
ஐபிஎல் 2022 – பஞ்சாப் vs கொல்கொத்தா
K.V. பாலசுப்பிரமணியன்
மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்த எட்டாவது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும் கொல்கொத்தா அணியும் இன்று விளையாடின. டாஸ் வென்ற கொல்கொத்தா அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியை மட்டையாடச் சொன்னார்.
பஞ்சாப் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் தலைவர் மாயங்க் அகர்வால் இந்த ஆட்டத்திலும் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். பானுகா ராஜபக்ஷா ஒன்பது பந்துகளில் 31 ரன் எடுத்து சிறிது நேரம் பஞ்சாப் அணிக்கு நம்பிக்கையூட்டினார்.
அதன் பின்னர் வந்தவர்கள் அதிரடியாக விளையாடினர், ஆனால் நிலைத்து நிற்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக்கான் ரன் எடுக்காமல் அவுட்டானது ஏமாற்றமளித்தது. இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவரைக்கூட ஆட முடியாமல் 18.3 ஓவரில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கொல்கொத்தா அணியின் உமேஷ் யாதவ் நாலு விக்கட் எடுத்தார். வருண் சக்ரவர்த்தி நாலு ஓவர் வீசி 14 ரன் மட்டுமே கொடுத்தார். டெஸ்ட் போட்டிகளின் வல்லுநர் எனக் கருதப்படும் அஜிங்க்யா ரஹானே கொல்கொத்தாவின் தொடக்க ஆட்டக்காரராக ஆடுகிறார். அதிரடியாக ஆடுகிறார். இன்றைய ஆட்டத்தில் கூட அவர் 11 பந்துகளில் மூன்று ஃபோருடன் 12 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். எட்டக்கூடிய எளிதான இலக்கு. எனவே கொல்கொத்தா அணி நிதானமாக ஆடிக்கொண்டிருந்தது.
ஆனால் ராகுல் சாஹார் பந்து வீச்சில் ஏழாவது ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயரும் நித்தீஷ் ராணாவும் ஆட்டமிழந்தனர். எனவே ஒருவிதமான பதற்றம் தொற்றிக் கொண்டது. அப்போது ரசல் ஆட வந்தார். எட்டு சிக்சர், 2 ஃபோருடன் 31 பந்துகளில் 70 ரன் அடித்தார்.
கொல்கொத்தா அணி 14.3 ஓவரில் நாலு விக்கட் இழப்பிற்கு 141 எடுத்து பஞ்சாபை வெற்றி கண்டது. கொல்கொத்தா அணியின் ரன்ரேட் இதனால் அதிகரித்துள்ளது. பத்தாவது ஓவரில் ரசல் இரண்டு சிக்சர் அடித்தார்.
12ஆவது ஓவரில் மூன்று சிக்சர் ஒரு போர் அடித்தார். இதனால் ஆட்டமே மாறிப்போனது. கடைசி இரண்டு ஓவர்களில் மேலும் மூன்று சிகர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். ஆட்ட நாயகனாக உமேஷ் யாதவ் அறிவிக்கப்பட்டார்.