
ஐ.பி.எல் – லக்னோ vs குஜராத்
– K.V. பாலசுப்பிரமணியன் –
ஐபிஎல்லின் 57ஆவது ஆட்டம் புனே கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ, குஜராத் அணிகளுக்கிடையே நடந்தது. குஜராத் அணி (144/4, ஷுப்மன் கில் 63, டேவிட் மில்லர் 26, திவாத்தியா 22, ஆவேஷ் கான் 2/26) லக்னோ அணியை (82 ஆல் அவுட், தீபக் ஹூடா 27, ரஷீத் கான் 4/24) 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஐபிஎல் தொடரில் லக்னோவும் குஜராத்தும் இன்று நடந்த போட்டிக்கு முன்னர் 16 புள்ளிகளுடன் முதலிரண்டு இடத்தில் இருந்தன. ரன்ரேட் அதிகமாக இருந்ததால் லக்னோ முதலிடத்திலும் குஜராத் இரண்டாமிடத்திலும் இருந்தன.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் குஜராத் 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும் லக்னோ 16 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளன. இது ஒரு குறைந்த ரன்கள் அடிக்கப்பட்ட ஒரு போட்டி. முதலில் ஆடிய குஜராத் அணியை 4 விக்கட் இழப்பிற்கு 144 ரன்னுக்குக் கட்டுப்படுத்தியதால் லக்னோ வென்றுவிடும் என அனைவரும் நினைத்திருக்க, லக்னோ அணி 82 ரன்னுக்கு, 13.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.
இன்றைய ஆட்டத்தில் இரண்டு சிறப்பு அம்சங்கள். முதலாவது ஷுப்மன் கில்லின் 63 ரன். ஆனால் இவர் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இரண்டாவது ரஷீத் கான் எடுத்த 4 விக்கட்டுகள். குஜராத் அணி ஆடும்போது 15 ஃபோர் மற்றும் ஒரு சிக்சர் மட்டுமே அடிக்கப்பட்டது.
லக்னோ அணி ஆடும்போது 7 ஃபோர் மற்றும் மூன்று சிக்சர்கள் அடிக்கப்பட்டன. ஷுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இரண்டு அணிகளும் ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. இரண்டு அணிகளுக்கும் இன்னமும் 2 போட்டிகள் மீதம் உள்ளன.