வேத வாக்கியங்களின் சாரத்தைக் கூறும் நான்கு மஹா வாக்கியங்களின் சாரம் இந்த நியாயத்தில் உள்ளது.
ஆத்மவிஸ்ம்ருதி – நம் சுய ஸ்வரூபமான ஆத்மாவை மறப்பது :-
*தன்னம்பிக்கையிழந்த மனிதனுக்கு ஆத்ம ஞானத்தை அளிக்கிறது இந்த நியாயம். இதற்கு உதாரணமாக, ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ‘கேசவராவ் பலிராம் ஹெட்கேவர்’ ஹிந்து சமூகத்தைத் தட்டி எழுப்பிய சம்பவத்தைக் கூறலாம்.
“ஹிந்துர்விசால குண சிந்து ரபீஹலோகே
பிந்தூயதே விகடிதோ ந கரோதி கிஞ்சித் |
தத்ஸம்ஹிதம் கடியதும் ஜனனம் யதீயம்
தம் கேசவம் முஹுரஹம் மனஸா ஸ்மராமி ||
பொருள் – இந்த உலகில் ஹிந்து என்பவன் நற்குணங்கள் நிரம்பியவன். ஆனால் ஹிந்துக்களிடம் ஒற்றுமை இல்லை. அதன் காரணமாக ‘சிந்து’ போன்ற ஹிந்து நீர்த்துளி போல் வாழ்கிறான். அதனால் சாமர்த்தியம் அற்றவனாகிறான். இந்த நிலையில் இருக்கும் ஹிந்துக்களை ஒன்றிணைத்து, அவர்களிடம் இருக்கும் ‘ஆத்ம மறதி’யை நீக்குவதற்காகப் பிறந்தவர் ஸ்ரீ கேசவ் டாக்டர்ஜி. நான் என் மனதில் ஒவ்வொரு கணமும் அவரை சிந்தனை செய்கிறேன்.
ஆத்மாவை மறப்பது என்ற நிலையில் இருந்த ஹனுமனுக்கு ஜாம்பவான் நிஜ சொரூபத்தை எடுத்துரைத்தது போல, நம் தேசத்தை ‘விஸ்வகுரு’ என்ற ஸ்தானத்தில் மீண்டும் நிலைநிறுத்துவதற்குத் தேவையானது ஆத்மஞானம்.
*சீதையைக் கண்டுபிடிப்பதற்காக சமுத்திரத்தைத் தாண்டும் செயலைச் செய்யக் கூடிய சாமர்த்தியம் கொண்டவன் ஹனுமனே என்றுணர்ந்தான் ஜாம்பவான். வாயுபுத்திரனை உற்சாகப்படுத்தித் தூண்டினான். “ஓ வானரங்களில் சிறந்தவனே, பலம் புத்தி, தேஜஸ், தைரியம் என்ற குணங்கள் உன்னிடம் இருப்பது போல வேறு யாரிடமும் இல்லை” என்று அவனுடைய பிறப்பின் ரகசியத்தை விவரித்து, “செயல்படு” என்று ஊக்கமூட்டியவுடன் ஹனுமனிடமிருந்த ‘ஆத்ம மறதி’ விலகியது. “சகார ரூபம் மஹதாத்மனஸ்ததா’ – என்று தன் உடலைப் பெரிதாக்கி, நூறு யோசனை தொலைவுள்ள சமுத்திரத்தைத் தாண்டுவதற்குத் தாயரானான் என்கிறது வால்மீகி ராமாயணம்.
“மாருதஸௌர்யஸ: புத்ர: ப்லவனேனாஸ்மி தத்ஸம:” – வாயுதேவனின் புத்திரனனான நான் பறப்பதில் அவனுக்குச் சமமானவன் என்ற ஆத்ம ஞானத்தை ஹனுமன் பெற்றான்.
“ஆத்மாவை மறப்பது என்ற நோய்க்கு ஆத்மஞானம் என்பதே மருந்து. ஒரு அறிஞர் வம்சத்தில் பிறந்த படித்தவன் தீய சகவாசத்தால் போதை மருத்துக்கு அடிமையாகி ஒரு சாக்கடையின் அருகில் விழுந்து கிடந்தான். அவனுடைய நன்பவன் அவனைப் பார்த்து, “இது உனக்குத் தகாது. எப்படிப்பட்ட உயர்ந்த வம்சத்தில் பிறந்தாய்? அவருக்கு வாரிசான நீ இந்த நிலையில் இருப்பது தவறு” என்று எடுத்துரைத்து புத்தி கூறுவதும் இந்த நியாத்தை நினைவுபடுத்துகிறது.
ஒரு மனிதன், ஒரு குடும்பம், ஒரு சமுதாயம், ஒரு தேசம் தம் வாரிசத்துவ உயர்வை அடையாளம் கண்டு நடந்து கொள்ளுங்கள் என்ற அழைப்பு இந்த நியாயத்தில் உட்பொருளாக உள்ளது.