திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அம்பூர்பேட்டை செங்குந்தர் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி அண்ணாமலை (80). இவரின் மனைவி லட்சுமியம்மாள் (70). இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும், ஏழு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
தம்பதியர் இருவரும் மகன் வீட்டில் வசித்து வந்தனர். மகள்களும், பேரக்குழந்தைகளும் அடிக்கடி வந்து இருவரையும் பார்த்துவிட்டுச் செல்வார்கள். பெரிய அளவில் சொத்துகளை சேர்த்து வைக்கவில்லை என்றாலும், முத்தான பேச்சுகளால் குடும்பத்தையே கட்டி வைத்திருந்தனர் அண்ணாமலை – லட்சுமியம்மாள் தம்பதி.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு அண்ணாமலை சைக்கிள் ஓட்டிச்சென்றபோது தவறி விழுந்துள்ளார். அதில், அவருக்குக் காயம் ஏற்பட்டு மெல்ல மெல்ல உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.
படுத்த படுக்கையாகிவிட்ட கணவர் அண்ணாமலையை அருகிலிருந்தபடியே கவனித்துக்கொண்டார் லட்சுமியம்மாள். நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாக, லட்சுமியம்மாள் பதறிப்போனார். ”என்னை மனதார தாங்கியவள் என் மனைவி. அவளை என் மூச்சு உள்ளவரை மார்பில் சுமக்க வேண்டும்” என்று சொல்லுவாராம் அண்ணாமலை.
இந்நிலையில், நேற்று அதிகாலை தூக்கத்திலேயே அண்ணாமலை திடீரென மரணித்துவிட்டார். அதிர்ச்சியில் கணவன் மார்பில் தலை சாய்த்து கண்ணீர் சிந்தினார் லட்சுமியம்மாள்.
சிறிது நேரத்தில் அவரும் இறந்துவிட்டார். கூடியிருந்த குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இருவர் உடலுக்கும் இணைந்தபடியே இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்டன.
மனதார தாங்கியவளை மார்பில் சாய்த்துக்கொண்டே தன் இறுதிப் பயணத்தையும் முடித்திருக்கிறார் அண்ணாமலை.