தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
பல கட்டங்களாக நடந்து வரும் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்னும் சில மாநிலங்களிலும் இல இடங்களிலும் நடக்க வேண்டியுள்ளது. தேர்தல் முடிவு வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதுவரை நடந்த தேர்தல் முறையைப் பார்க்கும் போது சில அம்சங்கள் தெளிவாகின்றன. வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இல்லை. சாதாரணமாக அறுபது சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. சில இடங்களில் ஓரளவு பரவாயில்லை.
வருத்தமளிக்கும் செய்தி என்னவென்றால் தொழில்நுட்பம் பல துறைகளில் வியக்கத்தக்க அளவுக்கு வளர்ச்சியும் சீர்திருத்தங்களும் அடைந்தாலும் தேர்தல் அமைப்பில் தகுந்த அளவு முன்னேற்றத்தை சாதிக்க இயலவில்லை. மத்திய, மாநில தேர்தல் அதிகாரிகளின் உள்ளத் தூய்மையை சந்தேகிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் சரியான வகையில் பல இடங்களில் நிர்வாகம் நடக்கவில்லை என்ற உண்மையை மறுக்க முடியாது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும் பல இடங்களில் மோசடிகள் நடந்துள்ளன. அரசியல்வாதிகளின் அழுத்தத்திற்கு ஆளான போலீசாரும் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. வாக்குச் சாவடி அலுவலர்கள் அச்சம் காரணமாக அக்கிரமங்களைத் தடுக்க முடியாமல் போனார்கள். சில கொடுமைகள் நடந்தேறின.
ஜனநாயக தேசத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் தேர்தல்களை சரிவர நடத்த இயலாமல் போவது வருத்தத்திற்குரியது. பல தொகுதிகளில் வாக்காளர்களின் பெயர்களே காணாமல் போயின. தமக்கு எதிராக வாக்களிப்பவர்கள் அதிமுள்ள இடங்களை முன்பாகவே கணித்து, அவர்களின் பெயர்களை ஓட்டர் லிஸ்ட்லிருந்து நீக்கிவிட்ட செயல்களும் நடந்தேறின.
இனி, கள்ள ஓட்டுகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மத வெறியர்கள் திட்டமிட்டு திருட்டு அடையாள அட்டைகளைத் தயாரித்து இந்தியரல்லாதவருக்கும் அக்கிரமமாக இந்தியாவுக்குள் நுழைந்தவருக்கும் பாதுகாப்பு அளித்து அவர்களுக்கு வாக்குரிமை அளித்தார்கள்.
பலர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு வாக்களிக்க வராமல் போவதால்தான் வாக்குப்பதிவு குறைந்தது என்று இத்தனை காலம் நினைத்து வந்தோம். ஆனால் பலர் ஓட்டுப் போடுவதற்கு சென்ற போது அவர்களின் பெயர்கள் ஓட்டர் லிஸ்டில் இல்லாமல் போனதால்தான் ஓட்டு சதவிதம் குறைந்தது என்ற விஷயம் தெளிவாகப் புரிகிறது.
இப்படிப்பட்ட அக்கிரமங்கள, கொடுமைகள், வாக்காளர் பெயர்கள் காணாமல் போவது போன்றவை ஹைதராபாத், கோயம்பத்தூர், மேற்கு வங்காளம் முதாலான பல இடங்களில் நடந்ததாக அதிகாரப் பூர்வமான செய்திகள் தெரிவிக்கின்றன.
தேச முன்னேற்றம், பாதுகாப்பு, தேச நலன் போன்றவற்றுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து விட்டு, ஓட்டுக்காக மதவாதிகளை திருப்திப்படுத்துவதே நிகழ்ச்சி நிரலாகக் கொண்ட கட்சிகள், மத வெறியைத் தூண்டுவதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக, “குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவருக்கே தேச வளத்தில் முதன்மை உரிமை ஏற்படுத்துவோம் என்றும் ரிசர்வேஷன்களை அவர்களுக்கு மட்டுமே ஒதுக்குவோம்” என்றும் அறிவிக்கின்றன.
உண்மையில் கடந்த பத்தாண்டுகளாக பாரத தேசத்தின் பன்முக வளர்ச்க்கு முயற்சித்து வருபவர்களின் மேல் மதவாதம் என்று அபாண்டத்தைத்தைச் சுமத்தித் தம்முடைய குதர்க்கமான மத தத்துவத்தை செக்யூரிலசம் என்று ஏமாற்றி வருவது எதிர்க்கட்சிகளின் வியூகமாக உள்ளது. தேசத்தைத் துண்டாக்குவோம் என்று முழங்கியவர்களைக் கட்சித் தலைவர்களாக்கி டிக்கெட் கொடுத்து தேர்தலில் நிற்க வைக்கிறார்கள். மீண்டும் மீண்டும் ஜாதிக் கணக்கெடுப்பு, மத முக்கியத்துவம் போன்றவையே தம் வழிமுறை என்று அறிவித்து வருகிறார்கள்.
தேசம் எத்தனை கஷ்டத்தில் இருந்தாலும், பின்தங்கி இருந்தாலும், துண்டு துண்டானாலும் அவர்களுக்கு மறுப்பேதும் இல்லை. எங்கள் மதம் எங்கும் வியாபித்து இருக்க வேண்டும், எங்கள் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் போதும் என்ற கூவும் கும்பல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
வியாபாரத்திற்காகவும் வேலைக்காகவும் பிற தேசங்களில் வசிக்கும் தம் மதத்தைச் சேர்ந்த இந்தியர்களை சொந்தச் செலவில் வரவழைத்து அவர்களைக் கொண்டு தம் மதத்திற்கு அனுகூலமாக ஓட்டளிக்கக் வைக்கிறார்கள்.
அத்தகைய விடாமுயற்சி ஹிந்துக்களுக்கு இல்லை. அதுமட்டுமில்லை. எண்ணற்ற ஹிந்துக்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. சில இடங்களில் ஹிந்து வாக்காளர்களை அச்சுறுத்தி ஓட்டளிக்கக் விடாமல் தடுத்தார்கள்.
இப்படிப்பட்ட விபரீதங்களுக்கு, வெளிநாட்டு வியாபாரிகளும் பாரத தேசத்தின் ஆதிக்கத்தை சகிக்க இயலாத வெளிநாட்டு ஆட்சியாளர்களும் மத நிலையங்களும் முழுஅளவில் உதவி புரிகின்றன.
நம் தேசத் தேர்தல்களின் மேல் உலக நாடுகளின் பார்வை மையம் கொண்டுள்ளது. பாரத நாட்டு முன்னேற்றத்திற்கே தம்மை அர்ப்பணித்திருக்கும் ஆளும் கட்சியின் ஆட்சி முறையைத் தவறாக விமர்சிக்கும் ‘ஒட்டுப்போட்ட’ கட்சிகளும் அவர்களுக்கு ஒத்தூதும் ஊடகங்களும் பொய்ப் பிரசாரம் செய்வதற்கும் பின் வாங்கவில்லை.
என்ன செய்ய வேண்டும்?
உலக அளவில் பல ஜனநாயக நாடுகளில் தேர்தல் நடக்கும் வழிகளை ஆராய்ந்து பார்ப்பதோ, தகுந்த மாற்றங்களைக் கொண்டுவருவதோ இந்திய தேசத்தில் முழமையான அளவில் நடப்பது இல்லை. உலகில் பல நாடுகளில் 92 முதல் நூறு சதவிகிதம் வாக்குப்பதிவு நடக்கையில் சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அறுபது சதவிகிதத்திலேயே உள்ளோம். அதிலும் நேர்மையாக ஒட்டளிக்கும் வாய்ப்பு பல வாக்காளர்களுக்குக் கிடைப்பதில்லை.
தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு வாக்காளர் தம் ஓட்டுரிமையை இழக்காதபடி பல வழிகளை ஏற்படுத்த முடியும். ஆனால் அந்த வழிமுறைகளை எதனால் கடைப்பிடிக்க இயலாமல் இருக்கிறோம்? வங்கி விவகாரங்கள் போன்ற முக்கியமான வழிமுறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது தேர்தல் வழிமுறைகளில் அவற்றை ஏன் எடுத்து வரவில்லை?
சிலர் தேர்தல் தினத்தன்று கட்டாயம் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டி வந்தால் ஒட்டு போட முடியாமல் போகிறார்கள். தொலைவான இடங்களுக்குச் சென்றவர்கள் தகுந்த அடையாள அட்டைகளைக் காட்டி அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த இயலாதா? நூற்றுக்கு நூறு சரியான வாக்குப் பதிவு நடக்கும்படி தேர்தல் அமைப்பின் வழிமுறையைத் திருத்துவது சாத்தியம் இல்லையா? உண்மையான வாக்காளர்களின் பங்களிப்பு எப்போது கிடைக்கும்?
எது எப்படியானாலும் வரப் போகும் தேர்தல் முடிவுகள் தேசத்திற்கும் தர்மத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்று பகவானை பிரார்த்திப்போம்.
(தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ்,
ஜூன், 2024)