ஜல்லிக்கட்டு நிலையை தெளிவாக்குங்கள்: மத்திய மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை:
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த ஆண்டு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டாவது நடத்தப்படும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், தில்லியில் நடைபெறும் அரசியல் நகர்வுகள் இந்நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு பதிலாக சிதைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இவை ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கின்றன.
 
தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி தடை விதித்தது. தமிழக அரசின் சார்பில் உடனடியாக  சீராய்வு மனு தாக்கல் செய்து, காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்பதை விசாரணையின் போது  நிரூபித்திருந்தால் கடந்த ஜனவரி மாதமே ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தியிருக்க முடியும். ஆனால்,  19.05.2014 அன்று மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்த தமிழக அரசு, அதன்பின் 8 மாதங்கள் ஆகியும் கடந்த ஜனவரி மாதம் வரை அம்மனுவை விசாரணைக்கு கொண்டு வரவில்லை. அதனால் தான் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியவில்லை. அதன்பிறகாவது மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு கொண்டு வந்திருந்தால் அடுத்த மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியும். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
 
மற்றொரு புறம், காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி சட்டம் இயற்றினால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்பதால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. வரும் 23 ஆம் தேதியுடன் முடிவடையும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த எந்தத் தடையும் இல்லை. ஆனால், கூட்டத் தொடர் முடிவடைய இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஜல்லிக்கட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை கூட இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அமைச்சரவை கூடி ஒப்புதல் அளித்து, அதன்பின் 2 அவைகளிலும் சட்டத் திருத்த முன்வடிவை 3 நாட்களில் நிறைவேற்றுவது சாத்தியமற்றது.
 
நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டால் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் தெரியும். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தொடர்ந்து கூறி வந்தார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனும் இதே கருத்தை தெரிவித்து வந்தார். இதற்கெல்லாம் மேலாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கடந்த 17 ஆம் தேதி பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சந்தித்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை ஏற்ற பிரதமரும், இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். எனினும் அந்த வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் கண்களுக்கு புலப்படவில்லை.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்த சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசுக்கு  ஓராண்டுக்கும் மேலாக அவகாசம் இருந்தது. ஆனால், அதை அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. மற்றொருபுறம் ஜல்லிக்கட்டு தொடர்பான சிக்கலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல தமிழக அரசு நடந்து கொள்கிறது. கடந்த ஓராண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக  தமிழக முதலமைச்சர் ஒரே ஒரு முறை மட்டும் தான் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்திருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை இம்முறை கண்டிப்பாக நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் அலட்சியமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வாய்ப்பில்லா விட்டாலும் அவசர சட்டத்தை கொண்டு வந்தாவது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும். இதுகுறித்த தங்கள் நிலையை இரு அரசுகளும் அறிவிக்க வேண்டும்.
ஒருவேளை வரும் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டால், அடுத்த ஆண்டு தேர்தலில்  தமிழக மக்கள் கடுமையான பாடம் புகட்டுவார்கள்.