பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத தரிசனம் கண்டு, தியானம் செய்து வருகிறார். காவி உடை உடுத்திக் கொண்டு, தவசியாக தவம் செய்து வரும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி உள்ளன.
முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் கடைசி கட்ட பிரச்சாரம் ஓய்வடைந்த நிலையில் வழக்கம்போல் தனிப்பட்ட வகையில் தியானம் செய்வதற்காக நேற்று மாலை குமரிமுனைக்கு வந்தார் பிரதமர் மோடி. அவர் அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு படகில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்றார். பின்னர் மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள பகவதி அம்மனின் பாதம் பதித்த மண்டபத்துக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி வணங்கி மரியாதை செய்தார். ராமகிருஷ்ணா பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் படங்களையும் வணங்கினார்.
பின்னர் பிரதமர் மோடி தியான மண்டபத்துக்குச் சென்று விட்டு திரும்பினார். நேற்று இரவு தனக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தனது தனி அறையில் ஓய்வு எடுத்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் எழுந்த பிரதமர் மோடி குளித்து முடித்துவிட்டு காவி உடைகளை உடுத்திக் கொண்டார். தனது 3 விரல்களால் விபூதியைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டு, அதன் நடுவில் குங்குமத்தையும் வைத்துவிட்டு, முழு அளவிலான பக்தர் கோலத்தில் தெரிந்தார்.
பின்னர் காலை 5 மணி அளவில் தனது அறையை விட்டு வெளியே வந்த அவர் காவி சட்டை, வேட்டி, காவி துண்டு ஆகியவற்றை அணிந்து கொண்டு முற்றும் துறந்த துறவியாகவே தோற்றமளித்தார். கையில் ருத்ராட்ச மாலை ஒன்றையும் வைத்திருந்த அவர் அதனைத் தன் விரல்களால் உருட்டிக் கொண்டே விவேகானந்தர் மண்டபத்தைச் சுற்றி வந்தார்.
மண்டபத்தின் கிழக்குப் பகுதிக்குச் சென்று காலை 5.55 மணி அளவில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபாடு நடத்தினார். அப்போது தனது 2 கைகளையும் மேலே தூக்கி சூரிய பகவானை மனமுருக வணங்கி வழிபட்டார். பின்னர் சொம்பில் இருந்த தீர்த்தத்தை கடலில் அர்க்யம் என ஊற்றினார். இது கங்கை நதியில் இருந்து எடுத்து வந்த புனித தீர்த்தம் என்று கூறப்படுகிறது.
சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி முக்கடல் சங்கமிக்கும் குமரிக்கடல் அழகையும் ரசித்துப் பார்த்தார். பின்னர் விவேகானந்தரின் முழு உருவச் சிலையுடன் கூடிய மண்டபத்துக்குச் சென்ற மோடி, விவேகானந்தர் சிலை எதிரே சம்மணமிட்டு தரையில் தியானம் செய்ய அமர்ந்தார்.
விவேகானந்தரின் சிலையைப் பார்த்து முதலில் வணங்கிய அவர் பின்னர் கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டார். ருத்ராட்ச மாலையை விரல்களால் உருட்டியபடியே மந்திரங்களையும் அவர் சொன்னார். பிறகு தியான மண்டபத்துக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கேயும் துறவிக் கோலத்தில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தார்.
அந்நேரம், தியான மண்டபத்தில் மனதுக்கு இதமான வகையில், மனதை சாந்தப்படுத்தும் ஓம்-பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இந்தக் காட்சிகள் இன்று வீடியோவாக வெளியிடப்பட்டது. இது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியினரும் சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பி வருகிறார்கள்.
பிரதமர் மோடியின் தியானம் நாளை மதியத்துக்கு மேல் நிறைவுறுகிறது. பின், பிற்பகல் 3.30க்கு அவர், கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறார். நாளை பிற்பகலில் தியானத்தை முடித்தபின், திருவள்ளுவர் சிலையைச் சென்று பார்வையிடுகிறார். இதன் பிறகு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானத்தில் தில்லிக்குச் செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் உட்பட அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடல் பகுதியில் கப்பற்படை கப்பலும் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப் படுகிறது.
கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல்களில் விவேகானந்தர் பாறையைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, குமரிக் கடல் பகுதி முழுவதும் நவீன படகுகளில்வந்து கண்காணித்து வருகின்றனர்.