
ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
இராமேஸ்வரம் கோவிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய ஓய்வு ஊதிய திட்டப்படி கட்ட வேண்டிய தொகையை தற்காலிக ஊழயர் சிவன் அருள் குமரன் கணக்காளர், இணை ஆணையர் துணையோடு முறைகேடாக திருடியது குறித்து சிபிசிஐடி பிரிவால் இராமேஸ்வரம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கமானது 2016இல் துவங்குகிறது.இந்த குற்றச்சாட்டு 2020இல் விசாரணைக்கு வந்தது. ஆக இந்த குற்றத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது. 2000 பக்கங்கள் கொண்ட இந்த குற்ற பத்திரிகையை நீதிபதி படித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளிடம் இருந்து சுமார் ஒரு கோடி மோசடி பணத்தை எப்போது மீட்பார்கள்?
இதுபோல இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு பொருட்காட்சியில் இருக்கும் பாரத கலை பொக்கிஷமான நமது தெய்வங்களின் விக்கிரகங்கள் தெரிய வந்துள்ளன. இவை ஏலம் போடும்போது தான் தெரியவருகிறது என்பது வேதனையானது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஒன்று தமிழக காவல்துறையில் செயல்படுகிறது. ஆனால் அது சுதந்திரமாக செயல்படுகிறதா?என்ற சந்தேகம் எழுகிறது.
விக்ரகங்கள் கிடைக்கும் போது அதனை திருடி கடத்தியவர்கள் யார் யார் என விசாரணை நடைபெறுகிறதா? அந்த விக்ரகங்கள் எந்த திருக்கோயிலுக்கு சொந்தமானவை என்பதும் அது திருடு போனது குறித்து ஏன் புகார் தெரிவிக்கவில்லை என உரிய அதிகாரிகள் மீது வழக்கு போடப்படுகிறதா? என்பது ரகசியமாகவே இருக்கிறது.
பல கோடி மதிப்பிலான நிலங்கள் இடங்கள் மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தம்பட்டம் அடித்து முதல்வரின் ஆன்மிக ஆட்சி என பெருமை பேசினார். ஆனால் அதனை ஆக்கிரமித்து அனுபவித்தவர்கள் யார் யார் என்று தெரிவித்தாரா? அவர்களின் சொத்துக்களை வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்தாரா? இல்லையே! ஏன்? திருடுகிறவனுக்கு அனுபவிக்கும் உரிமை இந்த திராவிட அரசு கொடுத்து மகிழ்கிறதா?
திருக்கோவிலை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலையத்துறை போல ஒரு மோசடி நிர்வாகத்தை வேறு எந்த துறையிலும் பார்க்க முடியாது. மற்ற துறைகளினால் பலனடைபவரிடம் இருந்து லஞ்சம் பெறுவார்கள். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையில் பக்தர்கள் தங்கள் சொந்த பணத்தை கோவிலுக்கு கைங்கர்யம் செய்வதற்கு கூட லஞ்சம் பெறப்படுகிறது என்பது எத்தனை அநியாயம்.
மேலும் குற்ற செயலில் ஈடுபட்டவர்களை விசாரணை முடியும் வரை வேலை நீக்கம் செய்து அவர்கள் வங்கி கணக்கு சொத்து முதலானவற்றை முடக்கி வைக்க வேண்டும்.
ஆனால் அரசியல்வாதிகளைப் போல இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஜாமீன் பெற்ற உடனே அமைச்சரின் செல்வாக்கில் உலா வருவது அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளுக்கு முரணானது. அமைச்சரும் முறைகேடு கடத்தல் வழக்கிற்கு உடந்தையோ என்ற சந்தேகத்தை இத்தகைய செயல்பாடு ஏற்படுத்துகிறது.
எனவே இந்து சமய அறநிலையத்துறையினால் நடக்கும் அனைத்து கிரிமினல் சிவில் வழக்குகளை விரைவாக விசாரித்து உடனடியாக தீர்ப்பு வருவதற்கு மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைத்திட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.





