
- K.G. ராமலிங்கம்
ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால் அன்னையை போற்றுகிறார், நாமும் துதிக்கிறோம்….
இன்று பகவத்பாதளின் அவதார தினம்.
“பந்தங்களில் மிக உயர்ந்தது தாய் எனும் பந்தம். அதனை எவராலும் உதற இயலாது. இதற்கு விதிவிலக்கு என்பதே கிடையாது. உலக பற்றை துறந்த பரமேஸ்வரனின் ஸ்வரூபமான ஆதி சங்கரரையும் விட்டு வைக்கவில்லை.
தன் தாயின் தகனத்தை முடித்த மஹான் அப்பொழுது தான் தன் தாயிற்கு அவர்களின் மரணத் தருவாயில் தான் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஒன்றை கூட செய்யவில்லை என்பதை உணர்கிறார். அந்த வேதனையின் வடிகாலாக கங்கையென பிரவாகிக்கிறது மாத்ருகா பஞ்சகம் எனும் ஐந்து ஸ்லோகங்கள்.
இவற்றால் தான் செய்ய தவறிய செயல்களை சுட்டி காட்டி தாயிடம் மன்னிப்பை கோருகிறார். இந்த ஸ்லோகங்களால் ஓர் தாய் தன் கர்பகாலத்திலும், பிரசவிக்கும் தருணத்திலும், அதற்கு பின்பு குழந்தையை ஆளாக்கும் நேரத்திலும் ஏற்கும் துன்பங்களை அழகாக விளக்கி, அவற்றிற்கு தான் பிரதியுபகாரமாக எதுவும் செய்யவில்லை என்று கூறி அதனை மன்னித்து தன்னை ரக்ஷிக்குமாறு வேண்டுகிறார். அவரின் பாதங்களை சரணடைகிறார்.”
மாதா பிதா குரு தெய்வம் – முதல் வணக்கம் தாய்க்குத்தான் – ஒரு மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க அவரிடம் உங்கள் தாய் மொழி என்ன என்று தான் கேட்கிறோம் – தந்தை மொழி என்ன என்று கேட்பதில்லை…
“பெண்குழந்தைகள் தகப்பனார் மீதும் ஆண் பிள்ளகள் தாயார் மீதும் ஆராதித்திருப்பது இப்பவும் தொடர்கிறதா இது தப்பானதா?”
கிராமத்தில் உள்ள ஒரு சொலவடை ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று, அந்த வகையில் பெண் குழந்தை தந்தையிடமும் ஆண் குழந்தை தாயிடமும் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள், சில குடும்பங்கள் இருவரையும் ஒரே பார்வையிலே பார்க்கிறது….
அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம். அதன்பிறகு தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று. உதட்டளவு மட்டுமல்ல உள்ளத்தளவும் உயிரளவும் அம்மா/அப்பா நமது ஒரே உதிரம் தான். ஆனால் ஒரு சில வேறுபாடுகள் சில இடங்களில் குடும்பங்களில் இருக்கத்தான் செய்கிறது.
ஒரு தாய் எப்போது தான் பிறந்த பிறவிப்பயனை அடைகிறாள் என்றாள் அவளுக்கு ஒரு ஆண் மகவை பெற்ற பின்னர் தான் என்பது கண்கூடாக தெரிகிறது அல்லது அதைக் காணலாம்.
நீங்கள் கேட்கலாம் பெண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சி இல்லையா என்று, ஆம், மகிழ்ச்சி அந்த தாய்க்கு இருக்கத்தான் செய்யும், ஆனாலும் சில வேளைகளில் பெண்ணாகப் பிறந்து தான் அனுபவித்த கஷ்டங்களை இவள் எப்படி எதிர் கொள்ளப்போகிறாளோ என்ற ஏக்கம் அவளது அடிமனதில் அடிக்கடி ரீங்காரம் செய்வதை யாரும் அறியமுடியாது, அவளாக பகிர்ந்தாலொழிய….
தாய் தன் பிள்ளையை அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தாலும் பத்திரமாக இருக்கணும்னு என்று மார்பில் அரவனைத்துக் கொள்வாள். இதை நாம் நம் கண்ணெதிரே காணலாம்.
ஆனால் எதோ ஒரு அந்நோந்யமான அபரிமிதமான அன்பும் பாசமும் அன்னைக்கு தன் மகன் மீது எப்போதும் இருக்கத்தான் செய்யும். அவனும் அவளிடம் தான் தனது அபிலாஷைகளை பகிர்ந்து கொள்வான், அவளும் தன் மணவாளனிடம் மகனுக்காக சிபாரிசு செய்வாள்.
பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம் பெயரும் தருணம் உணர்வு பூர்வமானது. ஆனால் அதே வேளையில், பெண்ணைவிட பெண்ணைப் பெற்றவர்களுக்கு குறிப்பாக தந்தைக்கு நேரும் உணர்வுப் போராட்டம் சொற்களில் அடங்காதது.
அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன். ஏனென்றால் அது ஓர் நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டே அவளை புகுந்த வீட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயம். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது. எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ்வாள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது…..
இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும்போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும். அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் ‘என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’ என்றே சொல்லும்.
எனவே, தயவு செய்து என் மகளை மகவைப்போல் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் தந்தை தான் பார்க்காத உலகத்தையும் என் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோளின் மேல் தூக்கி நான் பார்க்காத உலகத்தை நீ பார் என்பவனே தந்தை.
ஆனால் தற்போதய சூழ்நிலையில் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கிறார்கள் அது ஆணோ அல்லது பெண்ணோ எதுவானாலும் சரி.
அவர் உன்னுடைய அருகில் இருக்கும் போது பயன் படுத்திக் கொள்.
தந்தையை போல் உண்மையான நண்பன் இந்த உலகத்தில் யாரும் இல்லை. ஆனால் தாயைப் போல ஒரு ஆசான் ஆசிரியர், ஆண்டவன் அகில உலகிலும் கிடையாது – இது உண்மை… சத்தியம்.
மனதாலும் நினைவாலும் தாயும் அவள்தான் மடிமீது விளையாடும் சேயும் அவள் தான்.
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் வணக்கங்கள்..





