-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இந்தியா, நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி, இந்தூர், 24 ஜனவரி 2023
இந்திய அணி (385/9, ஷுப்மன் கில் 112, ரோஹித் ஷர்மா 101, ஹார்திக் 54, விராட் கோலி 36, டஃப்ஃபி 3/100, டிக்னர் 3/76)
பூவாதலையா வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. ஆனால் இந்திய அணியால் 50 ஓவரில் ஒன்பது விக்கட் இழப்பிற்கு 385 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. நீங்கள் சரியாகத்தான் படிக்கிறீர்கள். ஆமாம் 28ஆவது ஓவர் முடிவில் ரோஹித்தும் கில்லும் ஆட்டமிழந்தபோது இந்திய அணியின் ஸ்கோர் 230. இந்த ரன்ரேட்டில் இந்திய அணி 500 ரன்களுக்குமேல் அடித்திருக்க முடியும். ஆனால் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களின் திறமையான பந்துவீச்சால் இந்திய அணி கடைசி 22 ஓவர்களில் 7 விக்கட் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
ரோஹித். கில் இரிவரும் 22 ஃபோர், 10 சிக்சர்கள் அடித்தனர். இந்தூரின் மைதானம் சிறியது; பந்து தரையோடு வேகமாகப் போகும் அளவிற்கு காய்ந்த மைதானம். எனவே சிக்சர்கள், ஃபோர்கள் பறந்ததில் ஆச்சரியமில்லை.
கடைசியாக கடந்த 2020 ஜனவரி மாதம் ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்திருந்த ரோஹித் ஷர்மா ஒருவழியாக 3 வருடங்கள் கழித்து, சரியாகச் சொன்னால் 507 நாட்கள் கழித்து தன்னுடைய 30ஆவது சதத்தை விளாசி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 3வது வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையும் அவர் சமன் செய்தார். ஒருநால் போட்டியில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 49,
2. விராட் கோலி : 46,
3. ரோஹித் சர்மா : 30,
3. ரிக்கி பாண்டிங் : 30,
4. சனத் ஜெயசூரியா : 28
அதன்பின்னர் விளையாட வந்த விராட் கோலி (27 பந்துகள் 36 ரன்), இஷான் கிஷன் (24 பந்துகள், 17 ரன்), சூர்யகுமார் (9 பந்துகள், 14 ரன்), ஹார்திக் (38 பந்துகள், 54 ரன்), வாஷிங்டன் சுந்தர் (14 பந்துகள், 9 ரன்), ஷர்துள் தாகூர் (17 பந்துகள், 25 ரன்) என நன்றாகவே விளையாடினர். இருப்பினும் ரோஹித், கில் அளவிற்கு இல்லை. 50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கட் இழப்பிற்கு 385 ரன் எடுத்தது.
நியூசிலாந்து அணி முதல் ஓவரிலேயே ஒரு விக்கட்டை இழந்து தனது இன்னிங்க்ஸைத் தொடங்கியது. அதன் பின்னர் கான்வே (100 பந்துகளில் 138 ரன்), நிக்கோலஸ் (40 பந்துகளில் 42 ரன்), மிட்சல் (31 பந்துகளில் 24 ரன்) எடுத்தனர். அந்த அணி 25 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் ஷர்துள் தாகூர் தன்னுடைய அடுத்தடுத்த இரண்டு ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை எடுத்து இந்திய அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டுவந்தார். அதன் பின்னர் ப்ரேஸ்வெள் (26 ரன்), சாண்ட்னர் (34 ரன்) ஆகிய இருவரும் நன்றாக விளையாடியபோதும் நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் 295 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் தக்கூர், குல்தீப் யாதவ் இருவரும் தலா 3 விக்கட்டுகளையும், சாஹல் 2 விக்கட்டுகளையும் ஹார்திக், மாலிக் இருவரும் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியுடன் இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இன்றைய ஆட்ட நாயகனாக ஷர்துல் தாக்கூர் அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.