
முரசொலி பத்திரிகை அலுவலகம், பஞ்சமி நிலமா இல்லையா என்பதை அறிய விசாரணைக்கு ஆஜரான திமுக., மற்றும் பாஜ., ஆதாரங்கள் தொடர்பாக மாறி மாறி விமர்சனங்களை இன்று ஊடகங்களில் தெரிவித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது!
சென்னையில் முரசொலி நாளிதழ் அலுவலகம், பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது’ என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து இந்தச் சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, அது பஞ்சமி நிலத்தில் அமையவில்லை என்றால், மூலப் பத்திரத்தைக் காட்டுங்கள் என்று சமூகத் தளங்களில் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், திமுக., தரப்பு அடுத்த இரு நாட்களில் நிலத்தின் பட்டா ஆவணங்களை வெளியிட்டது. இருப்பினும், ‘மூலப் பத்திரத்தை வெளியிடுங்கள்’ என, ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
ராமதாஸ் கோரிக்கையை அடுத்து, முரசொலி நிலம் பஞ்சமி நிலமா என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என பாஜக., மாநில செயலாளர் மதுரை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் எஸ்சிஎஸ்டி ஆணையத்தில் புகார் மனு அளித்தார். அவருடன் பாஜக.,வைச் சேர்ந்த தலித் இயக்கத் தலைவரான தடா பெரியசாமியும் ஒரு புகார் அளித்தார்.

இதை அடுத்து, இரு தரப்பும் தங்கள் விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது. அதை முன்னிட்டு, இரு தரப்பில் இருந்தும் ஆதாரங்களுடன் இன்று விசாரணைக்கு ஆஜரானார்கள்
திமுக., சார்பில் ஆஜரான ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பின்னர் கூறிய போது…
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் ஆஜரானோம். ஆனால் எங்கள் மீது புகார் கொடுத்த சீனிவாசன் மற்றும் அரசு தலைமைச் செயலர் ஆவணங்களை அளிக்க கால அவகாசம் கேட்டனர். விசாரணைக்கு வாய்தா கேட்டதன் மூலமே புகார் அளித்தவர்களின் நிலையை தெரிந்து கொள்ளலாம். அவர்களால் எந்த ஆதாரங்களையும் கொடுக்க முடியவில்லை.
அது பஞ்சமி நிலமா இல்லையா என்பதை அரசால் ஒரு மணி நேரத்தில் கண்டறியலாம். ஆனால், ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர். புகார் தெரிவித்தவர் மீதும், இந்தப் பொய்யை முதலில் சொன்ன பாமக., நிறுவனர் ராமதாஸ் மீதும் அவதூறு வழக்கு தொடருவோம் … என்று கூறினார்.
ஆனால், அதன் பின்னர், இந்த ஆணையத்தில் புகார் அளித்திருந்த பேராசிரியர் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எங்கள் தரப்பு ஆவணங்களை நாங்கள் ஆணையத்தில் கொடுத்துள்ளோம். குறிப்பாக, தடா பெரியசாமி வைத்திருந்த பழைய ஆவணங்களின் அடிப்படையில், மாநில அரசு விசாரித்து அறிய கால அவகாசம் கேட்டுள்ளது. எனவே இது விவகாரத்தில் இடைக்கால அறிக்கை அளிக்கவிருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. எங்களிடம் இருந்த ஆதாரங்களை ஆணையத்திடம் அளித்துவிட்டோம். அது பஞ்சமி நிலம் இல்லை என்பதை திமுக., தரப்புதான் நிரூபிக்க வேண்டும்! திமுக., தரப்பு இன்று ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை. வெறும் ஒரு பேப்பர் மட்டுமே தகவல்களை எழுதி தாக்கல் செய்தார்கள்… என்றார்.
இதனிடையே, திமுக., தரப்பு ஆர்.எஸ். பாரதியின் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் குறித்து தடா பெரியசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதாவது…
முரசொலி பஞ்சமி: “1932 ஆம் ஆண்டு பஞ்சமி நிலம் வழங்கியதற்கான கெஜட் ஆவணங்களை சமர்ப்பிக்க, அத்தகவல்களை வைத்துக்கொண்டு தமிழக அரசு கால அவகாசம் கேட்டுள்ளனர்.” – தடா பெரியசாமி பதிவு
இன்று-தேசிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில் முரசொலி அலுவலக மூலபத்திரத்தை ஸ்டாலின் தரப்பில் சமர்ப்பிக்க வில்லை. பஞ்சமி நிலம் சம்பந்தமாக ஆணையம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்று திமுக தரப்பில் வாதிட்டார்கள்.
தமிழக அரசு சார்பில் 1974 ஆம் ஆண்டு சில தகவல்களை வைத்திருந்தார்கள் மற்றும் சென்னை மாவட்டத்தில்_ம் பஞ்சமி நிலமே இல்லை என்று தகவல் கூறினார்கள்.
பிறகு என்னிடமிருந்த 1932 ஆம் ஆண்டு பஞ்சமி நிலம் வழங்கியதற்கான கெஜட் ஆவணங்களை சமர்ப்பித்தேன். அதை ஏற்றுக்கொண்ட ஆணையம், அத்தகவல்களை சீல் வைத்து தலைமை செயலாளரிடம் கொடுத்து அரசிடம் பதில் கேட்டது. பிறகு அத்தகவல்களை வைத்துக்கொண்டு தமிழக அரசு கால அவகாசம் கேட்டுள்ளனர்.
- தடா பெரியசாமி