ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பிரிட்டன் செல்கிறார். ஜி7 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
அடுத்த மாதம் பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில், ஜி7 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மே 3 முதல் 6ம் தேதி வரை பிரிட்டனில் பயணம் மேற்கொள்கிறார்.
இதில் பங்கேற்க இந்தியாவிற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கூட்டத்தில் பங்கேற்க வரும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப்பை சந்திக்கிறார்.
அப்போது, கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இந்தியாவுடன் பிரிட்டனும் இணைந்து செயல்படுவது தொடர்பாக கலந்தாலோசிக்கவுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உலக நாடுகள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்த வேளையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.