
இராமானுசர் தாம் இவ்வுலகை விட்டுச் செல்லும் நேரம் என்று அறிவித்த போது, சீடர்கள் யாவரும் மனம் தளர்ந்து சோர்ந்து தம் வேதனைகளை வெளியிட்டனர்; இராமானுசர் அவர்களைத் தேற்றி, ‘இரவு உணவு உண்ட பின்பு, அனைவரும் ஒன்றாக வந்து கூடுங்கள்’ என்று கட்டளையிட்டார். அதன்படியே அவர்கள் வந்து அமர்ந்ததும், அவர் தமது உபதேசங்களின் சாரமாக 74 வாக்கியங்களை இறுதி உபதேசமாக அவர்களுக்கு அருளினார். (அவற்றின் சாரம் பின்வருமாறு)
உங்கள் ஆசாரியரைப் போலவே வைணவர்களை மதித்துப் போற்றுங்கள். பழமையான பெரிய ஆசார்யர்களின் உபதேசங்களில் மனமார்ந்த ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளுங்கள். விஷயபோகங்களுக்கு ஒருபொழுதும் அடிமையாகாதீர்கள். உலக ஞானத்தைக் கொண்டு களிப்படையாதீர்கள். இறைவனுடைய மகிமை பற்றியும் அவனுடைய படைப்பின் அதிசயங்கள் பற்றியும் கூறும் நூல்களையே திரும்பத் கிரும்பப் பயிலுங்கள். ஒருவேளை ஆசாரியர்ன் அருளினால் நீங்கள் உத்தமஞானம் பெறுவீர்களானால், விஷயங்களிலுள்ள பற்று, உங்களை விட்டுத் தானே நீங்கிவிடும். உங்கள் உணர்ச்சிகளைப் பற்றற்று வைத்துக் கொள்ளப் பயிலுங்கள்.
பரமனுடைய திருநாமங்களையும் மகிமைகளையும் கேட்டு மகிழ்வது போலவே, பரமனுடைய அடியார்களின் திருநாமங்களையும் மணிமொழிகளையும் செவியுற்று மகிழுங்கள். பரமனுடைய அடியார்களுக்குத் தொண்டு செய்கிறவர்கள் விரைவில் பரமனை அணுகுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, நீங்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும், பரமனுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் தொண்டு இயற்றினாலன்றி, உய்வு பெற முடியாது.
ஒரு வைணவனுடைய வாழ்வு ஏதேனும் தன்னலம் பெறுவதற்காக இருக்கிறது என்று ஒருபொழுதும் கருதாதீர்கள். நீங்கள் எப்பொழுதும் ஆதரிச வாழ்வை நடத்த வேண்டும்.
நாள்தோறும், குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது, உங்கள் ஆசார்யருடைய பெருமை பற்றி தியானம் செய்யுங்கள். நாள்தோறும் சிறிது பொழுதாவது ஆழ்வார்கள் அல்லது ஆசாரியர்களின் அமுத வாக்குகளைப் படியுங்கள். பரமனைச் சரணடைந்த வழியில் செல்லும் பெரியோர்களுடன் பழகுங்கள்.
முக்திக்கு வேறு, வழிகளும் உண்டு என்று சொல்பவர்களின் கூட்டுறவைத் தவிருங்கள். அற்ப லாபங்களுக்கும் சுகபோகத்துக்கும் எப்போதும் பாடுபடுபவர்களுடன் சேராதீர்கள்… என்றார்.
இராமானுசர் இவ்வளவு உபதேசித்த பின், அவருடைய சீடர்கள் தாங்கள் உலகில் வாழும்போது, உடலிலிருந்து உயிர் பிரியும் வரையில், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதுபற்றி நல்லுரை வழங்க வேண்டினர். அதற்கு இராமானுசர் சொன்னார்…
ஸ்ரீபாஷ்யத்தைப் பயின்று அதைப் பிறருக்கும் ஈற்பியுங்கள். இது பரமனுக்கு உகந்த நல்ல தொண்டு. இது முடியாதென்றால் நம்மாழ்வாரும் மற்ற ஆழ்வார்களும் அருளிய திவ்யப் பிரபந்தங்களை நன்கு கற்று, அவற்றை உரிய சீடர்களுக்குக் கற்பியுங்கள். இது முடியாதென்றால், ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள எம்பெருமான்களுக்குத் தொண்டு செய்து வாழுங்கள். இது முடியாதென்றால், திருநாராயணபுரத்தில் ஒரு குடிசை கட்டிக்கொண்டு அங்கே அமைதியுடன் வசியுங்கள். இதுவும் முடியாதென்றால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு, உங்கள் முழு பளுவையும் பரமனிடமோ உங்கள் ஆசார்யரிடமோ ஒப்படைத்துவிட்டு, த்வய மந்திரத்தை உச்சரிப்பதிலேயே ஆழ்ந்திருங்கள்.
இவற்றில் எதுவுமே முடியவில்லை என்றால், ஞானமும் பக்தியும் நிறைந்து பற்றற்றவனாக விளங்கும் ஒரு வைணவனைத் தேடிக் கண்டு, அவன் உங்களுக்கு மனமுவந்து அருள் செய்யும்படி நடந்து கொள்ளுங்கள்; உங்கள் அகங்காரத்தை அறவே துறந்து அவன் சொற்படி நடந்துகொள்ளுங்கள். இதுவே உங்கள் முக்திக்கு வழி.
‘இந்த உலகில் வாழும் காலத்தில், உங்கள் நண்பன் யார், பகைவர் யார் என்பதை விவேகத்துடன் அறிந்து கொள்ளுங்கள். வைணவர்களே உங்கள் நண்பர்கள்: பரமனைப் பகைப்பவர்கள் உங்கள் எதிரிகள்; உலகியல் வழியில் வாழ்பவர்களைப் பொருட்படுத்த வேண்டாம்.
சுவையான தளிர் வெற்றிலையும், நறுமணமுள்ள மலர்களையும், குளிர்ந்த சந்தனத்தையும் பெற்றார்போல, உங்கள் நண்பர்களைக் கண்டு வரவேற்று மகிழுங்கள்.
உங்கள் எதிரிகளைக் காணும்போது, பாம்பையும் புலியையும் நெருப்பையும் எதிர்கொண்டாற்போலக் கருதி, அவர்களிடமிருந்து ஒதுங்குங்கள். உலகியல் வழியினரைக் காணும்போது, கல்லையும் புல்லையும் கண்டாற் போலே. அசட்டையாக இருங்கள். பரமனிடம் சரணடைந்தவர்கள் வாழ வேண்டிய முறை இது. நண்பர்களான வைணவர்களுடன் பழகுவது, உங்களுக்கு ஆன்ம ஒளியை உண்டாக்கும். எதிரிகளிடமிருந்து ஒதுங்கியும், உலகியல் வழியினரிடம் அசட்டையாக இருந்தும் அவர்களுடன் பேசாமலும், அவர்களால் கிடைக்கக்கூடிய உலகியல் இலாபத்துக்காக அவர்களிடம் மதிப்புக் கொள்ளாமலும் வாழுங்கள். ஏனென்றால், இந்த இலாபங்கள் உங்களை விரைவில் பரமனுக்கு எதிரிகளாக்கிவிடும்.
நீங்கள் வேண்டும் எதையும் தாராளமாக அளிக்க, கருணைக் கடலான பரமன் எப்போதும் சித்தமாக இருக்கிறான் என்பதை நினைவில் கொண்டு, உங்கள் பகைவரிடம் எதையுமே யாசிக்காதீர்கள்.!
இவ்வாறு 74 வாக்கியங்களை அளித்த பின், எது தகாது என்றும் ஆறு வாக்கியங்களைக் கொடுத்தார்.
- பரமனின் தூய விக்கிரகங்களை வெறும் கற்கள் என்று நினைப்பது
- தம் ஆசார்யரைச் ‘சாதாரண மனிதன்’ என்று நினைப்பது
- பரமனின் அடியார்களை அவர்கள் பிறந்த சாதிக்கு ஏற்றபடி உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர்’ என்று நினைப்பது (வைணவனின் சாதியை ஆராய்வது),
- எல்லாப் பாவங்களையும் நீக்கி மாந்தரைத் தூயவராக்கும் பகவத் பாகவதர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை ‘வெறும் தண்ணீர் என்று நினைப்பது
- எல்லாப் பாவங்களையும் போக்கி கலியின் வேதனை தீர்க்கும் உபாயமான பகவத் பாகவதர்களின் திருநாமங்களையும் மந்திரங்களையும் வெறும் சப்தங்களாக நினைப்பது,
- உலகமனைத்துக்கும் நாதனான திருமகள் கேள்வனான நாரணனை ‘மற்ற தெய்வங்களுடன் ஒத்தவன் என்று எண்ணுவது
- இத்தகைய எண்ணங்களை உடையவன் கொடும் நரகையே அடைவான்.
பாகவதர்களை ஆராதிப்பது, பகவானை ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது. வைணவனை அவமதிப்பது, எம்பெருமானை அவமதிப்பதைக் காட்டிலும் கொடியது. எனவே எப்போதும் பாகவதர்களை ஆராதிப்பதில் சோம்பல் இல்லாதவராக இருப்பீர்களாக!





